“ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட படம் பெரிய அளவில் இருக்கும்” - ‘லியோ’ குறித்து ரத்னகுமார்

By செய்திப்பிரிவு

‘உங்கள் எதிர்பார்ப்பை விட படம் பெரிய அளவில் இருக்கும்” என விஜய்யின் ‘லியோ’ படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ரத்னகுமார் ‘லியோ’ படம் குறித்து பேசுகையில், “நீங்கள் கேட்ட எல்லா அப்டேட்டும் கொடுத்துவிட்டார்கள். இனிமேல் படம் எடுத்த பிறகுதான் வித்தியாசமாக யோசித்து மீண்டும் ஒரு அப்டேட்டை கொடுக்க முடியும். இப்போதைக்கு படக்குழு காஷ்மீரில் உள்ளது. படப்பிடிப்பு சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்பை பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள். படம் அதைவிட பெரிதாக இருக்கும்.

இது லோகேஷ் கனகராஜின் யூனிவர்சில் வருமா, இல்லையா என்பதை விரைவில் அறிவிப்பார்கள். இப்போதைக்கு படம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது” என்றார்.

அவரிடம் ‘விஜய்யின் படங்களின் தலைப்பு ஆங்கிலம் கலந்திருக்கிறதே?’ என கேட்டதற்கு, “இதை ஒரு பான் இந்தியன் படமாக கொண்டு செல்கிறார்கள். அதனால் படத்தின் தலைப்பு எல்லோருக்கும் புரியும் வகையிலும், அதேசமயம் சுருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ‘லியோ’ என பேர் வைத்திருக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, “நான் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக படம் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். அதைத்தாண்டிய நிறையவே இருக்கிறது. வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது. நானே சென்னையில் தான் இருக்கிறேன். 2-3 நாள்களில் காஷ்மீர் செல்வேன். இது தான் என்னுடைய அப்டேட்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE