இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒருமுறை 'யுவனிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?' என கேட்பார்கள். அதற்கு அவர், 'யுவன் குரலில் ஈரம் இருக்கும்' என்பார். அத்தனை உண்மை அது. அந்த வகையில் விரக்தியின் விளிம்பிலிருப்பவர்களை தன் ஈரக்குரலால் மீட்டெடுத்த யுவனின் 'ரெஸ்க்யூ டேப்ளேட்' (மீட்பு மாத்திரைகள்)களை பார்ப்போம்.
ஒருநாளில் வாழ்க்கை - புதுப்பேட்டை: எல்லாமே முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருக்கும்போது, 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது' என இருளடர்ந்த காற்றில் நிற்கதியாய் நிற்கும் நமக்கு சிறு தீக்குச்சியின் வழியே நம்பிக்கை ஒளியை ஏற்றத்தொடங்குவார். 'மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது' என 'எல்லா சோகமும் ஒரு நாள் தான்' என ஆற்றுப்படுத்துவார். 'நமக்கு மட்டும் ஏன் இப்படி' என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, 'எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்' என யுவன் பாடி முடிப்பதற்குள் நம் கண்களிலிருந்து கண்ணீர் விடைபெற்றிருக்கும்.
'கரைவரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம். எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர்த்தொடுப்போம்' என யுவன் குரலில் ஒரு ஹைப் ஏறும்போது நமக்குள் ஸ்டாமினா கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். 'இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே' என யதார்தத்தை புரிய வைக்கும்போது எல்லாமே லேசாகி கண்ணீரின் ஈரம் காயத்தொடங்கும். உண்மையில் அது ஒரு மாத்திரை தான். குறிப்பாக பாடல் வரிகளைத் தாண்டி, அவர் சொல்லும், 'ஓ...ஹோ...ஹோ..' என்ற ஹம்மிங் பாடல் முடிந்த பின்பும் நம்மிடமிருந்து நீங்காமல் தேங்கியிருக்கும்!
பாவங்களை சேர்த்துக்கொண்டு - தரமணி: உங்களின் எல்லா தவறுகளும் ஒருநாள் உங்களுக்கு எதிராக திரும்புகையில், குற்றவுணர்ச்சி தூங்கவிடாமல் துரத்தும்போது நீங்கள் சரணாகதியடைவது கடவுளிடம் மட்டுமல்ல. 'நஞ்சினைபோல நெஞ்சுக்குள்ளிருக்கும் குற்றம் கொல்கிறதே; என் தொண்டை குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே' என வாஞ்சையுடன் பாடும் யுவனிடமும் தான்! அந்த வரியில் அத்தனை அழுத்தத்தை உணர முடியும். 'என்னை மன்னிப்பாயா யாஅல்லாஹ்' என யுவன்பாடும்போது அவர் நமக்கும் சேர்த்தே பிரார்த்திப்பது போன்ற உணர்வை அந்தப் பாடல் தரும். 'உறக்கமில்லை இறக்கம் காட்டு இல்லை என் வலிகளை ஆற்று' என சொல்லிக்கொண்டே நம்மையும் தேற்றிக்கொண்டிருப்பார். பாடலில் யுவனின் குரல் அந்த எமோஷனை கச்சிதமாக கடத்தியிருக்கும்.
தெய்வம் வாழ்வது எங்கே - வானம்: அதேபோல மீண்டும் ஒரு குற்றவுணர்ச்சி பாடல். 'தனக்காக வாழ்வதா வாழ்க்கை' என்ற வரியில் யுவன் குரலின் தொடங்கும் ஏற்றம், 'விழி ஈரம் மாற்று தந்த போக்கை' என அழுத்தத்தை கடந்து 'நாளும் வணங்கும் தெய்வம் ஏங்கே?' என மீண்டும் ஹைப் ஏறி வளைந்து நெளியும்போது நமக்குள் அந்தப் பாடல் முழுமையாக இறங்கியிருக்கும்.
ஏ ராசா - மாமனிதன்: சில நேரங்களில் தொடர் தோல்விகளும், கவலைகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அடுத்தடுத்த தாக்குதல் நிகழ்த்தும்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக 'ஏ ராசா' பாடலை ஒருவேளைக்கு 2 முறை என ஒரு நாளைக்கு 6 முறை கேட்டால் போதும். அந்த நாளின் கவலைகளை திருப்பித் தாக்கும் வல்லமையை யுவன் கொடுத்துவிடுவார். 'வாழ்க்க ஒண்ணும் பாரமில்ல வா லேசா' என அழைக்கும்போது, 'தோ வந்துட்டேன்' என ரெடியாகும்போது, 'எல்லாருக்கும் நேரம் வரும்; நல்லாருக்கும் காலம் வரும்' என்று நம் தோளில் தட்டிவிட்டு கண்களை துடைத்துவிடும் மீட்பராக வெள்ளை உடையில் தோன்றிருப்பார்.
எதிர்த்து நில் - பிரியாணி: இந்தப் பாடலில் யுவன் பாடிய பகுதியை மட்டும் எடுத்துப்பார்த்தால், 'திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப்போகாதே' என ஒரு இழுப்பு இழுத்து 'வருவதை எதிர்கொண்டு பார்த்திடு கோழையாகாதே' ஏற்றி பாடதொடங்கும்போதே நமக்குள் ரீஃப்ரஷ்மென்ட் கிடைத்துவிடும். ஃபுல் எனர்ஜி கொடுக்கும் இந்தப்பாடல் நிச்சயம் நாளுக்கு ஒருவேளை எடுத்துகொள்ள வேண்டியவை.
இந்த பாடல்கள்கள் 'ரெஸ்க்யூ' என்ற ப்ளேலிஸ்டில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவை. நாள் ஒன்றுக்கு சரிவிகிதமாக இந்தப் பாடல்களை எடுத்துக்கொண்டால் அரணாக நின்று சோகங்கள் அண்டவிடாமலும், அண்டிய சோகங்களிலிருந்து உங்களை மீட்கும் மீட்பராக தோன்றுவார் யுவன். வாழக்கையில் துணையாய் ஒவ்வொரு எமோஷனில் பயணித்து நம்மை தட்டி தேற்று உற்சாகமூட்டி உத்வேகமளிக்கும் பயணி யுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago