'நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால்' - இயக்குநர் பாரதிராஜாவின் சுவாரஸ்யப் பேச்சு

By செய்திப்பிரிவு

''நான் சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ, விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சாதாரண மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன்'' என இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாரதிராஜா, ''லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்துப் பேசினேன் அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன். ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது.

கமல் ஓர் அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார் அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இப்படியான இயக்குநர்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை.

நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சாதாரண மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன்.. ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE