துணிவு Review: மாஸ், மெசேஜ், ஹெய்ஸ்ட்... ‘நிறைவு’ கிட்டியதா?

By கலிலுல்லா

சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன்.

சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கி கொள்ளையடிக்க நினைக்கிறார்? அங்கிருக்கும் பணம் யாருடையது? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மெசேஜுடன் கலந்த திரைக்கதையில் சொல்லும் படம்தான் ‘துணிவு’.

வெள்ளை நிற காஸ்ட்யூம், நேர்த்தியாக வளர்ந்த தாடி, தேவைக்கு அதிகமில்லாத தலைமுடி என வயதுக்கேற்ற தோற்றத்தில் ஸ்மார்ட் லுக்கில் ஈர்க்கிறார் அஜித். ‘ஒன் மேன் ஷோ’வாக படம் நெடுங்கிலும் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் அசத்துகிறார்; அதேசமயம் ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் ‘பீஸ்ட்’ மோடில் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார். அஜித்தின் சின்னச் சின்ன நடன அசைவுகளும் (குறிப்பாக மைக்கல் ஜாக்சன் ஸ்டெப்) அதற்கேற்ற பின்னணி இசையும் ரசிக்க வைப்பதுடன் மொத்த திரையரங்கையும் அதிரவைக்கிறது.

கண்மணியாக மஞ்சு வாரியர் வழக்கமான ரொமான்ஸ் ஹீரோயினாக இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகள் மூலமாக கவனம் பெறுகிறார். அழுத்தமான நடிப்புடன் அஜித்துக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி பொருந்திப் போகிறது. தவிர தர்ஷன், ஜி.எம்.சுந்தர், சமுத்திரகனி, ஜான்கொக்கேன், ‘பக்ஸ்’ பகவதி, அஜய் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். ‘மைபா’வாக நடித்துள்ள மோகனசுந்தரம் தனது அசால்ட்டான உடல்மொழி, வசனங்கள் மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். ‘மகாநதி’ ஷங்கருக்கான கதாபாத்திரம் பொருந்தவில்லையோ என்ற உணர்வும் எழுகிறது.

இப்படத்தின் வாயிலாக இயக்குநர் ஹெச்.வினோத் சொல்ல முயன்றிருக்கும் கருத்து முக்கியமானது. இஎம்ஐ முதலானவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள், அவர்களை முதலீடாக்கி காசு பார்க்கும் வங்கிகள், இவர்களுக்கிடையிலான மார்க்கெட்டிங் ஊழியர்கள், அவர்களின் டார்கெட் டார்ச்சர் என பணத்தை அச்சாணியாக கொண்டு சுழலும் இந்த ரோலர் கோஸ்ட் பார்வையாக விரிகிறது படம்.

‘மனுச ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் அவன் மனுசனாவே இருக்கான்’ மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் வசனங்கள் சில வரிகள் கவனிக்க வைக்கின்றன. வங்கிகள் கையாளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதற்கான அவர்களின் எழுத்துரு அளவு, பங்குச்சந்தையை கைகாட்டி நகரும் அலட்சியப்போக்கு உள்ளிட்டவற்றை தோலுரிக்கும் விதமான காட்சி ஒன்று அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் அதீத ஆக்‌ஷன் காட்சிகள், தெறிக்கும் தோட்டாக்களுடன் நகர்கிறது. ஆரம்பத்தில் ரசிக்க வைக்கும் அந்த தோட்டாக்களின் சத்தம் ஒரு கட்டத்தில் இரைச்சலாக மாற, விறுவிறுப்பு மட்டுமே மிஞ்சி கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது. அதுவரை கட்டி எழுப்பப்பட்ட பில்டப்பிற்கு கதை சொல்லியாக வேண்டிய இரண்டாம் பாதியில் அஜித்துக்கான பின்புலக் கதை படு சுமார் ரகம். அதற்கடுத்து வரும் மற்றொரு பின்புலக் கதையானது, கருத்தை சொல்லியாக வேண்டுமே என செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல துருத்தி நிற்கிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ரசிகர்களுக்கே ‘துணிவு’ தேவைப்படுகிறது. சில இடங்களில் வகுப்பெடுக்கும் உணர்வும் எழுவதை அடக்க முடியாமல் போகிறது.

‘இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ என வடமாநில காவல் படையிடம் பேசும் அரசியல் வசனங்களும், வங்கிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசின் முகத்தையும் படம் பதிவு செய்கிறது. அத்துடன் திருநங்கை ஒருவரை அவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தது நெருடல். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் அதீத ஹீரோயிசமும், திகட்டும் ஆக்‌ஷனும் படம் முடிந்தும் முழுமையில்லாத உணர்வை கொடுக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் கதைக்கு தேவையில்லாத இடைச்செருகல். பின்னணி இசை காட்சிகளுக்கு அடர்த்தி கூட்டி, சில இடங்களில் கூஸ்பம்ப்ஸ் தருணங்களை உருவாக்குவது பார்வையாளர்களுக்கு விருந்து. நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை கூட்ட உதவுகின்றன.

மொத்தத்தில் அடர்த்தியான கருத்தை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் ஹீரோ ஒருவரின் வழியாக சொல்ல முனைந்திருக்கிறது படம். ஆனால் பிசகிய திரைக்கதையால் படத்தை முழுமையாக பார்த்து முடிக்க ‘துணிவு’ தேவைப்படத்தான் செய்கிறது.

வாசிக்க > வாரிசு Review: பாட்டு, டான்ஸ், ஃபைட், சென்டிமென்ட் எல்லாம் இருக்கு. ஆனால்..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்