நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

விலை உயர்ந்த நாய்களைத் திருடி, உரிமையாளர்களிடம் பணம் பறிப்பதைத் தொழிலாகச் செய்கிறார், இந்தியாவின் முதல், 'நாய் கிட்னாப்பர்’ நாய்சேகர் (வடிவேலு). ஒரு கட்டத்தில், தாதா தாஸின் (ஆனந்தராஜ்) நாயைக் கடத்திவிட, அவர்கள் சேகரை தேடுகிறார்கள். இதற்கிடையே தங்கள் வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயை, வேலைக்காரன் திருடிச் சென்ற பிளாஷ்பேக்கை சேகரிடம் சொல்கிறார் பாட்டி (சச்சு). அந்த நாய் வந்தபின், குடும்பம் செல்வச் செழிப்பாக இருந்தது என்றும் அது சென்றபின் வறுமைக்கு வந்து விட்டதாகவும் கடத்திய வேலைக்காரன் (ராவ்ரமேஷ்) ஹைதராபாத்தில் கோடீஸ்வரனாக வாழ்வதாகவும் சொல்கிறார். பணத்துக்காக மற்ற நாய்களை கடத்தும் சேகர்,சொந்த நாயை மீட்டாரா, இல்லையா என்பதுதான் படம்.

வடிவேலு சில வருடங்களாக நடிக்கவில்லை என்றாலும் அவருடைய காமெடி,மீம்ஸ்களாக கலகலப்பூட்டி வருகின்றன, சமூக வலைதளங்களில். அதோடு, வடிவேலு, சுராஜ் காம்பினேஷனில் வெளியான ‘தலைநகரம்’, ‘மருதமலை’ படங்களின் காமெடிகள், இப்போதுவரை குபீர்சிரிப்பை குதூகலமாகத் தந்து கொண்டிருப்பதால், இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு. பழைய நினைப்போடு தியேட்டருக்கு சென்றால், ‘இப்ப காமெடி வரும், இந்தா அடுத்தக் காட்சியில வராம எங்க போயிரும்?’ என்று ஒவ்வொரு சீனையும் ஏமாற்றமாகவே கடந்து போக வைத்திருப்பது ‘டயர்ட்’ ஆக்கி விடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் சிரிப்பு வருவது ஆனந்த்ராஜ் அண்ட் கோ செய்யும் செல்ல சேட்டைகளால்.

கதை வடிவேலுக்கு அழகாகப் பொருந்தி இருந்தாலும், பலமில்லாத திரைக்கதை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாயைக் கடத்தி விதவிதமாக மிரட்டுவது, அதிர்ஷ்ட நாயைக் கடத்த பார்வையற்றவராக நடிப்பது என வடிவேலுவை சில இடங்களில் ரசிக்க முடிந்தாலும் மருந்துக்கு கூட சிரிக்க முடியவில்லை என்பது, ‘திருநெல்வேலியிலேயே அல்வா இல்லையாம்’ என்பது போன்ற ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது.

‘ரிஸ்குலாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி’என்பது போன்ற பன்ச் லைன்கள்தான், வடிவேலு படங்களில், ரசிக்க வைக்கின்ற வார்த்தை விளையாட்டுகள். இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அப்படிஎந்த பன்ச்சும் இல்லை, டிஞ்சும் இல்லை.அவருடன் வரும் ரெடின் கிங்ஸ்லி, பிரசாந்த், மாறன், ஷிவாங்கி ஆகியோரும் தங்களால் முடிந்த அளவுக்கு கத்தி கூச்சல் போட்டு நடிக்கிறார்கள். ஆனால், சிரிப்பு?

கடந்த சில வருடங்களாக காமெடி வில்லனாக களமிறங்கி இருக்கும், ஆனந்த்ராஜ், இதில் ‘ரிடையர்ட்’ அடியாட்களை வைத்துகொண்டு ரசிக்க வைக்கிறார். அவர் உடல் மொழியும் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ராவ் ரமேஷ், அவர் தங்கை ஷிவானி, பாட்டி சச்சு, போலீஸ் முனிஷ்காந்த், அப்பா வேலராமமூர்த்தி, வேலைக்காரர் பூச்சிமுருகன் போன்ற துணை கதாபாத்திரங்கள், கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. செல்வா ஆர்.கேவின் எடிட்டிங்கிற்கு அதிக வேலையில்லை. பணத்தைத் தண்ணீராகச் செலவழித்திருக்கிறது, லைகா. பலன்? சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தைத் தாங்கிப் பிடிக்க உதவினாலும் அது, முறிந்த கிளைக்கு முட்டுக்கொடுப்பது போலவே இருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE