‘இளையராஜா இசை அப்படி என்ன செய்துவிட்டது?’ என்ற கேள்வி பலருக்கு இன்றைக்கு இருந்து வருகிறது. இதற்கு பதில்தான், இந்தப் பாடல் நூறாண்டுக் கண்ட இந்திய சினிமா, எத்தனையோ இசையமைப்பாளர்களைக் கண்டிக்கிறது. அவரவர் காலக் கட்டத்தில் தங்களது ஆகச் சிறந்த பங்களிப்புகளை அவர்கள் செய்திருக்கின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. ஆனால், கால ஓட்டமும் ரசனை மாற்றமும், சரித்திரம் படைத்த பல பாடல்களையும், இசையமைப்பாளர்களையும் சற்றே அந்நியப்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மாற்று இதுவரை கண்டறியப்படவே இல்லை. புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமம் வரை நீங்கள் எங்கே சென்றாலும் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தப் பாடலுக்கு மாற்றாக பல வருடங்களாக வெவ்வேறு இசையமைப்பாளர்கள் முயற்சித்திருந்தாலும், 40 வருடங்களாக புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியை ஒருசேர இந்தப் பாடலின் அருகில் நெருங்க முடியவில்லை.
கடந்த 1982-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ’சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'இளமை இதோ இதோ' பாடல்தான் அது. இசைஞானியின் ஆர்ப்பரிக்கும் இசையில், காவியக் கவிஞர் வாலி இந்தப் பாடலை எழுதியிருப்பார். பாடலை மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கே உரிய வசீகர குரலில் பாடி அசத்தியிருப்பார். இந்தப் படத்தின் நாயகன் கமல்ஹாசன் என்பதால், அந்தக் காலக்கட்டத்தில் காதல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அவருக்கு ஏற்றபடி, பாடல் வரிகளை கொஞ்சம் தூக்கலாகவே எழுதியிருப்பார் கவிஞர் வாலி. இந்தப் பாடலுக்கான இசைக்கோர்ப்பு மற்றும் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பாடலின் தொடக்கத்தில் வரும் "Hey Everybody... Wish You A Happy New Year" என்பது இல்லாமல்தான், பாடல் தயாராக இருந்ததாகவும், எஸ்பிபிதான் அந்த தொடக்க வரிகளைச் சேர்த்து பாடியதாகவும் கூறப்படுகிறது.
புத்தாண்டு வாழ்த்தை எஸ்பிபி தனது கம்பீரக் குரலில் பாடிய பிறகு, அதற்கு இணையான அதே கம்பீரத்துடன் சுப்ரனோ சாக்ஸ், ட்ரம் போன், ட்ரெம்ப்ட் ஒருசேர இசைக்கும்போதே பாடல் கேட்கும் அனைவருக்கும் உற்சாகம் தொடங்கிவிடும். அந்த ஆர்ப்பரிக்கும் இசையில் வரும் புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உகந்த பாடலாகவே தொடர்ந்து வருகிறது. பாடலின் பல்லவியை கவிஞர் வாலி,
» அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ரிலீஸ்
» “மகனிடம் எதையும் எதிர்பார்க்காத தாய்” - பிரதமர் மோடியின் தாயாருக்கு இளையராஜா புகழஞ்சலி
"இளமை
இதோ இதோ இனிமை
இதோ இதோ காலேஜ்
டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்
இளமை இதோ
இதோ இனிமை இதோ
இதோ" என்று படத்தின் நாயகன் கமல்ஹாசனுக்கு அந்த காலக்கட்டத்தில் இருந்த ரசிகர், ரசிகைப் பட்டாளத்தின் ரசனைக்கேற்றபடி எழுதியிருப்பார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சுப்ரனோ சாக்ஸ், ட்ரம் போன், ட்ரெம்ப்ட் ஒருசேர கர்ஜிக்கத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கிடார், பேஸ் கிடார், ஸ்டிரிங்க செக்சன், என எல்லாம் சேர்ந்து பாடல் கேட்பவர்களை மெல்ல, மெல்ல ஆட்டம் போட வைத்திருக்கும். பாடலின் முதல் சரணம்,
"வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ஏஹே
ஹே ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம்
பாருங்கள் நிகர் ஏது கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள் ஊர்
போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்" என்று எழுதப்பட்டிருக்கும். வரிகளைக் கேட்கும் போதே இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் இந்த வரிகள் எஸ்பிபி குரலில் கேட்பது அத்துனை இனிமையான அனுபவமாக இருக்கும். அதுவும் உச்ச ஸ்தாதியில் பாடிக் கொண்டிருக்கும் எஸ்பிபி வல்லவன் என்ற வார்த்தையை மட்டும் இறக்கி பாடும் இடம் அந்த மாதிரி இருக்கும்.
தொடர்ந்து வரும், இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில், டிரம்ஸில் விதவிதமான தாளங்களை இசைத்து பாடல் கேட்பவர்களின் மனங்களை கவர்ந்திருப்பார் இசைஞானி. இசைஞானியிடம் நீண்ட காலமாக டிரம்ஸ் இசைக் கலைஞராக இருந்த மறைந்த புருஷோத்தன் அவர்கள்தான் வாசித்திருப்பார். டிரம்ஸ் பீட்டில் எத்தனை வெரைட்டி காட்டியிருப்பார். இதைத் தொடர்ந்துவரும், இரண்டாவது சரணம்,
"ஹிந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக் துஜே கே லீயே
ஏன்டி நீ பாத்தியே
எனக்காக ஏக்கம்
என்னம்மா களத்தூரின்
கண்ணம்மா உனக்காக
வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள்
மாறுவேன் நான் தான்
சகலகலா வல்லவன்" என்று வரும். சாதாரண மெலோடிகளை பாடும்போது, தனது ஸிக்னேச்சர் கொஞ்சல்களைப் பதிவு செய்யும் எஸ்பிபி, இந்தப் பாடலில் பல்வேறு ரசிக்கும் வேலைகளைச் செய்திருப்பார். இந்த சரணத்தில் கல்யாணராமன் தான் எனும் இடத்தை அவர் பாடியிருக்கும் விதம் அசந்துப்போகச் செய்யும். கல்யாணராமன், கமல்ஹாசன் எத்துப்பல்லுடன் நடித்து வெளிவந்த திரைப்படம். அந்தப் படத்தின் கமலை இமிட்டேட் செய்யும் வகையில் அதை பாடியிருப்பார் எஸ்பிபி.
காலம் கடந்து கேட்கப்போகிற பாடல் என்பதாலோ என்னவோ, 3 சரணங்களைக் கொண்டிருக்கும் இந்தப்பாடல். மூன்றாவது சரணத்தின் இடையிசையில், டிரம்ஸ், ட்ரம்போன், எஸ்பிபியின் சோலோ வாய்ஸ் கொண்டு இசைக்குறிப்புகளை அமைத்திருப்பார் இளையராஜா. எஸ்பிபியின் குரல் வித்தைக்கு நிகராக இசைக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக இசைக்கருவிகளை இசைத்திருப்பார்கள். பாடலின் மூன்றாவது சரணம்,
"கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்
எனை யாரும்
எய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும்
கிடையாது எதிர்க்கின்ற
ஆளேது யார் காதிலும்
பூச்சுற்றுவேன் நான் தான்
சகலகலா வல்லவன்" என்று எழுதப்பட்டிருக்கும்.
காலத்தால் அழிக்க முடியாத மெலோடி பாடல்களுக்காக மட்டுமல்ல இசைஞானி இளையராஜாவின் துள்ளலிசைப் பாடல்களும் காலம் கடந்து அவரது இசையின் மகத்துவத்தைச் சொல்லும் என்பதற்கு சாட்சியாக இந்தப் பாடல் இன்றளவும் இருந்து வருகிறது. இந்த உலகில் புத்தாண்டு என்ற ஒன்று கொண்டாடும் வரை, ராகதேவனின் இசையில் வந்த இந்தப் பாடலும் இருக்கவேச் செய்யும். புத்தாண்டு வாழ்த்துகளுடன் ராஜாவின் மீட்பிசை துளிர்க்கும்...
இளமை இதோ இதோ பாடல் இணைப்பு இங்கே
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago