டிரைவர் ஜமுனா Review: விறுவிறுப்பாக தொடங்கிய பயணம் ‘நிறைவு’ தந்ததா?

By செய்திப்பிரிவு

முன்னாள் எம்எல்ஏ ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படை கும்பலின் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அவர்கள் வாடகைக் கார் ஒன்றை புக் செய்கிறார்கள். அந்தக் காரை ஓட்டி வரும் ஜமுனாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர்கள் மீது சந்தேகம் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் மறுக்கும் ஜமுனா, வேறு வழியில்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொள்கிறார். வழியில் அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வர, அடுத்து என்ன நடந்தது? முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்டாரா? அதன் பின்னணி என்ன? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘டிரைவர் ஜமுனா’.

‘வத்திக்குச்சி’ படம் மூலம் கவனம் ஈர்த்த கின்ஸ்லின் கதைக்குள் செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே கிக்கரில் ஸ்டார்ட் ஆகி புறப்படும் வண்டியைப்போல தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பை கூட்ட முயற்சித்திருக்கிறார். கூலிப்படையினரை ஏற்றிக்கொண்டு ஜமுனா பயணிக்கும் காரில் நிலவும் அமைதியும், அச்சமும் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது. அடுத்து என்ன நடக்குமோ என எதிர்நோக்கி காத்திருக்கும் பார்வையாளர்களின் ஆர்வத்தை முடிந்த அளவுக்கு தக்க வைக்கிறது திரைக்கதை.

ஒருவித பயத்துடன் அமைதியாக பயணிக்கும் காரின் இறுக்கத்தை தளர்த்த மற்றொரு கதாபாத்திரத்தை பயன்படுத்தி ஆசுவாசப்படுத்தியது, தனக்கு பின்னால் இருப்பவர்களால் ஆபத்து நேரலாம் என தெரிந்தே பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் உணர்வின் மீட்டரில் பார்வையாளர்களையும் பொருத்தியது என முதல் பாதியில் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதியில் கதையை சொல்லியாக வேண்டிய தேவையின்போது, திரைக்கதை டீசலை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்குகிறது. கதைக்கான காட்சிகளுக்கு பதிலாக காட்சிகளுக்கேற்றவாறு கதையை வளைத்திருக்கும் உணர்வு எழாமலில்லை. காரணம், சுற்றியிருக்கும் காவல் துறையிடமிருந்து குற்றவாளிகள் தப்பிப்பது, வேண்டுமென்றே கொலையாளிக்கு பதிலாக மற்றவரை வெட்டும் கூலிப்படையினர், பிரதான கதாபாத்திரத்தின் எஸ்கேப், ‘கர்மா இஸ் பூமராங்க்’ என நிரூபிப்பதற்கான செயற்கைக் காட்சி என அங்காங்கே தெரியும் தர்க்க ஓட்டைகளில் வெளிச்சம் பளிச்சிடுகிறது.

பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமென வைக்கப்பட்ட படத்தின் திருப்பம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தனித்து தெரிகிறது. திருப்பதை அடிப்படையாக வைத்து எழுப்பப்பட்ட மொத்த திரைக்கதை அதன் இயல்பிலிருந்து விலகி செயற்கைத்தனத்தை தாங்கி நிற்கிறது. ஒரு கட்டத்தில் ஜமுனா கதாபாத்திரத்தின் அழுத்தமின்மையும், அந்த கதாபாத்திரத்திற்கான போதிய தேவையும் எழாமலிருப்பது படத்துக்கும் பார்வையாளருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்திவிட ஒன்ற முடியாமல் போகிறது.

‘கெத்தாக’ நின்று டீ குடித்து காலி டம்ளரை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த உடல்மொழி, அப்படியே வலுவிழந்து கூலிப்படையினரிடம் சிக்கி செய்வதறியாமல் திகைக்கும் முகபாவனை, அம்மாவை எண்ணி உருகுவது என தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார். கார் ஸடண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கும் அவரது மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்திற்கு நடிப்பில் நியாயம் சேர்க்கிறார். தவிர, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக் குமார், இளையபாண்டி ‘பிக்பாஸ்’ பாஸ் மணிகண்டன் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை கதைக்கு தேவையான பங்களிப்பை செய்ய, ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் சில ப்ரேம்கள் காட்சிக்களுக்கு உற்சாகத்தைக் கூட்டுகின்றன. மொத்தத்தில் டிரைவர் ஜமுனாவின் பயணம் விறுவிறுப்பாக தொடங்கி பாதை மாறி செல்ல வேண்டிய இடத்திலிருந்து விலகியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

மேலும்