தமிழ் சினிமாவிற்கே நடிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய படம் பராசக்தி - கனிமொழி

By செய்திப்பிரிவு

‘இன்னும் 50 வருடங்களானாலும் ‘பராசக்தி’ படத்தின் தேவை இருந்துகொண்டுதான் ருக்கும்’ என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி சிறப்புத் திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த கதைகளை படமாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ‘பராசக்தி’ என்றுமே இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.

எளிய மனிதர்கள் ஒவ்வொரு நிலைகளிலும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். சமூகம் சார்ந்து பார்த்தால் சாதி ரீதியாகவும், குடும்ப அமைப்பு ரீதியாக பார்த்தால் பெண்ணடிமைத்தனம் மூலமாகவும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘பராசக்தி’ படம் இன்றும் சமூகத்துடன் பொருந்திப்போகிறது. இன்னும் 50 வருடங்கள் கழித்தும் அது பொருந்திப்போகும்; படத்தின் தேவை இருந்துகொண்டுதானிருக்கும். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப்படத்திலிருந்து கற்றுகொள்ள நிறைய இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “திராவிட இயக்க படங்களிலேயே ‘பராசக்தி’ மிக முக்கியமான படமாக நான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் அனைத்துமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசைக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவிற்கே நடிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுத்தப் படம்.

வழமையான பல விஷயங்களை படம் உடைத்திருக்கிறது. குறிப்பாக ஒரு பெண் சிந்திக்கக் கூடாது. எதிர்த்து பேசக்கூடாது என சமூகம் முன்வைக்கும் விஷயங்களை படம் உடைத்திருக்கும். சாதி ரீதியாக மட்டுமல்லாமல் வர்க்க ரீதியான பாகுபாடுகளை இப்படம் பேசியிருக்கும். அன்றைக்கு இந்தப் படம் தைரியமாக பேசிய அளவிற்கு இன்றும் கூட நம்மால் பேச முடியாத சூழல் உள்ளது. அதை எதிர்கொண்டு 70 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் எந்த தைரியத்துடன் அணுகினார்களோ நாமும் அதே வீரியத்துடன் மீண்டும் களமாட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE