ஷங்கர் மகள் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாகக் கிடைத்ததா? - அதிதி பேட்டி

By செய்திப்பிரிவு

‘விருமன்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி. மருத்துவம் படித்துவிட்டு நடிகை ஆகியிருக்கும் சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வரிசையில் இணைந்திருக்கிறார் இவரும். அவர் நமக்கு அளித்த பேட்டி:

> விருமன் படத்தில் என்ன கேரக்டர்?

இயக்குநர் முத்தையா சாரோட படங்கள்ல நாயகிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார். நிஜ வாழ்க்கையில் அவர் சந்திச்ச, பார்த்த கேரக்டர்களைத்தான் படத்துலவைப்பார். இந்தப் படத்துலயும் அப்படித்தான். என் கதாபாத்திரத்தின் பெயர் தேன்மொழி.தேனி பகுதியைச் சேர்ந்த துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக நடிக்கிறேன்.

> நகரத்துல வளர்ந்தவங்க நீங்க. கிராமத்து கேரக்டருக்கு எப்படி தயாரானீங்க?

ரெண்டு மூணு முறை இதுக்காக நடந்த பயிற்சிப் பட்டறையில கலந்துக்கிட்டேன். உடல்மொழியில என்ன மாற்றங்கள் வேணும், வட்டார மொழியைஎப்படி பேசணுங்கறதுக்காகவும் பயிற்சி எடுத்தேன். முதல் படங்கறதால இந்தப் படப்பிடிப்பு முழுவதும் எனக்கு எல்லாமே புது அனுபவமா இருந்தது. சிறப்பா நடிச்சிருக்கிறதா நினைக்கிறேன்.

> மருத்துவம் படிச்சுட்டு சினிமாவுக்கு வர காரணம்?

சின்ன வயசுலயே சினிமா ஆசை இருந்தது. படிச்சு முடிச்சுட்டு சினிமாவுக்கு முயற்சி பண்ணலாம்னு நினைச்சேன். அதேபோல படிப்ப முடிச்சதும் அப்பாக்கிட்ட கேட்டேன். நான் 5 வயசுலஇருந்தே பாடல் கத்துக்கிட்டு வர்றதால, ‘மியூசிக்தானே, பண்ணலாம்’னு சொன்னார். ‘இல்லை.. நடிக்க போறேன்’னு சொன்னேன். அவர் அதிர்ச்சியா பார்த்தார். பிறகு, ‘ஒரு அப்பாவா, இதுல முடிவு எடுக்கறது கஷ்டம், ஆனா, ஒரு டைரக்டரா வேண்டாம்னு சொன்னேன்னா, அது என் தொழிலுக்கு தப்பா இருக்கும், முயற்சி பண்ணு’ன்னு சொன்னார். பண்ணினேன். கிடைச்சுது. நடிகையாயிட்டேன்.

அதிதி ஷங்கர்

> ஷங்கர் மகள் என்பதால் வாய்ப்பு எளிதா கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா?

அது உண்மைதான். ஆனா, நான் தொடர்ந்து சினிமாவில் நிலைச்சு நிற்கறதும் அடுத்தடுத்தப் படங்கள்ல நடிச்சு திறமையை வளர்த்துக்கிறதும் என்னோட கையிலதான் இருக்கு.

> அடுத்து சிவகார்த்திகேயன் படம் பண்றீங்க இல்லியா...?

ஆமா. சில ஹீரோக்கள் கூட நடிக்கணும்னு எங்கிட்ட ஒரு லிஸ்ட் இருக்கு.அதுல ஒருத்தர்கூட நடிச்சுட்டேன். அவர் கார்த்தி. அந்த இன்னொருத்தர், சிவகார்த்திகேயன். அவர்கூட ‘மாவீரன்’ படம் பண்றேன். மடோன் அஸ்வின் இயக்குறார்.

> இயக்குநர் ஷங்கர், ‘எஸ் பிக்சர்ஸ்’ மூலமா நீங்க நடிக்கும் படத்தைத் தயாரிப்பாரா?

அதுபற்றி அவர்தான் பதில் சொல்லணும். இருந்தாலும், ‘ஷங்கர் சார்... பட வாய்ப்பு கொடுங்கன்னு’ இந்தப் பேட்டி மூலமா கேட்டுக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE