ரன் பேபி ரன் - விமர்சனம்

By செய்திப்பிரிவு

மருத்துவ மாணவி சோஃபியா (ஸ்ம்ருதி வெங்கட்), கல்லூரிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கிறார். அவரது தோழி தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னைத் துரத்தும் ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க, வங்கி ஊழியர் சத்யாவின் (ஆர்ஜே பாலாஜி) உதவியை நாடுகிறார். உதவும் சத்யா, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இந்தப் பிரச்சனையில் சிக்கிய கார் ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, அதற்கான காரணத்தைத் துப்புத் துலக்கும் காவல்துறை, சத்யாவையும் நெருங்குகிறது.

இதனால், சத்யாவைக் கொல்ல முயற்சிகள் நடக்கின்றன. அவருக்கு என்ன ஆனது? தாரா யார்? சோஃபியாவின் இறப்புக்கு என்ன காரணம்? என்பதற்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் நிகழும் மர்ம மரணங்கள், தொடர் சங்கிலியாக அரங்கேறும் நிகழ்வுகள் மூலம் திடீர் திருப்பங்களுடன், கொஞ்சம் கொஞ்சமாகத் திரையை விலக்கி உண்மையைச் சொல்லும் திரைக்கதை உத்தியைப் பின்பற்றி இருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். இந்த உத்தி, படத்தின் பெரும்பகுதியை மர்மத்துடனும் நகர்த்தி அடுத்தது என்ன எனும் ஆர்வத்தைத் தக்க வைக்க உதவி இருக்கிறது.

முதல் பாதியில், ஒரு சடலத்தை அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கும் நாயகனின் பதட்டம்பார்வையாளரையும் தொற்றிக்கொள்கிறது. அடுத்தடுத்தத் திருப்பங்கள் திரைக்கதைக்குப் பரபரப்பு கூட்டுகின்றன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல்இந்த மர்மமே சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. யார் குற்றவாளி என்பதைத் தெரிவிக்கும் இறுதிக் கட்டத்துக்குச் செல்வதற்குத் தேவைக்கு அதிகமாகவே திரைக்கதையை இழுத்து நீட்டியிருப் பதால் இறுதிக் காட்சிகளில் ஆர்வம் காட்ட முடியவில்லை.

பலரை அடித்துத் தப்பிப்பது போன்ற மிகை நாயகக் காட்சிகளும் இந்தக் கதைக்குப் பொருந்தவில்லை. கொலைக்குச் சொல்லப்படும் காரணம் மருத்துவக் கல்வி தொடர்பான முக்கியமான குற்றத்தை அம்பலப்படுத்துகிறது. ஆனால் அதை இன்னும் விரிவாகச் சொல்லியிருந்தால் உரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தன் வழக்கமான பாணிக்கு நேரெதிரான பாத்திரத்தில் ஆர்ஜேபாலாஜி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பதட்டத்தையும் குழப்பத்தையும் குற்ற உணர்வையும் கண்களிலும் உடல் மொழியிலும் அழகாக வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார். கவுரவத்தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் காதலியாக இஷா தல்வார் கொடுத்த வேலையைச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஜோ மல்லூரி வித்தியாசமான பாத்திரத்தில் கவர்கிறார். மகனுக்கு ஆறுதல் சொல்லும் காட்சியில் ராதிகா, தன் அனுபவமுத்திரையைப் பதிக்கிறார். ஸ்ம்ருதிவெங்கட், ஹரீஷ், நாகினீடு,பகவதி பெருமாள் என பிரபல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான கதாபாத்திரங்கள் வலிமையாக அமைக்கப்படவில்லை.

சாம் சி.எஸ் இன் பின்னணி இசை திரைக்கதையின் மர்மத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. குற்றத்தைத் தொடக்கக் காட்சியில் காண்பித்துவிட்டு குற்றவாளியையும் குற்றத்துக்கான காரணத்தையும் இறுதிக் காட்சியில் தெரிவிக்கும் வகையிலான த்ரில்லர் பட ரசிகர்களை இந்தப் படம் கவரக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE