காலங்களில் அவள் வசந்தம்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

பெரும்பாலான வெகுஜனத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போன்றே நிஜ வாழ்க்கையிலும் காதலை அணுகுகிறான் ஷ்யாம் (கௌசிக் ராம்). அதை அவனது வெள்ளந்தி குணமாக எண்ணித் திருமணம் செய்து கொள்கிறாள் ராதே (அஞ்சலி நாயர்). மகிழ்ச்சியாகச் செல்லும் மண வாழ்வின் தருணங்களை, சினிமா தருணங்கள் போலவே கொண்டாட நினைக்கும் கணவனுக்கு அதை உணர்த்தி, யதார்த்த உலகுக்கு அவனை இழுத்து வர முயலும்போது ஈகோ வெடிக்கிறது. இறுதியில் ராதே தன் முயற்சியில் வெற்றியடைந்தாளா, இல்லையா என்பது கதை.

மனைவியை ‘பப்பாளி’ என்றழைத்து, அவளது புற அழகைக் கொண்டாடி, அவளது ஆடைக்குள் ஐஸ்கட்டி வில்லைகளை தூக்கிப்போட்டு விளையாடும் கூட்டுப்புழு பருவத்தில் இருந்துகொண்டே, தன்னையொரு ஃபாண்டசி பட்டாம்பூச்சியாக எண்ணிச் சிறகடிக்க விரும்பும் ஷ்யாம், காதலின் உன்னதம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்தி, கற்பிதங்களிலிருந்து அவனை விடுதலை செய்ய முயலும் முதிர்ச்சியும் முயற்சியும் கொண்ட பெண்ணாக வரும் ராதே, அவள் சுயமாக எடுத்த தவறான முடிவால் மகனிடம் சிக்கிக்கொண்டு தடுமாறுவதைப் பார்த்து, மகனின் பக்கம் நிற்காமல் மருமகளின் பக்கம் நிற்கும் நாயகனின் அப்பா, மகனுடைய முதிரா மனநிலைக்கு அடிப்படை முன்மாதிரியாக இருக்கும் அவனுடைய அம்மா என அட்டகாசமான ‘கதாபாத்திர எழுத்து’ வழியாக ரசனையும் நகைச்சுவையும் உணர்வும் தொட்டுக் கொண்டு கேரக்டர்களை உருவாக்கி உலவவிட்டிருக்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத்.

திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் ‘சினிமேடிக்’ காதல், காலம் காலமாக விமர்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. அதையே ஒரு முழுநீள முதன்மைக் கதாபாத்திரம் வழியாக ‘ஸ்பூஃப்’ செய்து படமெடுத்து அதை ரசிக்கவும் வைத்திருப்பதில் முழுமையாக வெற்றியைப் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர். அதற்கு ரசிக்கும்படியான ‘சினிமாத்தனம்’ தவிர்க்கப்பட்ட வசனங்கள் பேரளவில் கைகொடுத்துள்ளன.

சினிமாத் தாக்கம் மிகுந்த நாயகனின் அணுகுமுறையால் அவன் சம்பாதித்துக்கொள்ளும் வில்லனும் அவன் எடுக்கும் இறுதி முடிவும் சினிமாக் காதலைப் பகடி செய்யும் படத்துக்குள் ‘சினிமா ஜிகினா’வாக இடம் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். என்றாலும் வில்லன் எடுக்கும் இறுதி முடிவு நம் வயிற்றைப் பதம் பார்க்கிறது.

புதுமுக நாயகன் என்று சொல்ல முடியாதபடி ‘ஷயாம்’ கதாபாத்திரத்தில் ‘ஸ்டைலா’கவும் துறுதுறுப்புடனும் நடித்து அறிமுகப் படத்திலேயே பார்வையாளரின் மனதைக் கொள்ளையடித்துச் செல்கிறார் கௌசிக் ராம். காதலியை கைவிடவும் முடியாமல் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்கிற உண்மையைச் சொல்லவும் முடியாமல் விலகியோடும் இடத்தில் கௌசிக்கின் நடிப்பு கூடுதல் நேர்த்தி. ‘நெடுநெல் வாடை’, ‘டாணாக்காரன்’ படங்களின் மூலம் கவனிக்க வைத்திருந்தாலும் ‘ராதே’ கதாபாத்திரத்தின் ஆன்மாவை அட்டகாசமாக ‘கேச்’ செய்து அசத்தியிருக்கிறார் அஞ்சலி நாயர். நாயகனின் அப்பாவாக வரும் மேத்யூ, அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதன் ஆகியோரும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ராதேவுக்கு அடுத்த இடத்தில் அனுராதாவாக வரும் ஹிரோஷினி, கிடைத்த சின்ன இடைவெளியில் தன் திறமையைக் காட்டிச் சென்றுவிடுகிறார்.

“அடை மழையில் வந்து மணிரத்தினம் பட ஹீரோ போல எங்கிட்ட நீ காதலைச் சொன்னதை மறக்கவே முடியாது!” என்று ஷ்யாமை அவர் தன்வசப்படுத்தும்போதும், லிப்ட்டில் செல்லும்போது ராதே முன்னால் ஷ்யாமிடம் சண்டைபோட்டு பிரியும்போதும் ஹிரோஷினியால் திரையரங்கு அல்லோலப்படுகிறது.

சினிமா சித்தரித்து வந்துள்ள கற்பிதங்களில் தோய்ந்த காதலை மீட்டெடுக்கும் கதையில் வரும் நாயகன், நாயகி, வில்லன், துணைக் கதாத்திரங்கள் என அனைவரையும் தோற்றப்பொலிவுடன் காட்சிப்படுத்திருப்பதுடன், இயக்குநர் திரைக்கதையின் நகர்வுக்குக் கையாண்டுள்ள, மழைக்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் எனும் ‘கருத்தாக்க’த்துக்கு அணுகூலமான ஒளிப்பதிவை தந்துள்ள கோபி ஜெகதீஸ்வரனை இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்ல வேண்டும். கதைக்கும் களத்துக்குமான இசையை வழங்கியிருக்கும் ஹரி எஸ்.ஆரின் இசை, ஃபாண்டஸியை விரும்பும் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் களத்துக்கான எஸ்.கேயின் கலை இயக்கம் என தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வசீகரிக்கிறது.

சினிமாவின் கற்பிதங்களை கதாபாத்திரங்கள் வழியாக மறைமுகமாக கிண்டல் செய்துகொண்டே, அதை இனிக்க இனிக்க ரசிக்க வைக்கும் இலக்கியத் தரமான பொழுதுபோக்குக் கதைக் களமாகவும் மாற்றிய வகையில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை வயது வேற்றுமையின்றி ரசித்துக் கொண்டாடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE