நட்சத்திரம் நகர்கிறது Review: அன்பு, அரசியல், புதுவித திரை அனுபவம்!

By கலிலுல்லா

'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நாயகி. இனியனாக காளிதாஸ் ஜெயராமன் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிமாக நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் கூட ஆழமாக எழுதியிருக்கலாம். பிற்போக்குத்தனங்களாலான பாத்திரத்தில் கலையரசனின் நடிப்பு ஈர்க்கிறது. அவமானப்படுவது, குடித்துவிட்டு சண்டையிடுவது என கவனிக்க வைக்கிறார். நாடகக் குழுவில் உள்ள கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

இதுவரை பார்த்த காதல் படங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி புதியதோர் உலகிற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த உலகில் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. மாறாக அங்கே காதல் பாலின பேதங்கள், சாதி, மதங்கள், நிற வேறுபாடுகள் கடந்து மின்னுகிறது. குறிப்பாக அங்கே தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலும், திருநங்கையின் காதலும் தயக்கமில்லாமல் பேசப்படுகிறது. அங்கே ஆணுக்கு கட்டுப்பட்ட பெண்களையும், அழுது வடியும் பெண்களையும், மீட்பர் மனநிலை கொண்ட ஆண்களையும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் இந்த புதியதோர் முன்னெடுப்பை பாராட்டியாக வேண்டும்.

படத்தில் ரசிக்க நிறையவே இருக்கிறது. ஒட்டுமொத்த விஷுவலாக படம் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. காதலும், அதற்கான விஷுவல்ஸும், கூடவே வரும் இளையராஜாவின் பாடலும் என பல காட்சிகள் கவிதையாக விரிவது கண்களுக்கு விருந்து. ரஞ்சித்தின் ஆகப் பெரிய பலமே அவரது பிரசாரமில்லாத திரைக்கதை. ஆனால், இந்தப் படத்தின் முதல் பாதியில் 'காதல்ன்னா என்ன' என தொடங்கும் உரையாடல், வகுப்பறையில் அமர்ந்திருந்த உணர்வை கொடுத்தது. தொடர்ந்து வரும் சில காட்சிகள் பிரசார நெடியை கொடுத்தது நெருடல்.

'வர்க்கம் ஒழிஞ்சா சாதி ஒழியும்ங்குறதெல்லாம் சும்மா', 'நான் அப்டிங்குறது நான் மட்டுமல்ல அது என்னோட சமூக அடையாளமும் சேர்த்துதான்', 'நாடகக் காதல்', '200 ரூபா டீசர்ட்டும் போட்டு கரெக்ட் பண்ற அளவுக்கா பொண்ணுங்க இருக்காங்க', 'ஆண்ட பரம்பரை', ‘இளவரசன், சங்கர், ஆணவக் கொலைகள்’ என சமரசமேயில்லாமல் திரை முழுவதும் அரசியல் நிரம்பி கிடக்கின்றது. மறுபுறம் எதிர் கருத்துடையவர்களை முற்றிலும் ஒதுக்கவிட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களும் சேர்ந்ததுதான் சமூகம் என்ற கண்ணோட்டம் கவனிக்க வைக்கிறது. இதன் மூலம் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்த முயற்சித்து, இங்கே நோக்கம் புறக்கணிப்பதல்ல..மாறாக உணர வைப்பது என்ற அரசியல் புரிதல் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

நாட்டார் தெய்வ வழிபாடு, புத்தர் பெயின்டிங், 'நோ மீன்ஸ் நோ', மாட்டுக்கறி, 'காட்டுப்பூனை, நாட்டுப்பூனை' வலிமையான பெண் கதாபாத்திரங்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை ரஞ்சித் டச். படம் முழுக்க இளையராஜாவை ஒரு கதாபாத்திரமாகவே கொண்டு சென்றதும், அவருடைய பாடல்கள் காட்சிகளின் வழி இழையோடுவதும் ரசிக்க வைத்தது.

தவிர, படத்தின் நீளம் பார்வையாளர்களை ஒருகட்டத்திற்கு பிறகு நாற்காலியிலிருந்து நெளியவைக்கிறது. நிறைய இடங்களில் பிரசார நெடி, நிறைய கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அதற்கான ஆழமான எழுத்தின்மை, வலுவற்ற காரணங்களால் நிகழும் ப்ரேக்-அப்புகள், உடனே நல்லவராக மாறும் கேரக்டர் என ஆங்காங்கே சில ஸ்பீட் ப்ரேக்கர்களும் உண்டு. தன்பால் ஈர்ப்பாளர்கள் காதலை இன்னும் கூட பேசியிருக்கலாம். ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, ஆவணப் படத்திற்கான உணர்வை கொடுக்கிறது.

கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வண்ணங்களைக் கூட்டுகிறது. நாடகம், பாடல்கள், க்ளைமாக்ஸ் என அவரது கேமரா நட்சத்திரமாக பிரகாசிக்கிறது. தென்மாவின் இசை கதையோடு ஒட்டி பயணிப்பது பலம். 'ரங்கராட்டினம்', 'காதலர்' பாடல்கள் கவனம் பெறுகிறது. கலை இயக்கம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டோனையும் மாற்றுவதில் கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது.

மொத்தத்தில் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நட்சத்திரம் நகர்ந்துகொண்டே மின்னுவதை உணர முடியும். புதுவித திரை அனுபவத்திற்காக படத்தை பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்