“வைரமுத்துவும் சிறப்பானவர். ஆனால்...” - ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு குறித்து மணிரத்னம்

By செய்திப்பிரிவு

''வைரமுத்து சிறப்பானவர். ஆனால், அவரைத் தாண்டியும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தோம்'' என ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வைரமுத்து இடம்பெறாதது குறித்து இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணிரத்னத்திடம், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெறாதது குறித்தும், பட விழாக்களில் அழைக்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணிரத்னம், "தமிழ் பல நூற்றாண்களாக இருக்கும் மொழி. இதில் தமிழ் இயக்குநர்கள் வருவார்கள் போவார்கள். தமிழின் சொல் வளமை அபரிமிதமானது.

பல கலைஞர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரை இத்தனை நூற்றாண்டுகளாக தமிழ் பார்த்துவிட்டது. கருணாநிதியால் வைரமுத்து பக்கத்தில் உட்கார வைக்கப்பட்ட ஒரு கவிஞர். அவருடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறோம். அவரின் கவிதைகளை ரஹ்மானுடன் இணைந்து பாடலாக்கியிருக்கிறோம். வைரமுத்துவும் மிகவும் சிறப்பானவர். அவரைத் தாண்டியும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாகவும், புதியவர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE