ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்ததா?

By கலிலுல்லா

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு (குஞ்சாக்கோ போபன்) தனது காதலி கல்யாணியுடன் (ஈஷா ரெப்பா) சேர்ந்து இந்த நாட்டை விட்டு வெளியேறி நார்வே சென்று செட்டிலாகிவிட வேண்டும் என ஆசை. தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரை நாடும் மர்ம கும்பல், தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற மிஷனை கொடுக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு தாவூத்துடன் பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட மிஷனை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த மிஷனால் அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களையும் சேர்த்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் 'ரெண்டகம்'.

ஒரு படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் வெறும் நடுப்பகுதியை மட்டும் காட்சிப்படுத்தி புதுமை புகுத்த நினைத்திருக்கிறார் ஃபெலினி டி.பி. 'சாப்டர் 2' என முடித்து 'சாப்டர்1' மற்றும் 'சாப்டர் 3'-க்கு லீட் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் குஞ்சாகாபோபனுக்கு தமிழில் இது முதல் படம். வாரி சுருட்டிய தலைமுடி, ஷேப் வைக்கப்பட்ட தாடி, இறுதிக்காட்சியில் மாஸ் கூட்டுவது, 'மங்கத்தா' ஸ்டைலில் ஒரு காட்சியில் அதகளம் செய்வது என மலையாள மண்ணின் சாயலிலிருந்து விடுப்பட்டு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.

நரைத்த முடி, பொருந்தாத ஜிப்பா, அப்பாவி முகம் டூ மும்பை தாதா உருமாற்றத்தில் மலையாள ஸ்டைலில் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்துவரும் அரவிந்த் சாமி 'கொலமாஸ்'. இரண்டு பெரும் நடிகர்களின் கெமிஸ்ட்ரி திரையில் துறுத்தாத இணைவைக் கொடுப்பது படத்திற்கு பலம். ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன் கதைக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால், ஜாக்கி ஷெராஃப்பின் கதாபாத்திரம் வீண்டித்திருப்பதாக தோன்றுகிறது. இன்னும் கூட அதை ஆழமாக எழுதியிருக்கலாம்.

மெதுவாக நகரும் படத்தின் முதல் பாதி பெரிய அளவில் சுவாரஸ்யமோ, விறுவிறுப்போயின்றி கடக்கிறது. அரவிந்த் சாமியுடன் குஞ்சாகோபோபன் பழகும் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது பெரும் அயற்சி. அதனுடன் சேர்ந்து வரும் காதல் காட்சிகள், பாடல்கள் என கதைக்கு உதவாத காட்சிகள் முதல் பாதியில் நிரம்பிக் கிடக்கின்றன. இடைவேளைக்குப் பின் சூடுபிடிக்கும் படம் முழுக்க முழுக்க பயணத்திலேயே கடக்கிறது. அதில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மீதிக் காட்சிகள் உரையாடலாகவே கடக்கிறது.

இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் உருமாறுவது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. மாஸான சண்டைக்காட்சிகளுக்கு ஏ.ஹெச்.காஷீஃப்பின் பின்னணி இசை அட்டகாசம் செய்கிறது. கிரியேட்டிவ் ஷாட்ஸ், கோவா - மங்களூர் சாலைப்பயணம் ஹைவே ஷாட்ஸ், சண்டைக்காட்சிகள் என கௌதம் ஷங்கரின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. படத்தை நீட்டி முழங்காமல், கச்சிதமாக வெட்டியிருப்பது படத்தொகுப்பாளர் அப்புவின் முக்கியமானது.

ஆக்‌ஷன் காட்சிகளையும், சில ட்விஸ்ட் காட்சிகளையும் தவிர்த்துவிட்டால் ‘ரெண்டகம்’ படத்தின் திரைக்கதை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் கடப்பது படத்தின் பெரிய பலவீனம். மேற்கண்ட இரண்டையும் தவிர்த்துவிட்டு பார்வையாளர்களை தக்கவைக்க படத்தில் காட்சிகள் இல்லை என்பதும், நிறைய விஷயங்களை வெளிப்படுத்திவிடக் கூடாது என்ற இயக்குநரின் அந்த சஸ்பென்ஸ் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுப்பதால், முழுமையான படத்தை பார்த்த உணர்வு மிஸ்ஸிங்! அதேபோல கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்ற நியாயம் காட்சிகளில் இல்லாதது பெரிய அளவில் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை.

மொத்தத்தில், குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்துள்ளது. ஆனால், முதல் பாதியில் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து, இரண்டாம் பாதியை தெளிவாக்கியிருந்தால் ‘ரெண்டகம்’ பார்வையாளர்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE