‘கமலின் வெற்றி அடுத்தடுத்து தொடரும்’ - நடிகர் ரமேஷ் அரவிந்த் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சினிமாவுக்கு வந்து 35 வருடங்களாகி விட்டது ரமேஷ் அரவிந்துக்கு. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என சுமார் 140 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறது,

பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா பல்கலைக்கழகம். ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘டூயட்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பஞ்சதந்திரம்’ உட்பட தமிழில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், கமல் நடித்த ‘உத்தமவில்லன்’, மற்றும் சில கன்னட படங்கள் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்திருக்கிறார்.

‘‘சினிமாவுல 35 வருஷம் வேகமா போனது ஆச்சரியமா இருக்கு. இதற்காக, இந்த கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்க. மகிழ்ச்சியா இருக்கு. சினிமா இன்னும் சிறப்பா தொடர இந்தப் பட்டம் ஊக்கப்படுத்தும்’’ என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

சமீபத்துல நீங்க எழுதிய புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்காமே?: ஆமா. ‘பிரீத்தியிந்தா ரமேஷ்’ (அன்புடன் ரமேஷ்) என்ற புத்தகத்தை கன்னடத்தில் எழுதி இருக்கேன். என்னோட அனுபவத்தைவச்சு, தன்னம்பிக்கை நூல் மாதிரி அதை உருவாக்கி இருக்கேன்.

அதாவது பாசிட்டிவிட்டியை கற்றுக்கொடுக்கிற புத்தகமா இது இருக்கும். மூனுநாளுக்கு முன்னால நடிகர் அனந்த் நாக் வெளியிட்டார். முதல் நாள்லயே எல்லா புத்தகமும் விற்றிருக்கு. அடுத்தப் பதிப்பு ரெடியாகிட்டு இருக்கு.

தன்னம்பிக்கை நூல்னா எப்படி?: எனக்கு வாசிக்கறதும் எழுதறதும் பிடிக்கும். என் வாழ்க்கையில இருந்து, என் அனுபவத்துல இருந்து நான் எப்படி படிப்படியா முன்னேறினேன்ங்கறதை வச்சு, சின்ன சின்னக் கதைகள் மூலமா, இந்தப் புத்தகத்தை எழுதிருக்கேன்.

நான் முதன் முதலில் லூனா வச்சிருந்தேன். அப்ப அது போதுமானதா இருந்தது. பிறகு, டிவிஎஸ் 50, சிலவருடங்களுக்குப் பின் பிரீமியர் பத்மினி கார் வாங்கினேன். ஒவ்வொரு காலகட்டத்துலயும் மனநிலைமாறுது. அடுத்தடுத்த தேவை வந்துட்டே இருக்கு. சினிமாவுல வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது 2 லட்சம் ரூபா இருந்தா போதும்னு நினைச்சேன்.

பிறகு படிப்படியா தேவை அதிகரிச்சது. இந்த அனுபவங்களின் மூலம் நான் பெற்றது என்னங்கறதை இந்தபுத்தகத்துல எழுதி இருக்கேன். இதை ஆங்கிலம், தமிழ்ல மொழிபெயர்க்கவும் திட்டம் இருக்கு.

கமல்ஹாசனோட நண்பர் நீங்க. ‘விக்ரம்’ பட வெற்றியை எப்படி பார்க்கிறீங்க?: அவரோட எப்பவும் பேசிக்கிட்டிருக்கிறவன்தான் நான். ‘விக்ரம்’ மெகா வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். அந்த வெற்றி எனக்கும் மகிழ்ச்சியை தந்தது. ரசிகர்களுக்கு கமல் மேல உள்ள அன்பு எப்பவுமே அதிகம்.

அவருக்கு ஒரு மெகா வெற்றியை கொடுக்கணுறங்கற ஆவல், அவங்க உள்ளத்துல இருந்து பீறிட்டு எழுந்த மாதிரி இது அமைஞ்சிருக்கு. இந்த வெற்றி அடுத்தடுத்து தொடரும்னு நம்பறேன்.

அடுத்து தமிழ்ப் படம் பண்றீங்களா?: இப்போதைக்கு பண்ணலை. கன்னடத்துல ‘சிவாஜி சுரத்கல் 2’ படம் பண்ணியிருக்கேன். புலனாய்வு த்ரில்லர் படம். நாசர், ராதிகா நாராயண், மேகனா நடிச்சிருக்காங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE