‘விக்ரம்’ சாதனையை ‘பொன்னியின் செல்வன் 1’ முறியடிக்கும். ஆனால் 2.0..? - ரமேஷ் பாலா நேர்காணல்

By கலிலுல்லா

தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘பொன்னியின் செல்வன் 1’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்தது கமலின் 'விக்ரம்' படம்தான். அந்த சாதனையை 'பொன்னியின் செல்வன்' முறியடிக்கும். ஆனால், ரஜினியின் ‘2.0’ உலக அளவில் செய்த சாதனையை முறியடிப்பது கடினம் என்கிறார் ரமேஷ் பாலா. தமிழ்த் திரையுலகில் தற்போது திரைப்பட வர்த்தகம் எப்படி நடிக்கிறது, அதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து திரைத்துறை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவிடம் பேசினோம்.

திரைப்பட வர்த்தகம் எப்படி நடக்கிறது? - ''படத்தின் தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுத்து முடித்ததும், அதனை பட விநியோகஸ்தர்களுக்கு விற்றுவிடுவார். அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு விநியோகஸ்தர் இருப்பார் அல்லது தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு என தனித்தனி ஏரியாவாக உள்ளது. உதாரணமாக, ஒரு படத்தை ரூ.10 கோடிக்கு தயாரித்துள்ளார்கள் என்றால், அதனை தமிழ்நாட்டில் உள்ள 10 ஏரியாக்களுக்கு பிரித்து விற்றுவிடுவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிடம் ஒரு மினிமம் தொகையை பெற்றுக்கொண்டு கொடுத்துவிடுவார்கள். உதாரணமாக, திருநல்வேலியில் 25 முதல் 50 திரையரங்குகள் உள்ளன என வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அளவிலான தொகையை அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு படத்தை அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும், திரையரங்கு உரிமையாளர் அந்தக் குறிப்பிட்ட தொகையை விநியோகஸ்தருக்கு கொடுத்துதான் ஆக வேண்டும்.

அதேபோல ரூ.5 லட்சத்திற்கு மேல் வரும் பணம், அதாவது கொடுத்த தொகையை விட கூடுதலாக படம் லாபம் பார்த்தால், விநோயகஸ்தரும், திரையரங்கு உரிமையாளரும் அதைப் பிரித்து எடுத்துகொள்வார்கள். அதேசமயம் சிறிய படங்களாக இருக்கும் பட்சத்தில் திரையரங்கைச் சேர்ந்தவர்கள் விநியோகஸ்தருக்கு பணத்தை கொடுக்க மாட்டார்கள். அப்படியான படங்களை பொறுத்தவரையில் விநியோகஸ்தரிடமிருந்து படத்தை வாங்கிக்கொண்டு வரும் வசூலில் பாதியை பிரித்துக்கொள்வார்கள். அது 60 சதவீதம், 40 சதவீதம் அல்லது 50-50 என அவர்களின் ஒப்பந்தத்தை பொறுத்தது. ஆக, அப்படித்தான் ஒரு திரையரங்கு உரிமையாளருக்கும் விநியோகஸ்தருக்குமான உறவு முறை இருக்கும். இதுதான் நடைமுறை.

தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் கூட இதேபோன்ற நடைமுறைதான் இருக்கும். அதாவது கூடுதல் லாபம் கிடைத்தால் விநியோகஸ்தர் தயாரிப்பாளருக்கு அந்த தொகையை பிரித்து கொடுக்க வேண்டும்.”

படம் நஷ்மடைந்துவிட்டாலும் திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தருக்கு பணத்தை கொடுத்துதான் தீர வேண்டுமா? - “அது அவர்களின் ஒப்பந்ததை பொறுத்தது. மினிமம் கேரண்டிக்கு திரையரங்கைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்டால் காசு கொடுத்துதான் ஆகவேண்டும். ஒரு சிறிய படம் வெளியாகிறது என்றால், அதில் சதவீத அடிப்படையில் தான் பங்கை பிரிப்பார்கள். தியேட்டரில் படம் ஒரு லட்சம் வசூலித்தால் 50 ஆயிரம் கொடுத்துவிடுகிறேன் என கூறிவிடுவார்கள். தவிர கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற 10 முக்கிய நடிகர்களின் படங்கள்தான் திரையரங்கிலிருந்து விநியோகஸ்தருக்கும், அவரிடமிருந்து தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.”

இந்த வர்த்தகம் ஒளிவு மறைவில்லாமல் நடைபெறுமா? - “விநியோகதஸ்தர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் அலுவலகங்கள் இருக்கும். ஒரு திரையரங்கில் கூட்டம் கூடுகிறதா இல்லையா உள்ளிட்டவற்றை அவர்கள் கண்காணிப்பார்கள். மேலும், நம்பிக்கையின் அடிப்படையில்தான் படம் கொடுக்கப்படுகிறது. ஏமாற்றினால் அடுத்த முறை படத்தை கொடுக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் தற்போது அதிக அளவில் படங்களை ரெட் ஜெயண்ட் படங்களை விநியோகிக்கிறது. அவர்களை ஏமாற்றினால் என்ன மாதிரியான நடவடிக்கை இருக்கும் என நமக்கே தெரியும். ரெட் கார்டு, ப்ளாக் லிஸ்ட் போன்ற நடவடிக்கை சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது விதிக்கப்படும். அடுத்தமுறை அவர்கள் வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்படும்.”

உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் அதிக படங்கள் விநியோகப்பதன் பின்னணியில் ‘அழுத்தம்’ ஏதேனும்..? - “இல்லை. திரையரங்கைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கணக்கு வழக்கு அவர்களிடம் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் நேரடியாக நடக்கிறது. மற்ற விநியோகஸ்தர்கள் 9 மாதங்கள் கழித்துதான் ஒரு படத்தின் ஷேரை கொடுக்கிறார்கள். இவர்கள் வார வாரம் படத்தை ரிலீஸ் செய்வதால் அவ்வப்போதைய கணக்கு வழக்கை முடித்து கொடுத்துவிடுகிறார்கள்.

ஏதாவது, ஒரு படத்தில் நஷ்டம், லாபம் இருந்தால் அடுத்த வாரம் வரும் படத்தில் சரிசெய்துகொள்ளலாம் என உறுதியளிக்கின்றனர். மற்ற விநியோகஸ்தர்கள், ஒரு படம் ஓடவில்லை என்றால், அடுத்த மூன்று மாதம் கழித்து தான் மற்றொரு படத்தை விநியோகம் செய்வார்கள். அதுவரைக்கும் காத்திருந்து அட்வான்ஸில் கழித்து கொள்ளலாம் அப்படி சொல்வார்கள். ஆனால் ரெட் ஜெயண்ட் அப்படியில்லை. வார, வாரம் படம் ரீலிஸ் செய்வதால் அது எங்களுக்கு வசதியாக உள்ளது என்கிறார்கள். இந்த வாரம் படம் ஓடவில்லை என்றால், அடுத்த வாரம் பெரிய படம் வரும்போது ஈடுகட்டி விடுகிறார்கள்.”

தற்போது ஒரு படம் ஒடவில்லை என்றால், அந்த நஷ்டத்தை ஓடிடியும், சார்டிலைட் ரைட்ஸும் ஈடுகட்டிவிடுகிறதா? - “ஆமாம். ஒரு தயாரிப்பாளரை பொறுத்தவரை, அதீத பட்ஜெட்டில் எடுக்காமல் பன்மொழிகளில் வெளியாகும் ஒரு படம் எப்படியும் சாட்டிலைட், ஓடிடி வர்த்தகம் மூலம் நஷ்டத்தை ஈடுக்கட்டிவிடுகிறது. திரையரங்க வசூல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்தபட்ட வறுவாயாக மாறிவிட்டது. ஒரு தயாரிப்பாளருக்கு இன்றைக்கு ஓடிடியும், சாட்டிலைட்டும்தான் அதிக லாபத்தை பெற்று தருகிறது.”

‘பொன்னியின் செல்வன்’ தமிழ் சினிமாவின் கடந்த கால சாதனைகளை முறியடிக்கும் வகையில் வசூலித்துக் கொண்டிருக்கிறதா? - “ஆம், தமிழ்நாட்டை பொறுத்தவரை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்தது கமலின் 'விக்ரம்' படம்தான். ரூ.180 கோடியை வசூலித்து முன்னிலையில் இருக்கிறது. அந்த வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடிக்கும் என கணிக்கப்படுகிறது. உலக அளவில் ரஜினியின் '2.0' படம் ரூ.700 - 750 கோடியுடன் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அதை, 'பொன்னியின் செல்வன்' முறியடிப்பது கஷ்டம் தான். காரணம் '2.O' இந்தியிலும், தெலுங்கிலும் நன்றாக ஓடியது. 'பொன்னியின் செல்வன்' இந்தியிலும், தெலுங்கிலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எப்படியும் அடுத்த 3 வாரங்களுக்கு இந்தப் படம் தான் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப் பார்க்கும்போது தமிழகத்தில் 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்திலும், உலக அளவில் ‘2.0’ அடுத்தபடியாக இரண்டாம் இடத்திலும் இந்தப் படம் இருக்கும் என தெரிகிறது.''

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE