Rewind 2022 | ‘கடைசி விவசாயி’ முதல் ‘விட்னஸ்’ வரை - ‘கன்டென்ட்’ மூலம் கவனம் ஈர்த்த தமிழ்ப் படங்கள்

By கலிலுல்லா

தமிழ் சினிமாவில் ‘விக்ரம்’ முதல் ‘லவ் டுடே’ வரை வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டிய 2022-ம் ஆண்டில், அழுத்தமான கதை, கதைக்களம், திரைக்கதைகளைக் கொண்ட பல முக்கியப் படங்களும் தீவிர சினிமா ஆர்வலர்களின் கவனம் ஈர்த்தன. அவை குறித்து ஒரு விரைவுப் பார்வை.

கடைசி விவசாயி: ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் இந்தாண்டு பிப்ரவரி 11-ம் தேதி வெளியான இப்படம், வீட்டுமனை வியாபாரிகளிடம் விளைநிலங்கள் சிக்கி பாலை நிலமாகும் கள யதார்த்தத்தை மிகையின்றி, போதிய புரிதலுடன் பேசியது. படத்தில் ‘மாயாண்டி’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த விவசாயி நல்லாண்டி தேர்ந்த நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்திருந்தார். இந்த ஆண்டின் அழுத்தமான கதையம்சம் கொண்ட படத்தில் ‘கடைசி விவசாயி’க்கு முக்கியமான இடமுண்டு.

குதிரைவால்: மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இயக்கத்தில் மார்ச் 18-ம் தேதி வெளியான ‘குதிரைவால்’ படம் கதை சொல்லலில் புதுமையை புகுத்தியிருந்தது. படத்தின் திரைக்கதை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது ரசனைக்கு எந்த விதத்திலும் இடையூறில்லாமல் மொத்த படத்தையும் நகர்த்தியது. கவிதையாக விரிந்த காட்சிகளும், பின்னணி இசையும் இன்றும் மனதில் தேங்கியிருப்பது படத்தின் தன்மையை குறிப்பிடுகிறது. அந்த வகையில் ‘குதிரைவால்’ பேசப்பட வேண்டிய படைப்பு.

டாணாக்காரன்: இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியான ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபு அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார். அவருக்கு மட்டுமல்லாமல் இந்த ஆண்டின் அழுத்தமான பதிவான இப்படம், காவல் துறையில் இணைவதற்கு முன்பான பிஆர்எஸ் பயிற்சி குறித்து பேசியிருந்தது. சில இடங்களில் பிசகியிருந்தாலும், பேச முனைந்த விஷயமும், பயிற்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் நேர்மையாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் தமிழ்.

சாணிக்காயிதம்: ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டாரான்டினோ பாணியின் சாயலைக் கொண்டிருந்த ‘சாணிக்காயிதம்’ அருண் மாதேஸ்வரனின் மற்றொரு பழிவாங்கும் சீற்றம். கீர்த்தி சுரேஷும் - செல்வராகவனும் இணைந்து முழு உழைப்பையும் கொட்டியிருந்த இப்படம் அதீத வன்முறைக் காட்சிகளை கொண்டிருந்தபோதும், தமிழ் சினிமாவுக்கான முகத்தை வேறுபடுத்திய படைப்பாக காட்சிப்படுத்தபட்டிருந்தது. மே 6-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியானது.

நெஞ்சுக்கு நீதி: மே-20ஆம் தேதி அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ‘ஆர்டிக்கள்15’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை பேசியது. உதயநிதி நடிப்பில் உருவான இப்படத்தை தமிழுக்கேற்ற வகையில் தகவமைத்திருந்தார் அருண்ராஜா. சாதி குறித்த வசனங்கள் பலவும் கவனம் பெறும்வகையில் எழுதப்பட்டிருந்த நிலையில், முக்கியமான விஷயத்தை பேசிய வகையில் நெஞ்சுக்கு நீதி குறிப்பிடத்தகுந்த படைப்பாக கருதப்பட்டது.

சேத்துமான்: சோனி லிவ் ஓடியில் கடந்த மே-27ஆம் தேதி வெளியான இப்படத்தை தமிழ் இயக்கியிருந்தார். பா.ரஞ்சித் தயாரிப்பில் பிரசன்னா பாலசந்திரனின் முக்கிய கதாபாத்திரத்தில் சாதியத்தின் படிநிலைகளையும், உணவு அரசியலையும் தெளிவாக்கியிருந்தது. அதன் பிரசாரமில்லாத எங்கேஜிங்கான திரைக்கதை அமைப்பும், காட்சியமைப்பும் படத்தின் இன்றும் தாங்கி நிற்கிறது.

வாய்தா: மகிவர்மன் இயக்கத்தில் மே 27-ம் தேதி வெளியான இப்படத்தில் மு.ராமசாமி, நாசர், புகழ் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாதி வழியே ஒரு ஏழை சலவைத் தொழிலாளியின் நீதிக்கான போராட்டமாக விரிந்த இப்படம் அடர்த்தியான கதையம்சத்தை கொண்டிருந்தது. வணிகத்தை தவிர்த்து விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது.

வீட்ல விசேஷம்: ‘பதாய் ஹோ’ பாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இப்படம் பேசிய விஷயம் முக்கியமானது. ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கியிருந்த ‘வீட்ல விசேஷம்’ 50 வயதில் மீண்டும் பெற்றோர்களாகும் தம்பதிகள் குறித்தும், பொதுசமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் பேசியிருந்தது. பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்படாத பிரச்சினையை கதைக்களமாக்கியிருப்பது கவனத்துக்குரியது.

ராக்கெட்ரி: தி நம்பி விளைவு: மாதவன் இயக்கத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் எதிர்கொண்ட சவாலை உண்மைக்கு நெருக்கமாக காட்டியிருந்த இப்படம் பரவலாக கவனம் பெற்றது. அதன் திரைக்கதை ஆக்கமும், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பதிவு செய்திருந்தவிதமும், அதற்கான மெனக்கெடலும் குறிபிடத்தகுந்த படைப்புக்கான ஆதாரத்தை கூட்டியிருந்தன.

நட்சத்திரம் நகர்கிறது: பா.ரஞ்சித் இயக்கிருந்த இப்படத்தின் திரைக்கதையில் பிரசார தொனி தென்பட்டாலும், அதன் உள்ளடக்கம் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்பால் ஈர்ப்பாளர்கள், ஆணவக் கொலை, காதல், உணவரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியிருந்த அதனை தைரியமாக அணுகிய விதத்தில் பேசப்பட்டது.

கார்கி: கௌதம் ராமசந்திரனின் ‘கார்கி’, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியிருந்தது. சாய் பல்லவியின் நடிப்பும், சட்டப் போராட்டமும், திருநங்கை கதாபாத்திரமும், ஊடகங்களை சாடிய விதமும், பொது சமூகத்தின் கூட்டு மனசாட்சி என ‘கார்கி’ தனது கதையமைப்பில் அழுத்தத்தை கூட்டியிருந்தது.

கணம்: ஸ்ரீகார்த்தி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் தாய் - மகனுக்கிடையிலான அன்பை டைம் ட்ராவலின் வழியே பதிவு செய்தது. சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடன் ரசிக்கும்படியான காட்சிகள் படத்தின் தன்மை மெருகேற்றியிருந்தன.

ஆதார்: ராம்நாத் பழனிகுமார் இயக்கியிருந்த ‘ஆதார்’ படத்தின் உள்ளடக்கம் கனமானது. பெருநிறுவனங்களால் சுருட்டப்படும் எளிய மக்கள் குறித்தும், அதற்கு துணை நிற்கும் அதிகார பலம் குறித்தும் சாடியிருந்த இப்படம் இந்த ஆண்டின் அடர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்ட வெயிட்டான சினிமா.

நித்தம் ஒரு வானம்: நேர்மறைச் சிந்தனையுடன் வாழ்வை அதன்போக்கில் வாழ்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கும் வகையிலான பழைய கதையை புத்துணர்வுடன் சொன்ன படம் ‘நித்தம் ஒரு வானம்’. ஃபீல்குட் சினிமா வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.

அனல்மேலே பனித்துளி: ஆன்ட்ரியா நடிப்பில் சோனி லிவ் ஓடிடியில் வெளியான இப்படம், பாலியல் குற்றவாளிகள் குறித்து மட்டும் பேசாமல் அதன் அதிகாரத்தை தோலுரித்திருந்தது. கைசர் ஆனந்தின் இப்படைப்பு வசனங்களில் அழுத்தத்தையும் காட்சியில் ஆழத்தையும் கொண்டிருந்தது தவறவிடக் கூடாத படம்.

விட்னஸ்: மேற்கண்ட படங்களையெல்லாம் தாண்டி, இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பை வந்து சேர்ந்தது இயக்குநர் தீபக்கின் ‘விட்னஸ்’. நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் ஆழமான காட்சிகளின் வழியே படம் பேச முனைந்திருக்கும் விஷயம் முக்கியமானது. இதுபோன்ற களத்தில் முந்தைய சினிமாக்கள் கொண்டிருந்த ‘மீட்பர்’ உள்ளிட்ட பிரச்னைகளை களைந்து நேர்மையான படமாக சோனி லிவ் தளத்தில் இந்த ஆண்டின் காத்திரமாக படைப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்