குலுகுலு: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

நாடோடியாக வாழும் கூகுள் (சந்தானம்), நகரமயமாதலின் பெயரால் அழிக்கப்பட்ட ஒரு பழங்குடி இனத்தில் கடைசி மனிதன். யாரென்று பாராமல் உதவும் கூகுள் தேடுபொறிபோல, உதவி என்று கேட்பவர்களுக்கு, உதவுகிறான். இதனால், பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவில் ஒருவன் கடத்தப்பட, அவனை மீட்க உதவுமாறு கூகுளை நாடுகின்றனர்.

உயிரை பணயம் வைக்கும் இந்த ஆபரேஷனில் கூகுள் பெறுவதும், இழப்பதும் என்ன என்பது கதை.
அமேசான் காடுகளில் பிறந்தவன், தன் மொழி பேசும் இன்னொரு மனிதனை வாழ்நாளில் சந்தித்துவிட மாட்டோமா என ஏங்குபவன், சாலையில் அடிபட்டு இறந்து கிடக் கும் நாயின் சடலத்தை எடுத்து அடக்கம்செய்துவிட்டு, அதன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் நல்மனம் படைத்தவன் என உலக நாடோடி இளைஞன் கதாபாத்திரத்தை நன்றாகவே எழுதியிருக்கிறார் படத்தை இயக்கியுள்ள ரத்னகுமார். முதல்முறையாக அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் சந்தானம்.அதற்காகவே அவரை பாராட்டலாம்.

கூகுள்மட்டுமின்றி, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு விசித்திரத் தன்மை இருக்கிறது.அதனால் நிகழும் விளைவுகளை திரைக்கதையாக கோர்த்த வகையில் பல காட்சிகள் ஆங்காங்கே தொய்ந்து நிற்கின்றன. பல காட்சிகள் அதையும் மீறி அர்த்தச்செறிவுடன் ஈர்த்து வயிற்றை பதம்பார்க்கின்றன. அழிந்துவரும் மொழிகள், தாய்மொழியின் முக்கியத்துவம், பெண்களின் வாழ்க்கைத் தெரிவு ஆகியவற்றின் நடுவே இயக்குநர் பேசும் அரசியல் நன்கு எடுபடுகிறது.

தந்தையின் அன்பை பரிசோதிக்க கடத்தல் நாடகமாடும் விண்வெளி விஞ்ஞானியின் மகன், முதியவர்களை பார்த்தாலே அருவருப்பு, அச்சம் கொள்ளும் உளச்சிக்கல் கொண்ட அவனது காதலி, தன்பால் ஈர்ப்புள்ள நண்பன், சாதாரண விஷயத்தைக்கூட நீளமான உவமையுடன் சுற்றிவளைத்துப் பேசும் இன்னொருவன், நன்கு தமிழ் பேசத் தெரிந்த பிரெஞ்சுப் பெண், பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டும் வில்லனின் தம்பி என அசாதாரண வாழ்க்கைசூழலை எதிர்கொள்ளும் துணை கதாபாத்திரங்களும் அவை, பிரச்சினைகளை சந்திக்கும்போது ஆற்றும் எதிர்வினைகளும் இறுதிவரை கவனம் ஈர்க்கின்றன. படத்தின் சிக்கலும், விக்கலும் அதன் இறுதிப் பகுதியில் நிறைந்திருக்கிறது.

அது நீளமாகவும், படத்தின் பாணியில் இருந்து விலகியும் நிற்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு வலுசேர்க்கின்றன. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை பதிந்து கொடுக்கிறது. திரையில்நடக்கும் அனைத்தும் தர்க்கத்துக்கு பொருந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் படத்துடன் ஒன்றுவதே கடினம். அப்படிப்பட்ட பார்வையாளர்களை தாண்டி,மாறுபட்ட திரை அனுபவம் விரும்புவோருக்கு ‘குலுகுலு’ குளிர்ச்சியான நகைச்சுவை அனுபவத்தைக் கொடுக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE