ரன் பேபி ரன் Review: த்ரில்லர் கதைக்களம் திருப்தி அளித்ததா?

By கலிலுல்லா

பணத்துக்காக விற்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை த்ரில்லர் கதைக்களத்துடன் சொன்னால் அது ‘ரன் பேபி ரன்’.

மருத்துவக் கல்லூரி மாணவியான சோஃபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுகிறார். அவரது நெருங்கிய தோழியான தாராவை (ஐஸ்வர்யா ராஜேஷை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் (ஆர்.ஜே.பாலாஜி) அடைக்கலம் கோருகிறார். முதலில் மறுக்கும் சத்யா பிறகு வீட்டில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொள்கிறார். யார் இந்த தாரா? அவரை எதற்காக யார் தேடுகிறார்கள்? அவரைக் காப்பாற்ற துணியும் சத்யா என்னென்ன சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறார்? இதுதான் திரைக்கதை.

படம் தலைப்பிற்கு ஏற்றபடி தொடங்கியதும் எந்தவித சமரசமுன்றி ஓட்டம் பிடிக்கிறது. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையுடன் ஒவ்வொரு திருப்பங்களும் பிணைந்து த்ரில்லருக்கான தீனியை தாராளமாக திரையில் தெளிக்கின்றன. குறிப்பாக, சில இடங்களில் காட்சிகளை விட, பின்னணி இசையே ஒருவித பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி கதைக்குள் நுழைக்கிறது. வயலினின் வேகத்தையும், காட்சிகளையும் வேகத்தையும் பொருத்தி முதல் பாதியில் விறுவிறுப்பான திரையனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்.

இடைவிடாத பேச்சும், டைமிங் காமெடியிலும் பார்த்து வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு இயல்புக்கு மாறான லிமிடெட் வசனங்களும், காமெடியற்ற களமும் பொருந்துகின்றன. சீரியஸான, பதற்றமான முகபாவனைகளாலும், ஒரு மரணத்தை பார்த்ததும் திடுக்கிடும் காட்சிகளிலும் கடந்த கால நடிப்பிலிருந்து முன்னேறியிருக்கிறார். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார் இருவரும் பெரிய அளவில் வேலையில்லை; இருப்பினும் தங்களுக்கு கொடுத்த வேலைக்கு நியாயம் சேர்க்கின்றனர். தவிர ராதிகா, விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியான், தமிழரசன் உள்ளிட்ட ஏராளமானோர் படத்திலிருந்தும் அவர்களுக்கான கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படவில்லை.

முதல் பாதியில் விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும் படம், இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்க்கும் தருணங்களில் தடுமாறுகிறது. மெரிட்டில் உயர் கல்வி படிக்கும் ஆதரவற்ற மாணவர்களை பணம் படைத்தவர்களுக்காக அங்கிருக்கும் துரத்தும் அரசியல் குறித்து பேசும் படம், அதைத் தகவலாக சொல்கிறது.

முதல் பாதியின் முடிச்சுகள் இரண்டாம் பாதியிலும் நீளும்போது, ‘இதுக்கு மேல முடியாது’ என்பது போல ஒரு கட்டத்தில் அயற்சியை தொற்றிக்கொள்கிறது. பிறகு அந்த முடிச்சு அவிழும்போது அதற்கான பின்புலக் கதை பலமில்லாமல் இருப்பதும், கதையின் கரு வெறும் வாய்மொழியில் வசனங்களாக கடப்பதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தவிர, படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. ஆனால், அவர்களின் தேவை படத்தில் எழாத வண்ணம் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதுடன், சிறுபான்மையினர் ஒருவரை இறுதியில் குற்றவாளியாக காட்ட வேண்டிய அவசியமும் புரியவில்லை. யுவாவின் டாப் ஆங்கிள் ஒளிப்பதிவும், சாம்.சிஎஸின் பின்னணி இசையும் த்ரில்லர் காட்சியனுபவத்திற்கு உறுதியளிக்கின்றன.

மொத்தத்தில், முதல் பாதியில் விறுவிறுப்பாக ரன்னராக இருந்த பேபி, இரண்டாம் பாதியில் வின்னராக இருக்கும் என எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு ‘கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்’ மூச்சு வாங்கியிருக்கிறது. நீங்கள் த்ரில்லர் கதை விரும்பியாக இருந்தால் உங்களுக்கு படம் உகந்ததாக இருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்