எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத சில விநோதங்களை உள்ளடக்கியது கிராமங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணங்கள் உண்டு. அராஜகம், காட்டுமிராண்டித்தனம், மூடத்தனம் என பொதுப்புத்தியில் இருந்து பேசும் கிராமத்தின் ஒருசில கலாச்சாரங்கள் பல நுண் அடுக்குகளையும், அரசியலையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும். அந்த நுண்கலாச்சாரத்திற்கான தேவைகள் இப்போது அதிகம் இல்லாத போதிலும் எங்கோ ஒரு கிராமத்தில் எங்கோ ஒரு மூளையில் அதன் வேர்கள் விடாப்பிடியாக நீண்டு கொண்டே தான் இருக்கின்றது. அப்படியான ஒரு விஷயம் "பேய் பிடிப்பது".
பேயோட்டுவது விஷயத்திற்குள் நான் செல்லவில்லை. போயோட்டும் சடங்கிலிருந்து வெகுதூரம் விலகி இருக்கிறது பேய் பிடித்தல் என்ற அரசியல். கொஞ்சம் உற்று கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையை ஆண்டு அனுபவித்த, அனுபவிக்கிற எந்த பெண்ணிற்கும் பேய் பிடிப்பத்தில்லை. வாழ்க்கையில் எதுவுமே அழுத்தம் இல்லை என கடந்து செல்லும் "ஜஸ்ட் லைக் தட்" பெண்களையும் குழந்தைகளையும் பேய்கள் பிடிப்பதில்லை. தன் மனஉணர்வுகளை வெளிப்படுத்த தயங்கும் அல்லது அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கிறது. அவர்களும் மனக்குமுறல்களை சந்நதமாக ஆடித்தீர்த்துவிடுகிறார்கள். இந்த ஒரு சின்னப்புள்ளியை பிடித்துக்கொண்டு கிராமத்து பெண்ணின் மனஉணர்வுகளை தேடிப்பார்க்க முயன்றிருக்கும் படத்தைப் பற்றியதே இன்றைய ‘சினிமாபுரம்’ அத்தியாயம்.
கிராமத்து அத்தியாயம்: மனைவி இறந்த துக்கத்தை மதுவில் மறக்க (அப்படிச் சொல்லிக் கொள்ளும்) முயலும் ஏழைக் குடிகாரத் தந்தை சுப்பையா. அவரின் பாசக்கார மகள் பாவனி. பவானியின் மீது ஒருதலையாக ஆசை வளர்த்து அதை வெளியேச் சொல்ல தைரியம் இல்லாமல் மனதிற்குள் காதல் வளர்க்கிறார் அந்த ஊர் கூத்து வாத்தியார். 80களின் டெம்ளட் கதாநாயகன் அருண். கிராமத்து பண்ணையாரின் மகனான அருண் பட்டணத்தில் படித்து வருகிறான். படிப்பில் கவனம் இல்லாமல் சில பாடங்களில் தோல்வியடைய, படித்தது போதும் என்று மகனை கிரமாத்திற்கே திரும்பத் தருவித்துக் (வரவழைத்து) கொள்கிறார் கண்டிப்புக்கு பெயர்போன பண்ணையார் அப்பா. உழைக்கத் தேவையில்லாத அருண் ஊரைச் சுற்றி வரும் ஒருநாளில் பவானியை பார்க்க கண்டதும் காதலில் விழுகிறான். பவானியின் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகில் மயங்கி அவளைச் சுற்றிச் சுற்றி வந்து தன் முயற்சியில் வெற்றியும் பெறுகிறான். இந்தக் காதல் யாருக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்கிறது.
பவானியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு பெண் லட்சுமி. இரண்டு பெண் குழந்தைகளின் தாய். இரண்டாவது பெண்குழந்தை பிறந்ததும் லட்சுமியின் கணவன் அவளைப் பிரிந்து சென்று விடுகிறான். பக்கத்து வீடு என்பதால் லட்சுமியும் பவானியும் சகோதரிகளைப்போலவே பழகி வருகின்றனர். லட்சுமியின் குழந்தைகளும் பவானியிடம் மிகவும் பாசமாக இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றாலும் ஆண் துணை இல்லாமல் இளைமை குன்றாமல் இருக்கும் லட்சுமியின் மீது ஊரிலுள்ள பல ஆண்களுக்கு மோகம். லட்சுமியை அடைய பல வழிகளில் முயல்கின்றனர். அதில் அந்த ஊர் தபால்காருக்கும், மளிகை கடைக்காரருக்கும் பெரும் போட்டியே நிலவுகிறது. இவர்களில் இருந்து மாறுபட்டிருக்கிறார் அந்த ஊர் இரும்பு வேலை செய்பவர் (கொல்லன்). அவருக்கும் லட்சுமி மீது ஆசை என்றாலும் அவர் அவளுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் தர விரும்புகிறார். லட்சுமியின் குழந்தைகளிடம் அக்கறையுடன் இருக்கிறார். குழந்தைகளும் அவரிடம் மாமா... மாமா... என்று பிரியம் காட்டுகின்றன. இவர்கள் பக்க கதாபாத்திரங்கள் என்றாலும் தக்க சமயத்தில் கதை போக்கில் மாறுதல் ஏற்படுத்துகிறார்கள்.
தந்தையிடன் அளவுக்கதிகமான பயம் கொண்டிருக்கும் அருணிடம் தனிமையான சந்திப்பொன்றில் "உன் அப்பாவைப் பார்த்து இப்படி பயப்படுகிறாயே நம்ம காதலை எப்படி அவரிடம் சொல்லுவ" என பாவனி கேட்கிறாள். அதற்கு, "அவர்களிடம் சொல்லிப் பார்ப்பேன், கேட்கவில்லை என்றால் உன்னை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி விடுவேன்" என்கிறான். இப்படி யாருக்கும் தெரியாமல் வளரும் அருண் பவானி காதலில் ஒரு தடையேற்படுகிறது. அன்று மாலை பவானியின் அப்பா, பவானிக்கும் அவளது முறைப்பையன் தங்கவேலுவுக்கும் திருமணம் பேசி முடித்திருப்பதாக கூறுகிறார். அப்பாவை மீறமுடியாத பவானி தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டு பக்கத்து ஊருக்கு வாழச் சென்றுவிடுகிறாள்.
» யூகி Review: திகட்டும் திருப்பங்களுடன் த்ரில் அனுபவம் தரும் முயற்சி
» நான் மிருகமாய் மாற Review: சசிகுமார் மட்டும்தான் மிருகமாய் மாறினாரா?
மனஅழுத்தம் உணர்த்தும் மற்றொரு மனிதமுகம்: புது ஊர், புது வாழ்க்கையில் தன் காதலை மறக்கமுடியாமல் பவானி முதலில் தடுமாறினாலும் தங்கவேலுவின் அன்பு வெள்ளத்தில் தன்னை கரைத்து புது வாழ்க்கைக்கு தயாராகி விடுவாள். அன்பான கணவன், நிறைவான வாழ்க்கை என ஓடும் காலச்சக்கரத்தை நிறுத்த வருகிறது பவானியினுடைய தந்தையின் இறப்புச் செய்தி. தந்தையின் இழப்பைத் தொடர்ந்து கணவனுடன் அவளின் சொந்த ஊரிலேயே பவானி வாழத் தொடங்கிறாள். இப்போது அவள் வாழ்க்கை திசைமாறத் தொடங்குகிறது. பழைய காதல் மீண்டும் பவானியைத் துரத்துகிறது. பண்ணையார் மகன் அருண் தன்னோடு வந்துவிடுமாறு பாவனியை துரத்துகிறான். தான் இன்னொருவரின் மனைவி என அருணிடம் சொன்னாலும், அருணை பார்க்கப் போவதை அவள் தவிர்ப்பது இல்லை. பவானியின் பாராமுகத்தால் அருண் தற்கொலைக்கு முயல அதிலிருந்து காப்பாற்றப்படுகிறான். இதனால் கலவரமடையும் பவானியின் மனம் தடுமாறத் தொடங்குகிறது.
கணவனா காதலனா என்ற குழப்பத்திற்கு விடை தேடி லட்சுமி அக்காவிடம் செல்கிறாள் பவானி. இரு குழந்தைகளின் தாயான லட்சுமி இப்போது இருப்புப்பட்டறை மனிதனுடன் சேர்ந்து வாழத் தொடங்கி இருக்கிறாள். அவளிடம் பவானி "இப்போ உன்னோட புருஷன் வந்துட்டானா என்னக்கா பண்ணு என கேட்க, அதற்கு பதிலாக, "பொம்பளைங்கள மதிக்கிற ஆம்பளைங்கதான்டீ ரொம்ப முக்கியம்" என்பாள் லட்சுமி. லட்சுமியின் பதில் பவானியின் உள்ளத்தின் தீக்கு மீண்டும் எண்ணெய் ஊற்றி விட கணவனை கைவிட முடியாமலும், காதலைத் துறக்க முடியாமலும் தவிக்கும் பவானியின் உள்ளம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளிவிடுகிறது. கணவனுடன் தூங்கிக்கொண்டிருக்கும் போது பேய் பிடித்தவள் போல "என்னை விட்டுட்டு போயிடு.. என்னை விட்டுட்டு போயிடு" என வெறித்தனமாக நடந்து கொள்ளுவாள். ஒரு கட்டத்தில் செய்வதறியாத தங்கவேலு பவானியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவளை சமாதானப்படுத்துவான். அதன் பின்னர் நிதானத்திற்கு வரும் பவானி நமக்கு இந்த ஊரு வேண்டாம்யா நாம நம்ம ஊருக்கே போயிருவோம் என புலம்பத் தொடங்கி அமைதியாகி விடுவாள்.
அடுத்தநாள் பவானியின் வீட்டிற்கே வரும் அருண், அவளிடம் மாலையில் அவனைச் சந்திக்க வரவேண்டும் என்றும் இல்லை என்றால் தன் சாவு சேதிதான் வரும் என்றும் மிரட்டி விட்டுச் செல்லுவான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அருணைக் காணச் செல்லும் பவானி அவனிடம் என்னை "விட்டுறு சின்னையா, என்புருஷன் நான் மட்டுமே கதினு இருக்காரு. அவருக்கு என்னை விட்டா எதுவும் தெரியாது" என எடுத்துச் சொல்ல போராடிக்கொண்டிருக்கும் போது, தன் மனைவி எங்கோ போவதைப் பார்த்து பின்தொடர்ந்து வரும் தங்கவேலு அருணையும் பவானியையும் ஒன்றாக பார்த்துவிடுகிறான். அனைத்தையும் விளங்கிக்கொள்ளும் தங்கவேலு "உன் இஷ்டம் எதுவோ அதுபோல செய் பவானி நான் தடுக்க மாட்டேன்" என்கிறான். இதற்கிடையில் இனியும் அருண் உயிரோடு இருந்தால் பவானியை வாழ விடமாட்டான் என்று அருணை கூத்து வாத்தியார் கொலை செய்துவிட்டு, இனி நீ புதிய அத்தியாத்தை ஆரம்பி பவானி என கிளம்பி விடுகிறார்.
மனிதர்கள் பல விதம்: இப்படி நூல் பிடித்த மாதிரி போகும் கதையில் மனிதர்களின் பல்வேறு மனங்களை வெளிக்காட்டியிருப்பார் இயக்குநர் ருத்ரய்யா. முதலில் கூத்து வாத்தியார். பவானியை நினைத்து அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமாக கூத்துக்கதை எழுதத் தெரிந்த அவருக்கு, தனது காதலை பவானியிடம் மட்டும் வெளிப்படுத்த முடிவதில்லை. வீட்டில் உள்ள பொருளை அடகு வைத்து குடிக்கச் செல்லும் சுப்பையாவிடம் பொருளுக்கு ஈடாக பணத்தை கொடுத்து பொருளை வாங்கிக்கொண்டு, அதைக் கொடுக்கும் சாக்கில் பவானியை சந்திக்கச் சென்றாலும் தன் காதலை வெளிப்படுத்துவதில் தோல்வியே அடைகிறார். அடுத்து பவானியின் அப்பா, தன் மனைவி இறந்த துக்கத்தை மறக்கத்தான் குடிப்பதாக சொன்னாலும் கையில் காசில்லாதபோது, வீட்டில் உள்ள பொருள்களை விற்று குடிக்கும் அளவிற்கு குடிக்கு அடிமையாகி இருக்கிறார். அப்படியானால் அவர் கெட்டவரா என்றால் இல்லை. தனக்கு பின்னால் தனது மகளை பார்த்துக்கொள்ள நல்ல ஒரு பையனை பார்த்து திருமணம் செய்தும் வைக்கிறார். அவர் ஒரு சூழ்நிலைக் கைதி மட்டுமே.
மனிதமனதின் வக்கிரங்களாக அந்த கிராமத்தின் தபால்காரரும், மளிகைக்கடைக்காரரும் இருப்பார்கள். கிராமத்தில் ஒரளவிற்கு மதிக்கத்தக்க அந்தஸ்துடன் இருக்கும் இருவருக்குள்ளும் வேறு ஒரு முகமும் ஒளிந்திருக்கும். அது லட்சுமியிடம் மட்டும் தன் வீரத்தை காண்பிக்க துடித்துக்கொண்டிருக்கும். இவ்வளவுக்கும் தபால்க்காரர் கூத்தில் வேசம் கட்டி ஆடும் பாட்டுக்காரர். பார்க்க முரட்டு ஆளாய்த் தோன்று இரும்பு வேலைசெய்வர் லட்சுமியை பாக்கும் போது மட்டும் தடுமாறுவார். அவளிடம் மட்டும் வெளிப்படுத்த முடியாத தன் வீரத்தை சாராயம் குடித்தாவது வெளிப்படுத்திவிட எண்ணி இரவில் லட்சுமி வீட்டிற்கு செல்லும் அவர் அங்கு லட்சுமியை பலாத்காரமாக அடையும் எண்ணத்தோடு வரும் தபால்காரரையும், மளிகைக்கடைக்காரரையும் அடித்து விரட்டுகிறார்.
மறுநாள் தன் தவறுக்கு வருந்து லட்சுமியிடம் மன்னிப்பும் கேட்கிறார். தன்நிலையுணர்ந்து ஆண்களை பக்கத்தில் அண்ட விடாத லட்சுமி கொல்லனின் பண்பில் மயங்கி, அவரின் அன்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்கிறாள். லட்சுமி, பெண்குழந்தைகளை பெற்றதற்காகவே பழிசுமந்து வாழ்க்கையைத் தொலைத்தவள். தன்னுடன் சேர்த்து மூன்று பெண்களின் பாதுகாப்பும் வாழ்க்கையும் தன்னிடம் இருப்பதை உணர்ந்தவள். அதனாலேயே தனது ஆசைகளுக்கு கோப முகமூடி போட்டு மறைத்து வைத்திருக்கும் வித்தை தெரிந்தவள். எது தேவை, எது தேவையில்லை என்பதை சரியாக அறிந்து வைத்திருக்கும் அசல் பெண்பாத்திரம்.
அடுத்ததாக பவானி, அம்மா இல்லாமால் அப்பாவின் செல்லத்தில் வளரும் பெண். அவள் தான் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும் அதற்கான பக்குவத்தை சொல்லித்தர ஒரு வழிகாட்டி இல்லாததால், தன் ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் சிக்கித் தவித்துக்கொண்டே இருக்கிறாள். இந்த நிலை தன் திருமணத்திற்கு பின்னாலும் தொடர்கிறது.
கடைசியாக பண்ணைாயார் மகன் அருண். உழைத்து வாழ தேவையில்லாத வாலிபன். தன்னுடைய விருப்பங்களை மட்டுமே முன்னிருத்தும் இளைஞன். தனக்கு பிடித்ததால் மட்டுமே பவானியை காதலிக்கும் அருண் அந்த காதலுக்காக கடைசி வரை எதுவும் செய்யாமல் தன் ஆசைகளை மட்டும் அவள் மீது திணித்துக்கொண்டிருப்பான். இவர்கள் எல்லோரும் எல்லா கிராமத்திலும் காணக்கிடைக்கும் சாதாரண மனிதர்கள்.
ருத்ரய்யா பார்த்த கிராமம்: பொதுவாக கிரமாம் என்றாலே தமிழ் சினிமாவில் ஆலமரம், மேலத்தெரு, கீழத்தெரு ஊர் சாவடி என சில எழுதப்படாத விதிகள் உண்டு. ஆனால் ருத்ரய்யாவின கிராமத்து அத்தியாத்தில் இவை எதுவும் இல்லை. இது கிராமத்து கதை என்பதற்கு சாட்சியாக சில வயல்வெளி காட்சிகள், பண்ணையார், கூத்து வாத்தியார், தபால்காரர் போன்ற சிற்சில அம்சங்களே உள்ளன. இந்தக் கிராமத்தில் சாதி சண்டைகள் இல்லை. பஞ்சாயத்து இல்லை. சரி அப்படியென்றால் கிராமத்து அத்தியாயம் என்ற பெயரால் மட்டும் இது கிராமத்து படமாகி விடுகிறாதா. அதுதான் இல்லை, வெளிப்படுத்த முடியாத மன அழுத்தம் தரும் பிறழ்ச்சியை ஒரு கிராமாத்து கலாச்சாரம் எப்படி கையாண்டு கடந்து செல்கிறது என்பதையும், மனிதனின் பல்வேறு முகத்தையும் தினமும் தின்று செறித்து கடந்து செல்லும் கதாபாத்திரங்களின் செயல்களில் இது ஒரு கிராமத்து படமாக நிற்கிறது. இன்னொரு படி மேல போய், உழைப்புக்கு ஆண்களும் பெண்களும் உழைத்து வீடு வந்து சேரும் செல்வத்தை காப்பாற்றி குடும்பமாக்குவதற்கு பெண்கள் என்ற ஒரு எழுதப்படாத விதியை படம் முழுவதும் இயக்குநர் காட்டியிருப்பார். அம்மாவிக்கு பிறகு அப்பாவை ஆளாக்கும் பவானி, திருமணத்திற்கு பிறகு தங்கவேலுவை உருவாக்கும் வேலையினை விரும்பி செய்வாள். கொல்லனின் வாழ்க்கையில் லட்சுமியின் வருகைக்கு பின்னர் அவரின் வாழ்க்கை முறையே மாறிப்போயிருக்கும்.
அவள் அப்படித்தான் படத்தில் பட்டணத்து பெண்ணின் தன்மான உணர்வை மஞ்சு மூலம் வெளிப்படுத்தியிருக்கும் ருத்ரய்யா, இந்தப் படத்தில் பவானி மூலம், பெண்ணின் மனோ பலத்தை ஆண்களை அவர்கள் கட்டமைக்கும் விதத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
பேய் பிடித்தல் என்னும் மனபிறழ்வு: உண்மையில், மனதில் இருக்கும் வெளிப்படுத்த முடியாத அழுத்தத்தின் வேறு ஒரு வடிவத்தை தான் கிராமத்துக் கலாச்சாரம் பேய் பிடித்தல் என்று அழைத்து என்றே நினைக்கத் தோன்றுகிறது. பேய்பிடித்தல் நிகழ்வின் பின்னால் இருந்த அரசியல் வெளிப்படுத்த முடியாத உள்ளக் குமுறல்தான் என்ற தோன்றுகிறது. கிராமத்து அத்தியாயம் படத்தில் சுற்றி இருக்கும் ஆண்களால் இரண்டு பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். ஒன்று லட்சுமி, மற்றொன்று பவானி. தனது தேவை என்ன என்பதில் தெளிவாக இருக்கும் லட்சுமி அழுத்தங்களை சாதாரணமாக கடந்து விடுகிறாள். பவானியோ மனதின் ஆட்சிக்கு பழியாகி விடுகிறாள்.
பின்னிரவில் வெறிவந்தாடும் மனைவிக்கு பேய் பிடித்துவிட்டது என்று அடுத்தநாள் அதற்கான சடங்கில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது முற்போக்கு இயக்குநர் பவானியை பட்டணத்து மருத்துவரிடம் காண்பிக்க வைத்து விளங்கிக்கொள்ள முடியாத நோயின் பெயரைச் சொல்லி மருத்துவ விளக்கம் கொடுத்திருந்தாலும் படம் தன் பாதையில் இருந்து பிசகியிருக்கும். இயக்குநர் ருத்ரைய்யாவின் திரையறிவு, இரண்டு ஆண்களுக்கு மத்தியில் மாட்டித் தவிக்கும் பேதைப் பெண்ணின் மனக்கொந்தளிப்பை கொஞ்சம் நேரம் ஆவேசமாக வெளிப்படுத்தி சந்நதம் வந்தாடும் நிகழ்வை ஒரு வடிகாலாக மட்டுமே பயன்படுத்திய இருக்கும் விதம் படத்தை தமிழ் சினிமாவின் காவியத்தளத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
> முந்தைய அத்தியாயம்: சினிமாபுரம் - 3 | ஆத்தா உன் கோயிலிலே: மானத்தை பெண்களில் தேடிய கிராமத்தின் கோரமுகம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago