லத்தி: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கடமை தவறாத காவலர் முருகானந்தம் (விஷால்). அவர் மனைவி கவிதா (சுனைனா) செவிலியர். ஒரே மகன், ராசு (மாஸ்டர் ராகவ்). பாலியல் குற்றவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவனை லத்தியால், முருகானந்தம் பதம் பார்க்க, ஒரு வருடம் சஸ்பெண்ட்செய்யப்படுகிறார். பிறகு டிஐஜி கமல்(பிரபு) சிபாரிசால் மீண்டும் வேலைக்குச் சேரும் அவர், இனி லத்தியை தொடவேக் கூடாது என்று முடிவெடுக்கிறார். ஆனால், விதி வேறு மாதிரி விளையாடுகிறது. அவருக்கு சிபாரிசு செய்த டிஐஜிக்கு ஒரு பிரச்சினை ஏற்பட, முருகானந்தம் லத்தியை எடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் ஏற்படும் சிக்கலும் அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதும்தான் கதை.

கடைநிலைக் காவலரை நாயகனாகக் கொண்டு, ரவுடிகளுக்கு எதிராக, தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய கதைக் களத்தின் மூலம் அறிமுக இயக்குநர் வினோத்குமார் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வில்லன்களிடம், நாயகன் மாட்டிக்கொள்ளும் சூழலுக்கான பின்னணியைச் சொல்லும் முதல் பாதி சுவாரசியமாகவும் கவனத்தைச் சிதறவிடாத வகையிலும் நகர்கிறது. நாயகனின் அழகான குடும்பம் தொடர்பான காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

இரண்டாம் பாதியில், கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்குள் நாயகன், ரவுடிக் கூட்டத்தில் தனியாகச் சிக்கிக்கொண்ட பிறகு திரைக்கதை வேகமெடுக்கத் தொடங்குகிறது. அங்கு நாயகனுடன் அவர் மகனும் சிக்கிக் கொள்வதற்கான காரணம் வலுவாக இல்லாததால், அதை வைத்துப் பின்னப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் தேவையற்றத் திணிப்பாகத் தோன்றுகின்றன. வில்லன்கள் சுறா, வெள்ளை ஆகியோரின் செயல்கள் பலவும் ‘சின்னப்பிள்ளைத் தனமாகவே’ இருப்பதால் அந்த கேரக்டர்களுக்கான மிரட்டல் இல்லை.

முருகானந்தம் அங்குச் சிக்கிக்கொண்டதற்கான ட்விஸ்ட் ஆச்சர்யப்படுத்தினாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தேவையில்லாமல் படத்தை இழுத்ததைப் போன்ற உணர்வே, முடியும்போது ஏற்படுகிறது.

கடமையுணர்வும் குடும்பப் பாசமும் மிக்க கடைநிலைக் காவலராக உடல்மொழி, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாக பங்களித்திருக்கிறார் விஷால். சண்டைக் காட்சிகளில் வழக்கத்தை விட அதிக உழைப்பு தெரிகிறது. சுனைனா, கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்.

ஹீரோவுக்கு நிகரான வில்லனாக, ரமணா மிரட்டுகிறார். அவர் தோற்றமும் உடல் மொழியும் அந்த ‘வெள்ளை’பாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறது. சிறுவன் ராகவ்வும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். கவுரவத் தோற்றத்தில் பிரபு, தலைவாசல் விஜய் ஆகியோர் அனுபவ முத்திரையைப் பதிக்கிறார்கள்.

வில்லன் சன்னியும் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். யுவனின் இசையில் ‘வீரத்துக்கோர் நிறமுண்டு’ பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ண தோட்டா ஆகியோரின் ஒளிப்பதிவும் என்.பி.காந்தின் படத்தொகுப்பும் கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கின்றன.

இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, சில தர்க்கப் பிழைகளைத் தவிர்த்திருந்தால் கனமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘லத்தி’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE