முதல் பார்வை: காஷ்மோரா - மாய வித்தை

By உதிரன்

செய்வினை எடுப்பதாக பித்தலாட்டம் செய்பவர், இன்னொருவர் செய்த வினையில் சிக்கி மீள்வதே 'காஷ்மோரா'.

செய்வினை, பில்லி, சூன்யம் போன்றவற்றை எடுப்பது, ஆவிகளுடன் பேசுவது என்று ஏமாற்றிப் பிழைக்கிறார் கார்த்தி. அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி என எல்லோரும் கார்த்தியை நம்புகிறார்கள். அதனால் மிகப் பெரிய அளவில் கார்த்தியைத் தேடி வருகிறது பணம். ஆனால், அதை அனுபவிக்க முடியாமல் ஒரு பேய் பங்களாவுக்குள் அடைபடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த பங்களாவின் நதிமூலம், ரிஷிமூலம் என்ன என்பதை இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருவதே திரைக்கதை.

பேயை விரட்டும் வித்தைக்கார 'காஷ்மோரா', படைத் தளபதி ராஜ்நாயக் என்று இரட்டை கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டுகிறார் கார்த்தி. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுவது, ராஜதந்திரத்தில் வியூகம் அமைப்பது, தன்னை விஞ்ச ஆளில்லை என்ற நினைப்பில் கர்வம் காட்டுவது என புத்திசாலித்தனமான தளபதி பாத்திரத்தில் கார்த்தி கம்பீரம். பெரிய அரண்மனையாக உள்ள அந்த பங்களாவுக்குள் 'காஷ்மோரா' கார்த்தி அடைபட்டு பேயிடம் பேசும் ரியாக்‌ஷன்களிலும், வசன உச்சரிப்பிலும் கிளாப்ஸ் அள்ளுகிறார்.

இளவரசி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் நயன்தாரா நடனத்தில் வசீகரிக்கிறார். துரோகம் உணர்ந்து கண்ணசைவில் திட்டம் வகுத்துச் செயல்படும் நயனின் போர்ஷன் நிறைய இல்லாவிட்டாலும், மனதில் நிற்கும் அளவுக்கு நிறைவாக உள்ளது.

ஸ்ரீதிவ்யாவுக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.விவேக், மதுமிதா, சரத் லோகிதஸ்வா, மதுசூதன் ராவ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பீரியட் காலம், நிகழ்காலத்தை கண்முன் நிறுத்துகிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் ஓயா ஓயா பாடல் ரசிக்க வைக்கும் ரகம். நல்லவரா இல்லை கெட்டவரா பாடல் ரிப்பீட் கேட்க வைக்கும். பின்னணி இசை காட்சிகளுடன் ஒன்றிப் போகிறது.

''பயப்படாதீங்க. பயந்தா பயம் வந்துடும். பயப்படலைன்னா பயம் வராது'', ''காரண காரியங்கள் இன்றி இங்கு எதுவுமே எடுப்பதில்லை காஷ்மோரா. தேடிச் செல்'', ''ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச வேண்டும்'' என்று எழுதிய கோகுல், ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன் வசனங்களும், பிரம்மாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

சாப விமோசனம் அடையத் துடிக்கும் ஒரு தளபதியின் நூற்றாண்டு கால காத்திருப்பைப் பதிவு செய்ய நினைத்திருக்கும் இயக்குநர் கோகுலின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், அது முழுமையாக நிறைவேறவில்லை என்பதுதான் பெருங்குறை.

செய்வினையை தானே வைத்துவிட்டு தானே எடுப்பதாக கார்த்தி செய்யும் போலித்தனம் முதலிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால், அதை அடுத்தடுத்த காட்சிகளிலும் பரவ விட்டது ஏன்? அந்த பங்களாவுக்குள் அடைபடுவதற்கான காரணம் குடும்பத்தில் 5 பேருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமைதானே. அதைத் தவிர்த்து, கார்த்தியின் தொழில் குறித்த டீட்டெய்லிங் ஏன்?

கார்த்தியின் மார்க்கெட்டிங் விளம்பரம் யாரால் கவனத்துக்கு உள்ளாகிறது? அதனால் எப்படி கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் ஒரே இடத்துக்கு கொண்டுவரப்படுகிறார்கள்? என்ற லாஜிக் பெரிதாகவே இடிக்கிறது. 'பேய் பேப்பர் படிக்குமா' என ஒரு ரசிகர் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருந்ததையும் சொல்லியே ஆக வேண்டும்.

கதையின் முதுகெலும்பான ஃபிளாஷ்பேக் காட்சியில் எந்த அழுத்தமும் இல்லை. சர்வாதிகாரியின் பாத்திர வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். அரசன், இளவரசி, தளபதி என்று மட்டுமே காட்டப்பட்ட அந்த சரித்திரக் காட்சியில் மருந்துக்கும் மக்கள் குறித்த பதிவுகள் இல்லை.

இதனாலேயே முதல் பாதியில் நிமிர வைத்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் நெடுஞ்சாண் கிடையாய் படுத்துக்கொண்டு பம்மியே கிடக்கிறது. அதை எழ வைப்பதற்கான வஸ்துக்கள் திரைக்கதையில் இல்லை.

இன்ன பிற இது போன்ற காரணங்களைத் தவிர்த்துப் பார்க்கையில் பேய், ஆவி, பில்லி, சூனியம் போன்றவற்றால் நடக்கும் வணிக மயத்தை, மார்க்கெட்டிங் தந்திரத்தை அசலாகக் காட்டிய விதத்தில் 'காஷ்மோரா' கவனிக்கப்படுகிறான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

26 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்