திருவிழா நாட்களில் முதல்நாள் மாலையிலிருந்தே கொண்டாட்ட மனோபாவம் வீடுகள் தோறும் நிரம்பிக் கிடக்கும். திருவிழா தினத்தன்று கோயிலைப் போலவே எல்லா வீடுகளும் பிரகாசித்து கொண்டிருக்கும். அன்றைய தினத்தின் மாலைப்பொழுதுகளில் கூட்டிப் பெருக்கிய வீதிகளின் வீட்டு வாசல்கள் கோலப்பொடிகளால் வானவில் ஆடை உடுத்தியிருக்கும். குளித்து முடித்து, வீட்டு வாசல்களில் நின்று தலை காய வைப்பதும், சிக்கொடிப்பதும், கையில் மருதாணி வைத்துக் கொள்வதும், பூக்காரர்களிடம் பூ வாங்குவதுமாய் அவள் அவனுக்காக வீட்டிற்கு வெளியே வந்து செல்லும் அத்துனை தருணங்களிலும் அவனைப் போலவே அந்த ஊரே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.
அதுவும் டிசம்பர் மாதம் என்றால் கேட்கவே வேண்டும். ஒருபக்கம் சபரிமலை பக்தர்களுக்காகவும், இன்னொரு பக்கம் குழந்தை இயேசுவின் பிறப்பிற்காகவும் கோயில்களும், தேவாலயங்களும் களைகட்டியிருக்கும். பக்தியும் காதலும் நெஞ்சமற நிறைந்திருக்கும் இதுபோன்ற நினைவுகளின் தருணங்களை எல்லாம் வாழ்க்கைப் பெட்டகத்தில் மீட்டுத்தருபவர் இசைஞானி இளையராஜாதான்.
இத்தகைய பேரின்பத்தைக் கொடுக்கும் பாடல்தான், கடந்த 1986-ம் இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'உனக்காகவே வாழ்கிறேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணா உனைத் தேடுகிறேன் வா' பாடல். இசைஞானி இளையராஜா கவிப்பேரரசு வைரமுத்து காம்போவில் உருவான மற்றொரு கலைப் பொக்கிஷம். பாடலை ஜானகி அம்மாவும் எஸ்பிபியும் பாடியிருப்பர். பாடலை ஜானகி அம்மா, கண்ணா கண்ணா கண்ணா என 3 முறை பாடியிருப்பார். இப்படித்தான் இந்தப் பாடல் தொடங்கும்.
முதல் முறை கண்ணா என பாடும்போது, கண்ணாவை புஃல்லா பாடிட்டு ஆஆஆஆஆ வை மட்டும் தனியாகவும், இரண்டாவது முறை கண்ணா என பாடும்போது, ண்ணா வில் இருந்தே தனியாகவும், மூன்றாவது முறை கண்ணா என பாடும்போது, ண்-ல் இருந்தே தனியாகவும் ஆஆஆஆஆ வைப் பிரித்துப் பாடியிருக்கும் அழகிருக்கே, மில்லியன் ஹார்டின்ஸ்களை இங்கே அள்ளியிருப்பார் ஜானகி அம்மா. இந்த மூன்று கண்ணாவை பாடும்போது 5 இடங்களில் கார்ட்ஸ் வரும் இடங்கள் அற்புதமானவை.
இதிலிருந்து அடுத்த 16 விநாடி தொடக்க இசையில் பாடலைக் கேட்கும் காது வழி நுழைந்து, உடலுறுப்புகளில் உட்புகுந்து ரத்த நாளங்கள், திசுக்கள், நரம்புகளில் புத்துணர்ச்சியைப் பாய்ச்சி பாடல் கேட்பவர்களை உறைய வைத்து உயிர்ப்பித்திருப்பார் ராகதேவன் இளையராஜா. சோலோ வயலின் அவனைக் காண வேண்டும், அவனோடு பேச வேண்டும் என்ற அவளது ஏக்கத்தையும், சோகத்தையும், வலியையும், வேதனையையும் புயலாய் சுழன்று கொண்டுவர, ஏக்கத்தின் தாக்கத்தையும், சோகத்தின் பாரத்தையும், வலியின் கனத்தையும், வேதனையின் அழுத்தத்தையும் செல்லோவின் இசைவழியும் கடத்தி பாடல் கேட்பவர்களைக் கட்டிப் போட்டும் இசைஞானி, டிரம்ஸ், ட்ரிபிள் காங்கோ ரிதத்தின் நாதத்துடன் பாடலின் பல்லவியைத் தொடங்கியிருப்பார்.
இந்தப் பாடலின் பல்லவியை, கவிஞர் வைரமுத்து,
"கண்ணா உனைத்
தேடுகிறேன் வா
கண்ணீர் குயில்
பாடுகிறேன் வா
உன்னோடு
தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை" என்று எழுதியிருப்பார்.
தொடக்க இசையிலேயே அத்தனை அசாத்தியாங்களை நிகழ்த்தியிருந்தாலும் கூட, பல்லவியின் பாடல் வரிகளுக்கு இடையிலான இடைவெளியைக் கூட இசைஞானி விட்டு வைத்திருக்கமாட்டார். கண்ணா உனைத் தேடுகிறேன் வா என முடியும் இடத்திலும், கண்ணீர் குயில் பாடுகிறேன் வா என முடியும் இடத்திலும், வயலின்களைக் கொண்டு பாடல் கேட்பவர்களின் மனங்களில் தென்றலைத் தவழச் செய்திருப்பார் இசைஞானி. அதேபோல், உன்னோடு தான் வாழ்க்கை என முடியும் இடத்திலும், உள்ளே ஒரு வேட்கை என முடியும் இடத்திலும் கிடைக்கும் சின்னதுக்கும் குறைவான குட்டியோன்டு இடத்தில் புல்லாங்குழலை சினுங்க செய்து பாடல் கேட்பவர்களின் தோளில் குயிலை கூவச் செய்திருப்பார் மேஸ்ட்ரோ.
முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை கிடாரில் தொடங்கும். பேஸ் கிடார் அதனுடன் சேரும். பின் புல்லாங்குழல் துணை சேரும். இதன்பின்னர் ரிதமும்,வயலின்கள், செல்லோவும் ஒன்று சேரும். அங்கிருந்து பாடலின் முதல் சரணத்தை தொடங்கியிருப்பார் ஜானகி அம்மா. முதல் சரணம்,
"ஏன் இந்த காதல்
என்னும் எண்ணம் தடை
போடுமா என்பாடல் கேட்ட
பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான்
சொல்வது இன்று
வந்த சோதனை
மௌனமே கொல்வதால்
தாங்கவில்லை வேதனை
உன்னை தேடி
வந்தேன் உண்மை
சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள
என்ன காரணம்" என்று எழுதப்பட்டிருக்கும். கோபத்தில் இருக்கும் காதலனிடம் எதற்காக இந்த கோபம் என்ற தொனியில் காதலி கேள்வி கேட்பதுபோலவும், தன் நிலையைக் கூறி மன்னிப்புக் கேட்பது போல எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து.
காதலியின் பதில் கேட்டு மனமிறங்கும் காதலன் கதவைத் திறக்க, இசைஞானியின் இசை வைத்தியம் மீண்டும் தொடங்கும். பாடலின் துண்டு பல்லவியை எஸ்பிபி பாடுவதற்குமுன், மிருதங்கம், வயலின்கள் துணையோடு ராஜா செய்யும் மாயங்கள் கடல் அலை பாறையின் மீது மோதும் போது ஏற்படும் ஆனந்தத்தை அள்ளித் தெளித்திருக்கும். வயலின்களும், செல்லோவும் பாடல் கேட்பவர்களின் மனதில் அழுந்தும் தருணத்தில் வரும் கம்பீரமாய் வரும் பாடும் நிலாவின் குரல் மயிலிறகாய் நம்மை வருடியிருக்கும்.
அப்படியே பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையை வயலின்கள், வயோலா, செல்லோவை கொண்டு இசைத்திருப்பார் இசைஞானி. அதிலும் ஒரு இடத்தில் கிடாரில் ஆரம்பிக்கும் ஒரு போஃர்ஷன் வரும். அதுபற்றி இசையமைப்பாளர் பாலபாரதி (அமராவதி, தலைவாசல்) ஒரு யூடியூப் நேர்காணலில் பேசியிருப்பார். வாய்ப்பிருந்தால் கேட்டுப்பாருங்கள். பாடலின் இரண்டாவது சரணம்,
சோகத்தின் பாஷை
என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயகூடும் கண்ணீர்
அது காயுமா
சோதனை நேரலாம்
பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும்
வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில்
தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே
சோகமில்லையே" என்று தன்னைத் தேடி வரும் காதலிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
இதுபோன்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களில் இசைஞானியோடு சேர்ந்து அவரது இசைக் கலைஞர்களுக்கும் மிக முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்ட காலமாக கிடார் இசைக் கலைஞராக இருந்து வருபவர் சதானந்தன். இவர் மூத்த இசையமைப்பாளர் சுதர்சனின் மகன். அதேபோல செல்லோ இசைக் கலைஞராக இருப்பவர் சேகர். இவர் மூத்த வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனின் மகன்.
மேலும் வயலின் இசைக்கலைஞராக இருக்கும் ஜெரி என்பவர் இளையராஜா இசையமைக்கத் தொடங்கியதில் இருந்து அவருக்கு வாசித்து வருகிறார். அதேபோல் பிரபாகர் தற்போது ராஜாவின் இசை நிகழ்ச்சிகளைக் கண்டக்ட் செய்பவர், அவர்தான் ராஜாவின் பல பாடல்களில் வரும் அந்த சோலோ வயலின்களை வாசித்தவர். இதுபோன்ற நிகரற்ற இசைக் கலைஞர்களின் எல்லையற்ற இசைக் காதல்தான், இதுபோன்ற பாடல்கள் ஆண்டுகள் கடந்தும் நம் மனங்களை ஆள்கின்றன. ராகதேவனின் இசைமழை தொடரும்....
கண்ணா உனைத் தேடுகிறேன் பாடல் இணைப்பு இங்கே
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago