‘நானே வருவேன் படத்தில் சைகை மொழி சவாலாக இருந்தது' - எல்லி அவ்ரம்

By செ. ஏக்நாத்ராஜ்

‘நானே வருவேன்’ மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், எல்லி அவ்ரம். வாய் பேச முடியாத, ஒரு கொடூர கணவனிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் கேரக்டரில் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார் எல்லி. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், ஸ்வீடனை சேர்ந்தவர். தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறும் எல்லி, தனது பெயரை சரியாக எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன் பேச ஆரம்பித்தார்.

இந்தி படங்கள்ல நடிச்சுட்டு வர்றீங்க. ‘நானே வருவேன்’ வாய்ப்புக் கிடைச்சது எப்படி?

இந்தப் படத்துக்காக, எனக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இதுல ‘மாதுரி’ங்கற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மானேஜர் தங்கதுரை சார், தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இருப்பதா, மெசேஜ் பண்ணினார். முதல்ல, இது உண்மைதானான்னு நம்ப முடியலை. உண்மைன்னு தெரிஞ்சதும் உற்சாகமானேன். சென்னை வந்து இயக்குநர் செல்வராகவன் சாரைப் பார்த்தேன். கதை சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். இப்படித்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன்.

படத்துல உங்களுக்கு வசனமே இல்லை. ஏன்னா, அது வாய் பேச முடியாத கேரக்டர்...எப்படி தயாரானீங்க?

அது சவாலான கேரக்டர். பொதுவா எனக்கு சவாலான விஷயங்கள் பிடிக்கும். இந்த கேரக்டருக்காக சைகைமொழி பேசி நடிக்கணும். கத்துக்கறதுல நான் கொஞ்சம் வேகமானப் பெண். முதல் நாள்லயே ‘சைகை’யைக் கத்துக்கிட்டு நடிச்சேன். எனக்கு செட்ல ஒருத்தர் அதைச் சொல்லிக் கொடுத்தார். கடவுள் அருளால அது சிறப்பாகவும் தனித்துவமாகவும் அமைஞ்சது. எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே வெளிப்படுத்தணும். நான் ரசிச்சு பண்ணினேன். என் நடிப்பு, பாராட்டப்படறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு.

தனுஷ் சிறந்த நடிகர். அவரோட நடிச்ச அனுபவம்?

அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இயக்குநர் செல்வராகவன்கிட்டயும்தான். டெக்னிக்கலாகவும் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. செட்ல, கூட நடிக்கிறவங்க சவுகரியமா இருக்கறது முக்கியம். நான் ரொம்ப இயல்பா இருக்கறதுக்காக அவங்கஎல்லோருமே, என் மேல அக்கறை எடுத்துக்கிட்டாங்க. இதுக்காக அவங்களை பாராட்டாம இருக்க முடியாது.

தமிழ், இந்தி சினிமா துறைகள்ல என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீங்க?

தமிழ் இன்டஸ்ட்ரியில ஷூட்டிங் ஸ்பாட், அமைதியா இருக்கு. எல்லோருமே வாக்கி டாக்கி பயன்படுத்தறாங்க. நடிகர், நடிகைகளை சிறப்பா கவனிக்கிறது, அவங்களோட சாப்பாடு விஷயங்கள்ல இருந்து பார்த்துக்கிற அக்கறை எல்லாமே நல்லா இருக்கு. பாலிவுட்ல வேகம், எனர்ஜி வித்தியாசமா இருக்கும்.

இந்திய சினிமாவுல கடந்த சில வருஷமா வெளிநாட்டு நடிகைகள் அதிகமா வந்திருக்காங்க. உங்க போட்டி எப்படி இருக்கு?

எந்த நாட்டுக்குப் போனாலும் அங்க போய் உங்களைநிரூபிக்கிறது கடினமான விஷயம்தான். இந்தியசினிமாதுறையில, கடந்த 10 வருஷமா அதிகமானவெளிநாட்டு நடிகர், நடிகைகள் பங்கேற்பது அழகா இருக்கு. ஹாலிவுட்ல அனைத்து நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் வேலைப் பார்ப்பாங்க. அதுபோல இந்திய சினிமாவும் மாறிட்டிருக்கு. எந்த வெளிநாட்டு நடிகரா இருந்தாலும் அவங்க ஒரு கேரக்டராகத்தான் நடிக்கிறாங்க. இந்தப் பயணம் கடினமானதுதான். காஸ்டிங் இயக்குநர்கள், சினிமா இயக்குநர்களுக்கு நம் திறமையை நம்ப வைக்கணும். ஆனா, எனக்குச் சிறப்பான இயக்குநர்கள் கிடைச்சிருக்காங்க. என் திறமையை நம்பி, அதை வெளிப்படுத்தற, என்னை நிரூபிக்கிற வாய்ப்புகளைக் கொடுத்திருக்காங்க. அது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.

‘பாரிஸ் பாரிஸ்’ படத்துல நடிச்சிருந்தீங்களே?

ஆமா. இந்தியில வெளியான ‘குயின்’ ரீமேக். தமிழ், கன்னடத்துல, காஜல் அகர்வால், பாருல் யாதவ் கூட நடிச்சிருக்கேன். அந்தப் படம் மூலமா தமிழ்ல அறிமுகமாக இருந்தேன். ‘நானே வருவேன்’ முந்திருச்சி. ‘பாரிஸ் பாரிஸ்’ படத்துல, பாதி இந்தியன், பாதி பிரெஞ்ச் பெண் கேரக்டர். அந்தப் படம் வந்தால் என் திறமை மேலும் தெரியவரும்னு நம்பறேன். தமிழ்ல நானே டப்பிங் பேசியிருக்கேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE