“பிரச்சினைகளை 'ஜெய்பீம்' என தூக்கியெறிந்தார் சூர்யா” - ‘விருமன்’ நிகழ்வில் பாரதிராஜா பேச்சு

By செய்திப்பிரிவு

“சூர்யாவுக்கு திரைத் துறையில் நிறைய பிரச்சினைகளைக் கொடுத்தார்கள். தூக்கியெறிந்தார் 'ஜெய்பீம்' எனச் சொல்லி” என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

மதுரையில் 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதில் கலந்துகொண்டு பேசிய பாரதிராஜா, ''சிவகுமார் பிள்ளைகளை மிகவும் ஒழுக்கமாக வளர்த்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும்போது தனது மகன்களை காரில் அனுப்புவதற்கு பதிலாக ரிக்‌ஷாவில் அனுப்புவார். கார்த்தியும், சூர்யாவும் என் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவரும் இன்று திரையுலகில் பிரதான நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். கார்த்தியின் நடனத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். நடிப்பில் கார்த்தியின் கண் பேசுகிறது. 'பருத்திவீரன்' படம் பார்த்து ஷாக் ஆனேன். அடுத்து இந்தப் படம். சூர்யாவைப் போல அடுத்து கார்த்தியும் தேசிய விருது பெறுவார்.

சூர்யாவுடன் 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்தபோது, 'அங்கிள் உங்களோட இந்த எக்ஸ்பிரஷன் நல்லாருக்கு. கீப் இட் அப்' என்றான். அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தான். ஆயிரம் பேருக்கு நான் நடிக்க சொல்லிக் கொடுத்தியிருக்கிறேன். அப்போது தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என நினைத்தேன்.

ஆனால், சூர்யாவுக்கு திரைத் துறையில் நிறைய பிரச்சினைகளைக் கொடுத்தார்கள். தூக்கியெறிந்தார் 'ஜெய்பீம்' என. நான் அப்போது சொன்னேன், உனக்கு எது வந்தாலும் பின்னாடி நான் நிற்பேன் என்றேன். சூர்யா ஒரு சொத்து. அவர் சம்பாதித்து அறக்கட்டளையை நிறுவி, குழந்தைகளை படிக்க வைக்கிறார். கொடுக்கும் மனப்பான்மை எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஹாட்ஸ் ஆஃப் சூர்யா!'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE