வி3 Review: பாலியல் வன்கொடுமை குற்றத்தை அலசும் இந்தப் படம் எப்படி?

By செய்திப்பிரிவு

பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனை தீர்வாகாது என்பதுடன் மாற்று வழியை வலியுறுத்தும் படம் தான் ‘வி3’. வேலாயுதம் (ஆடுகளம் நரேன்) தனது மகள்கள் விந்தியா (பாவனா), விஜி(எஸ்தர்) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவு வீடு திரும்பும் விந்தியா 5 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். குற்றவாளிகளை என்கவுன்டரில் கொன்றுவிட்டதாக காவல் துறை சொல்ல, இது தொடர்பாக வழக்கை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்து விசாரிக்கிறது. இதன் விசாரணை அதிகாரியாக சிவகாமி (வரலட்சுமி சரத்குமார்) நியமிக்கப்படுகிறார். இறுதியில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனரா, இல்லையா என்பது தான் ‘வி3’ சொல்லும் கதை.

கலெக்டர் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார். அவருக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். அவரைத் தொடர்ந்து ‘ஆடுகளம்’ நரேனின் அழுத்தமான நடிப்பு காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. மகளைப் பார்த்து உடைந்து அழும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.

விந்தியா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாவனா தேர்ந்த நடிப்பை வெளிபடுத்த, அவரது சகோதரியாக நடித்துள்ள எஸ்தர் நடிப்பில் வறட்சியை உணர முடிகிறது. இந்தக் கதாபாத்திரங்களைத் தவிர்த்து வரும் மற்ற துணைக் கதாபாத்திரங்களின் நடிப்பின் போதாமை அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக முதல்வராக நடித்திருப்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, எம்.எல்.ஏவாக நடித்திருப்பவருக்கான நடிப்பு மற்றும் அவருக்கான பலவீனமான எழுத்து, டப்பிங் என செயற்கை தனம் துருத்திக்கொண்டு நிற்கிறது.

‘பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை முழுமையான தீர்வாகாது’ என்பது ஒன்லைன். அதைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையில் அடைக்கமுடியாத ஓட்டைகள் பளிச்சிடுகின்றன. விசாரணை ஆணையத்திற்கான அதிகார வரம்புகள் என்ன என்பதறியாமல் கற்பனைக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்ட காட்சிகள், கதைக்கு தொடர்பில்லாத வரலட்சுமி சரத்குமாரின் தேவையற்ற பில்டப் காட்சிகள், வடமாநில பத்திரிகையாளரிடம் சாதி குறித்து எம்எல்ஏ பேசும் தேவையற்ற வசனம், என்கவுன்டருக்கு சொல்லப்படும் செயற்கையான காரணம் என காட்சிகளுடன் அயற்சியும் நீள்கிறது ஒடுக்கப்பட்ட மக்களை நல்லவர்களாக பிரதிபலிப்பதாக கூறி, அந்த இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக காட்டியிருப்பது கதைக்குள் நிகழும் முரண்.

இப்படியாக நகரும் படத்தில் ஆலன் சபாஸ்டின் இசையில் பாடல்கள் ஆறுதல். சிவா பிரபு ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. தவிர, பாலியல் வன்கொடுமைகளை களைய பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இயக்குநர் அமுதவாணன் இறுதியில் முன்வைக்கும் தீர்வு விவாதத்திற்குரியது.

மொத்தமாக பாலியல் வன்கொடுமையின் கொடூரத்தை திரை ஆக்கம் செய்து, அதற்கான தீர்வை விவாத்திற்குள்ளாக்க வேண்டும் என்ற இயக்குநரின் மெனக்கெடல் வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த மெனக்கெடல் திரைக்கதையில் நழுவியிருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE