தனுஷ்... 90'ஸ் கிட்ஸ் வாழ்க்கையை அதிகம் பிரதிபலித்த கலைஞன் | பிறந்தநாள் ஸ்பெஷல் பகிர்வு

By கலிலுல்லா

பெல்ஸ் பேண்டும், பரட்டை முடியும், பூ பொறித்த டீஷர்ட்டும், மீசை எட்டிப் பார்க்க கூச்சப்படும் மேலுதடும் கொண்ட நாயகன் ஒருவனை திரையில் காணும் சாமானியனின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? அடர்சூழ் இருளில் ஒளிரும் அந்த வெண்திரையில் அவன் தன்னையே கண்டான். தன்னுடன் இருந்த ஒருவன், திடீரென திரையில் தோன்றுவது போன்ற உணர்வால் நாயகனுடன் தன்னை ஒப்புமைபடுத்திக்கொள்கிறான். அவனுடைய வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடித் தீர்க்கிறான். அப்படித்தான் இளைஞர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எந்த காலிங் பெல்லும் இல்லாமல் நுழைந்தார் தனுஷ்!

எளிய, நடுத்தர மக்களில் ஒருவனாக தன்னை பாவித்து திரையில் தோன்றிய தனுஷை தமிழ் சினிமா உலகம் வாரி அணைத்துக்கொண்டது. குறிப்பாக 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர் கூட்டத்துக்கு தனுஷ் ஒரு கண்ணாடி. அவரது உடலமைப்பும், நிறமும் மட்டுமே இதனை சாத்தியப்படுத்தவில்லை. மாறாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் யாவும் எளிய பின்னணியைக் கொண்டவை.

கொஞ்சம் மேலே போனால் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவராகவே நடித்திருப்பார். இவை இரண்டும் தான் தனுஷ் எனும் நடிகனை நம்மில் ஒருவராக உருமாற்றி ஒட்டவைத்தது. தனுஷின் நடிப்பை பற்றி பேசி பேசி தீர்த்தாகிவிட்டது. ஆகவே, மேற்கண்ட இரண்டு பரிமாணங்களையொட்டி தனுஷ் எனும் நாயகனை அலசிப் பார்ப்போம்.

'ஒரு முறை தான் உரசிப் போடி பார்வையிலே' என 'துள்ளுவதோ இளமை' படத்தில் விடலைப் பருவத்தினரின் ஹார்மோன் ஆட்டங்களை அடுக்கியிருப்பார் செல்வராகவன். பெண் எப்போதும் மர்மமாக தோன்றும் இளைஞர் கூட்டத்துக்கு, படத்தின் கதைக்களமும், தனுஷும் கனெக்ட் ஆக தொடங்கின.

அடுத்தடுத்து 'சுள்ளான்', 'தேவதையைக் கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'பொல்லாதவன்' படங்கள் அப்பா - மகன் உறவு, காதல், வேலை என நடுத்தர குடும்ப இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காட்சிப்படுத்தியது.

குறிப்பாக 'பொல்லாதவன்' ஒவ்வொரு இளைஞனின் கனவான பைக் மற்றும் அதையொட்டிய போராட்டத்தின் நீட்சியை காட்சிப்படுத்தியதன் மூலம் இன்னும் நெருக்கத்தை கூட்டியது. அதுவும் பல்சர் அறிமுகமான சமயம் அது. திரையில் தனுஷ் வண்டி ஓட்டும்போது, திரையரங்குகளில் இளைஞர்கள் ப்ரேக் பிடித்தார்கள்.

'யாரடி நீ மோகினி', 'குட்டி' போன்ற ஒரு தலைக்காதலை புனிதப்படுத்தும் படங்களில் நடித்து சூப் பாய்ஸ்களுக்கு டானிக்காக இருந்தார். 'மாரி', 'வேலையில்லா பட்டதாரி' ஆக கமர்ஷியலிலும், மறுபுறம், 'புதுப்பேட்டை', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'மர்யான்', 'அசுரன்', 'வட சென்னை', 'கர்ணன்' என கன்டென்ட் உள்ள படங்களிலும், எளிய மக்களை பறைசாற்றும் விதமாகவே திரையில் தோன்றியிருக்கிறார் தனுஷ். அவர் அந்த கதாபாத்திரங்களில் நடிக்கும்போது மிக யதார்த்தமாக பெரும்பாலான ஆடியன்ஸ்கள் அவரை உள்வாங்கி கொண்டனர். அதுவும் அண்மையில் 'படிப்பு தான் முக்கியம்' என அசுரனில் அவர் குரல் ஒலிக்கும்போதும், 'கர்ணன்' படத்தில் உரிமைக்காக போராடும் கிராமத்து இளைஞனாகவும், அவர் திரையில் தன்னை எந்த விதத்திலும் அந்நியப்படுத்தியதில்லை.

பைக் வாங்க போராடும் இளைஞனை 'பொல்லாதவன்' கனெக்ட் செய்தது போல, 'வேலையில்லாத பட்டதாரி' படம் வரும்போது இன்ஜினீயரிங் படிப்பு உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் வேலை கிடைக்காமல் தவித்த இளைஞர்கள் தனுஷ் வடிவில் திரையில் தங்களையே பார்த்து ஆறுதலடைந்தனர். பெரும்பாலும் 90'ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை அதிக அளவில் பிரதிபலித்த தனுஷுக்கு அவர்கள் இன்றும் கட்அவுட் கட்ட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே தான் தனுஷ் நடிப்பால் மட்டும் உயர்ந்த நடிகனல்ல என்பதை அறுதியிட்டு கூறலாம். எளிய, நடுத்தர மக்களை பிரதிபலிக்கும் நாயகனாகவும், கூடவே அதில் வசிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்வை வாரியிறைத்ததாலும், தனுஷின் வெற்றியை தங்களின் வெற்றியாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அவர் தேசிய விருது பெறும்போது, பக்கத்துவீட்டு பையன் விருது பெறுவது போலவும், கூடவே அவரது பிறந்த நாளையும் தங்கள் அண்ணனின் பிறந்தநாளாகவும் எண்ணி வீடுகளில் கேக் வெட்டி மகிழ்கின்றனர்.

ஹாலிவுட்டில் தனுஷ் அழுத்தமாக தடம் பதித்து இருப்பதால் இது ஸ்பெஷல் பேர்த் டே என்றே சொல்லலாம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE