வாரிசு, துணிவு, பதான்... 2023-ல் இந்திய திரைத் துறை வர்த்தகத்துக்கு சிறப்பான தொடக்கம்!

By கலிலுல்லா

நடப்பு ஆண்டின் முதன் மாதம் தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு மட்டுமின்றி, இந்திய சினிமாவுக்கே சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. அது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழ் சினிமா: மிகவும் எதிர்நோக்கியிருந்த இரு பெரும் நடிகர்களின் படங்கள், அதுவும் ஒரே நாளில் வெளியாகின. பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 11-ம் தேதி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களும் உலக அளவில் ரூ.300 கோடியை நோக்கி வசூலில் முன்னேறி வருகின்றன. வணிகத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும், ‘வாரிசு’ கன்டென்டில் எந்தப் புதுமையில் இருந்திடவில்லை. அஜித்தின் ‘துணிவு’ வித்தியாசமான ஒரு முயற்சியை முன்னெடுத்து கன்டென்டில் தொடக்கத்தை கொடுத்துள்ளது.

இந்த ஆண்டின் மிகப் பெரிய வசூல் கணக்கை இந்த இரண்டு படங்களும் தொடங்கி வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அழுத்தமான கன்டென்டுகளை இந்த ஆண்டின் அடுத்தடுத்த படங்கள் கொடுக்கும் என நம்பி எதிர்பார்க்கலாம்.

திரைப்படங்களை தவிர்த்து, இணைத் தொடரை எடுத்துக்கொண்டால் தமிழ் இணைய தொடர்களில் ஜீ5 ஓடிடியில் வெளியான ‘அயலி’ புதிய மைல்கல்லை உருவாக்கியிருக்கிறது. நடைபழகும் தமிழ் வெப் சீரிஸ்களில் பலவும் க்ரைம் தடங்களிலேயே பயணித்து விறுவிறுப்பை மட்டுமே முதலீடாக்கி ‘ராஜேஷ்குமார்’ நாவல் அனுபவங்களை கொடுத்திருந்தன. தற்போது அந்த விதியை மாற்றி எழுதி தமிழ் வெப் சீரிஸ்களுக்கு புதிய ஃபார்முலாவை அறிமுகப்படுத்தி ஓரடி முன்நகர்த்தி சென்றிருக்கிறது ‘அயலி’. இந்த ஆண்டின் சிறப்பான வெப் சீரீஸ் தொடக்கம் இது.

பாலிவுட்: பாலிவுட்டுக்கு பெரும் சோதனை மிகு ஆண்டாக கழிந்தது 2022. வசூல் ரீதியாக எந்தப் பெரிய நடிகர்களின் படங்களும் அங்கே எடுபடவில்லை. எதிர்பார்த்து வெளியான படங்களில் விஎஃப்எக்ஸ் திரை அனுபவத்தால் ‘பிரம்மாஸ்திரா’ வசூல் ரீதியாக ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதுவும் கன்டென்ட்டில் கை நழுவியது. லால் சிங் சத்தா ‘பாய்காட்’ வெறுப்பு பிரசாரத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான நஷ்டத்தையும் சேர்த்து ஈடுகட்டும் வகையில் 5 நாட்களில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது ஷாருக்கானின் ‘பதான்’. 4 வருடங்களுக்கு பின் திரையில் ஷாருக்கான். ஒரு வருடத்திற்கு பின் வசூல் கொழிக்கும் படம். இந்த இரண்டு நன்மைகளையும் பாலிவுட்டுக்கு அள்ளித்தந்த கையோடு நல்ல தொடக்கமாகவும் அமைந்துள்ளது இந்த ஆண்டின் முதல் மாதம். விரைவில் ‘பதான்’ ரூ.1,000 கோடியை அடிக்கும் என கணிக்கப்படுகிறது.

தெலுங்கு: சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’, பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டு படங்களும் உலக அளவில் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்து வருகின்றன. வணிக ரீதியாக தெலுங்கு திரையுலகத்திற்கு இந்த ஆண்டு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. கன்டென்டில் ‘வால்டர் வீரய்யா’வில் சில பல முன்னேற்ற மாற்றங்கள் தென்படுகின்றன.

மலையாளம்: ‘ஆயிஷா’ என்ற பெண் மைய படத்தை கொண்டு தொடங்கியிருக்கிறது. கூடவே, மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வசூலைக் குவிக்கும் படங்கள் வர இருந்தாலும், மல்லுவுட்டின் ஆஸ்தான களமான கன்டென்டை பொறுத்தவரை வழக்கம் போல இந்த மாதம் நல்ல தொடக்கம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE