மோடி நோட்டு உத்தி: தமிழ் திரையுலகுக்கு சாதகமா? பாதகமா?

By கா.இசக்கி முத்து, மகராசன் மோகன்

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து தமிழக மக்கள் பலரும் தங்களிடம் இருக்கும் நோட்டுகளை மாற்ற காலையிலேயே வங்கி வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கேட்டால், பாதிப்பு தான் என்று குரல் கேட்கிறது.

திரையரங்க வசூல் பாதிப்பு

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள மால் திரையரங்குகளில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே நேற்றைய காட்சிகளை பார்த்துள்ளனர். இதுகுறித்தி சென்னை கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ் சிதம்பரம் கூறும்போது, "இந்த அறிவிப்பு வெளியான நேற்றுமுன் தினம் இரவுக் காட்சி டிக்கெட் வழங்கும்போது எவ்வித தடையும் இல்லாமல் 500, 1000 நோட்டுகளை வாங்கிக்கொண்டு டிக்கெட்டுகளை வழங்கினோம்.

இரவுக்காட்சி திரைப்படத்துக்கு இடையே விடும் இடைவேளை நேரத்திலிருந்துதான் திரையரங்கில் அமலுக்கு கொண்டு வந்தோம். திரையரங்க கேன்டினில் உணவுப்பொருட்கள் வாங்கும்போது மக்கள் பெரிதாக சிரமத்துக்கு உள்ளானார்கள். பிளாஸ்டிக் பணம் என்று சொல்லப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருந்தவர்களுக்கு அந்த சிரமம் பெரிதாகப் படவில்லை.

நேற்று பகல் காட்சி தொடங்கி இரவுக் காட்சி வரைக்கும் படம் பார்க்க வருபவர்களின் கூட்டம் பாதியாக குறைந்தது. பலரும் 500,1000 நோட்டுகளுடன் திரையரங்கம் வந்து டிக்கெட் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து திரும்பிச் சென்றனர். இன்னும் இரண்டொரு நாட்களுக்கு இந்த பாதிப்பு தொடரும் என்றே தெரிகிறது. 500,1000 ரூபாய்களின் புதிய நோட்டுகள் எளிதாக கிடைக்கும் வரைக்கும் இந்த சிரமம் இருக்கத்தான் செய்யும்!’’ என்றார்.

பட வெளியீட்டில் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால், 'கடவுள் இருக்கான் குமாரு' தங்களுடைய வெளியீட்டை நவம்பர் 17-ம் தேதிக்கு மாற்றியிருக்கிறது. மேலும், நவம்பர் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஏனென்றால் படத்தின் வெளியீட்டு சமயத்தில் தான், எத்தனை திரையரங்குகளில் வெளியீடு என்று கணக்கிட்டு க்யூப்பிற்கு மொத்தமாகப் பணம் கட்டுவார்கள். அந்த பணத்தை காசோலையாக செலுத்த முடியாது. RTGS முறையில் அல்லது மொத்த பணமாக கொடுக்க வேண்டும். இதனால் பட வெளியீட்டில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், எப்படியாவது பணத்தை தயார் செய்து வெளியிட வேண்டுமே என்ற முனைப்பில் பணத்தை தயார் செய்து வருகிறார்கள்.

நடிகர்களுக்கு மகிழ்ச்சியா?

முன்னணி நடிகரின் மேலாளர் ஒருவரிடம் பேசிய போது, "அனைத்து நடிகர்களுமே பிரதமருக்கு வாழ்த்து சொன்னாலும், உள்ளுக்குள் கடுமையான அதிருப்தியில்தான் இருப்பார்கள். இதில் ஒரு சில முன்னணி நடிகர்கள் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் இன்றைய நடிகர்கள் பலரும் சம்பளத்தை முழுமையாக வரிக் கணக்கில் கொண்டு வருவதில்லை.

பாதி கருப்பு, பாதி வெள்ளை என்ற அடிப்படையில்தான் தமிழ் சினிமாவே செயல்பட்டு வருகிறது. ஒரு முன்னணி நடிகர் எப்போதுமே தன்னுடைய அலுவலகம் வந்தவுடன், அவருடைய அறையில் இருக்கும் பீரோவை திறந்து பூஜை செய்துவிட்டு தான் பணிகளைத் தொடங்குவார். எப்போதுமே வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணத்தைச் செலுத்துவிட்டு, மீதி அனைத்துமே அந்த பீரோவில் தான் இருக்கும். அவருடைய நிலைமையை இப்போது யோசித்துப் பாருங்கள்" என்று முடித்துக் கொண்டார்.

தமிழ் திரையுலகின் பொற்காலம் தொடங்கிவிட்டது!

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், தமிழ் திரையுலகின் சூழல் எப்படியிருக்கும் என்பது குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, "இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா சிறப்பாக இருக்கும். நடிகர்களின் சம்பளம் பெருமளவு குறையும். தமிழ் திரையுலத்துக்குள் இருக்கும் பணப்புழக்கம் அப்படியே குறையும். அனைத்துமே கணக்கின்படி நடைமுறைப்படுத்தப்பட்டால், அனைவருமே ஒழுங்காக வரிக்கட்டுக்கூடிய சூழல் உருவாகும். இதனால் திரையுலகம் சுபிட்சம் பெற வாய்ப்புண்டு.

கருப்புப் பணத்தைக் கொண்டு படம் எடுக்க வருபவர்கள் குறைவார்கள். நேர்மையான முறையில் படம் தயாரிப்பவர்களால் மட்டுமே படம் தயாரிக்க முடியும். அவர்கள் நியாயமான முறையில் மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தலைவணங்கி வரவேற்கிறேன். இந்த முடிவால் பட வெளியீட்டில் பிரச்சினை இருக்காது. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திருப்பூர் சுப்பிரமணியன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்