காரி: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரியூர் - சிவனேந்தல் என்ற 2 கிராமங்களுக்குப் பொதுவான கோயில் ஒன்று இருக்கிறது. அதன் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் 2 கிராமத்துக்கும் போட்டி. ஜல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றி பெறும் ஊருக்கு, கோயில் நிர்வாகத்தைக் கொடுப்பது என முடிவாகிறது. இதற்காக, சென்னையில் செட்டிலாகிவிட்ட வெள்ளைச்சாமியை (ஆடுகளம் நரேன்) தேடி வருகிறார்கள், கிராமத்துப் பெரியவர்கள். குதிரை ஜாக்கியான அவர் மகன் சேது (சசிகுமார்), பெரியவர்களோடு ஊருக்கு வருகிறார். அவர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டாரா, கோயில் நிர்வாகம் யார் கைக்குச் சென்றது என்பதைச் சொல்கிறது படம்.

மனிதனுக்கும் விலங்குக்குமான உறவு, ஜல்லிக்கட்டு மாடுகளின் இறைச்சிக்கு அலையும் கார்ப்பரேட் கூட்டம், குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும் காளைகள் மீதான பாசம், ஆயுதம் தாங்கி சிலையாக நிற்கும் ஊர் காக்கும் கருப்பன், ஊரைக் குப்பையாக்கும் அதிகாரம் என அறிமுகப் படத்திலேயே ஆழமாகக் கதைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார், இயக்குநர் ஹேமந்த்.

ரசிக்க வைக்கிற வசனங்கள், ‘காரி’ என்கிற ஆவேச காளையையும் கேரக்டராக வைத்தது, மாடுகளின் வாசனைத் தெறிக்கிற கிராமத்து வாசல்கள், அந்த வெயில் மனிதர்களின் இயல்பையும் இயலாமையையும் அப்படியே காண்பித்த விதம், இயல்பான காதல் காட்சி, ஆக்ரோஷமான ஜல்லிக்கட்டு போன்றவற்றுக்காகப் பாராட்டலாம் இயக்குநரை.

ஆனால், மொத்தக் கதையையும் கொட்டிவிட வேண்டும் என்ற அறிமுக ஆவலில், நிறைய விஷயங்களைக் கதைக்குள் சேர்த்ததில், 5 ரூபாய் மஞ்சப்பைக்குள் 5 சீப் பழத்தைத் திணித்தது மாதிரி, பிதுங்கி நிற்கிறது திரைக்கதை.

இதுபோன்ற கதாபாத்திரம் அளவெடுத்து தைத்தது மாதிரி அப்படியே பொருந்துகிறது சசிகுமாருக்கு. சென்னையில் பேன்ட் அணிந்த குதிரை ஜாக்கியாகவும் கிராமத்தில் வேஷ்டி கட்டி உதவி செய்பவராகவும் வித்தியாசம் காட்டுகிற சசிகுமார், அப்பாவை நினைத்து, ‘எனக்கு ஒரு, தோசைக் கூட சுடத்தெரியாதுய்யா’ எனக் கதறும்போது கலங்க வைக்கிறார்.

தமிழில் அறிமுகமாகி இருக்கிற பார்வதி அருண், அசல் கிராமத்துப் பெண்ணை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அவர் உடையில் இருந்து உடல் மொழிவரை அனைத்தும் பேசுகிறது. ‘காரி’யை விற்றுவிட்ட அப்பாவின் முன் உருண்டு அழும்போது, குடும்பத்தில் ஒன்றாக மாறிப் போன மாட்டுக்கும் அவருக்குமான உறவை நமக்கும் எளிதாகக் கடத்தி விடுகிறார்.

கார்ப்பரேட் வில்லன் ஜே.டி சக்கரவர்த்தியின் கதாபாத்திரம் சரியாக புரியவில்லை என்றாலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியின் குடிகார அப்பாவாக பாலாஜி சக்திவேல், சமூக ஆர்வலர் ஆடுகளம் நரேன், சசிகுமாரின் நண்பனாக வரும் பிரேம், பெரியவர் நாகி நீடு, தோழி அம்மு அபிராமி, ராம்குமார், அவ்வப்போது சிரிக்க வைக்கும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து போகிறார்கள்.

இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கனமான கதையை எளிதாகஇழுத்துச் செல்ல உதவி இருக்கிறது. கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் நாமும் உருண்டு புரண்ட உணர்வை உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கிறது கணேஷ் சந்திரவின் ஒளிப்பதிவு.

சேது, கிராமத்துக்கு வர முடிவெடுப்பதற்காக வைக்கப்பட்ட அதிர்ச்சியான அந்தக் குழந்தை காட்சி, சென்னையில் இருக்கும் தோழி அம்மு அபிராமி, கிராமத்துக்கு வந்து சேதுவுடன் இருப்பது உட்பட சில தேவையில்லாதக் காட்சிகளுக்கு தாராளமாகக் கத்திரி போட்டிருந்தால், ‘காரி’ இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்