இளையராஜாவுடன் இசையிரவு 4 | ‘வெள்ளைப் புறா ஒன்று’ - கண்ணோரம் உண்டாகும் கார்கால சிலிர்ப்பு!

By குமார் துரைக்கண்ணு

பெருஞ்சுமையான கவலைக் குப்பைகளைத் தூக்கிச் சுமந்த களைப்பின் அசதியில் அயர்ந்து கிடக்கிறது உடல். இன்றோடு இது முடியப்போவது இல்லை என்ற உண்மைதான், மனதையும் நினைவுகளையும் நாளைக்கு தயார்படுத்துகிறது. பெருஞ்சுமையின் பெருத்த கவலை மூளையினூடாக மனதுக்குள் நுழைய முயற்சிக்கின்றன. எப்படியாயினும் நாளையைக் கடக்க முந்தைய நாள் இரவைக் கழிக்க ஒரு பேராற்றலும், புத்துணர்வும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த வேலையைத்தான் இளையராஜாவின் இசையும் பாடல்களும் 46 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் தந்து கொண்டேயிருக்கிறது.

அதுவும் ஏற்கெனவே கேட்ட பால்களுக்கும் இந்த சக்தியை மீண்டும் மீண்டும் எப்படி புதுப்பித்துக் கொண்டு நம்மை ஆட்கொள்வதுதான், விடை காண முடியாத கேள்வியாக இன்றுவரை தொடர்கிறது. இதனால்தான் அந்தப் பாடல்கள் மனங்களின் காயங்களுக்கான மருந்தாக பாவிக்கப்படுகிறது. மனமே எங்கிருக்கிறது என்று தெரியாத சூழலில், அதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மருந்து பூசி குணமாக்கும் வல்லமை கொண்டுள்ளதால், இளையராஜாவின் பாடல்கள் எப்போதும் நம்மை ஆற்றுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன என்றால் மிகையாகாது.

அந்த வகையில் இந்தப் பாடல் காதலர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப்போகிறவர்கள் என அனைவருக்குமே பிடித்த மறக்கமுடியாத பாடல். எப்போது கேட்டாலும் மெய்மறந்து ரசிக்கும் வகையில் அமைந்த பாடல். குறிப்பாக, பயணங்களின்போது இந்தப் பாடலை, மூச்சுவிடவே சிரமப்படும் நகரங்களின் சாலைகள் இல்லாமல், டோல்பூத்களின் தொந்தரவு இடையூறுகள் இல்லாத நீண்ட சாலைகளில் பயணிக்கும்போது கேட்டுப்பார்த்தால், கோடி அருவி நம்மீது கொட்டிய சுகம் உண்டாகும்.

1982-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘புதுக்கவிதை’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே' பாடல்தான் அது. கதைப்படி நாயகனின் நிறத்தின் காரணமாக வெறுக்கும் நாயகி, பின்னர் காதலிக்கத் தொடங்குவார். அதுபோன்ற சூழலில் இந்தப் பாடல் வரும். பச்சைப்பசலேன காதலில் இன்னும் பச்சையம் தங்கியிருப்பதற்கு இதுபோன்ற பாடல்கள்தான் காரணமாக இருக்குமோ என யோசிக்கும் அளவுக்கு இந்தப் பாடலை அமைத்திருப்பார் இளையராஜா.

அதுவும் பாடலை கந்தர்வக் குரலோன் கே.ஜே.யேசுதாஸ் உடன் எஸ்.ஜானகி இணைந்து பாடியிருப்பர். பாடல் தொடங்குவதற்கு முன்னர், வாகனத்தின் பேட்டரியை மறைத்து வைக்கும் காதலி, அந்த வழிவரும் காதலனிடம் உதவி கேட்பார். பிறகு காதலியின் நடிப்பை காதலன் கண்டுபிடிக்கும்போது, வாகனம் நகர்ந்து காதலர்களுக்கு கேமரா போக்கஸாகும். இந்தச் சின்ன இடத்துக்கு பாட்டின் சூழலுக்கு கொண்டு போகும்படி பாடலின் தொடக்கத்தில், தேடலையும் கண்டடைதலின் சுகத்தையும் கிடார் வயலின்கள் துணைகொண்டு கடத்தியிருப்பது அபாரமாக இருக்கும்.

இதுமுடிந்த மாத்திரத்தில், ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ என்ற ஹம்மிங் ஜானகி அம்மா வாய்ஸ்ல் கேட்கும்போது நகர்வதாக நம்பப்படும் மேகங்கள் ஒரு கணம் நின்று கேட்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் கேட்பவர்களின் மனதை இழைக்கத் தொடங்கியிருக்கும் நேரத்தில், பாடல் வரிகள் இளையராஜாவின் கம்பி, காற்றுக் கருவிகளின் மேல் பட்டுத்தெறித்து லாவகமாக விழும் சுகத்தை அனுபவிப்பது பேரானந்தம். பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். இந்தக் கூட்டணியின் மறக்கமுடியாத ஆல்பங்களில் புதுக்கவிதையும் ஒன்று.

" வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புது கவிதை
இல்லக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை" - இந்த வரிகள் மட்டுமே ஒரு காதல் கவிதையை போல் இருக்கும். பல்லவியிலே இப்படி என்றால் சரணங்களில் சொல்லவா வேண்டும்.

"கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூ தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட"

இந்த சொல்லுக்கு இதுதான் பொருள் என்றெல்லாம் தனித்தனியே விளக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஆதிக்கம் செய்திருக்கும் இந்த பாடலின் வரிகள். இரண்டாவது சரணத்தில்,

"பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் அணை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக" என்று பூமழையாய் பொழிந்திருப்பார் வைரமுத்து.

இந்தப் பாடல் முழுக்க வயலின், கிடார், புல்லாங்குழல், சந்தூர் உள்ளிட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தியிருந்தாலும், தாளத்திற்கு பயன்படுத்தியிருக்கும் காங்கோ பேங்கோஸ் ட்ரம்கள், இந்த பாடலை இன்னும் நமக்கு நெருக்காமிவிடுகின்றன.

குறிப்பாக, இரண்டாவது இடையிசை வரும் காட்சிகளை பாடலில் பரந்து விரிந்த புல்வெளியில் எடுத்திருப்பார்கள். அது எத்தனை பெரியனதாக இருந்தாலும் என் இசையும் இசைக்கருவிகளும் அந்த பரந்த பரப்புகளை அங்குலம் விடாமல் ஆக்கிமிக்கும் என்பதுபோல், வயலின்கள், கிடார், புல்லாங்குழல், சந்தூரின் இசையால் ஆக்கிரமிப்பார் இளையராஜா. எஞ்சிய இடங்களையு, இந்த இசைக்கருவிகள் நின்ற இடத்தில் ஜானகி அம்மாவின் குரலில் வரும் ஹம்மிங் வாரிச்சுருட்டும் அற்புதங்களை நிகழ்த்தி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார் இளையராஜா. பொங்கிப் பிரவாகமெடுக்கும் இந்த இசைப் பேரூற்றின் நீரோட்டம் நாளையும் பாயும்...

வெள்ளைப்புறா ஒன்று பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 3 | ‘இதயம் ஒரு கோயில்’ - எனை ஆளும் ஆருயிர் ஜீவன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்