பிரபல திரைப்பட திறனாய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அறிந்து திரைப்பட - இலக்கிய ஆர்வலர்கள் பலரும் தங்களது அஞ்சலிக் குறிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் இருந்து...
அ.ராமசாமி: “நினைத்துக் கொள்ள வேண்டியவர் சக்கரவர்த்தி. அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக்கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்லவேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன்முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக் கல்லூரிக்கருகில் இருந்த “இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்”. அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.
கல்விப்புலம் சார்ந்து சினிமாவைக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். பலநேரங்களில் அவரது விவரிப்புகளோடும் விளக்கங்களோடும் முரண்பட்டிருக்கிறேன். நான் எழுதும் சினிமா விமரிசனங்களோடு அவருக்கும் பல நேரங்களில் உடன்பாடு இருந்ததில்லை என்பதைக் காட்டியிருக்கிறார். சினிமா குறித்த கருத்தரங்குகளில் எதிரும் புதிருமாக விவாதம் செய்திருக்கிறோம்.
கடைசியாக அவர் இயக்கித் தயாரித்த சென்னையைப் பற்றிய ஆவணப்படத்தை அமுதனின் மறுபக்கம் அமைப்பு பெரியார் மையத்தில் திரையிட்டபோது அவரையும் படத்தையும் பார்த்தேன். அப்படத்தின் பெயர்- சென்னை: பிளவுபட்ட நகரம் என்பது. அப்படம் பற்றி அப்போது எழுதிய குறிப்பு இது:
*
» காமன்வெல்த் போட்டிகள் 2022: காயம் காரணமாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகல்
» இபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக.3-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு
சக்ரவர்த்தியின் சென்னை வளர்ச்சியடையும் சென்னை மாநகரம் ஒவ்வொரு திசையிலும் சம அளவில் விரியாமல் தெற்கிலும் மேற்கிலும் தொழில் கூடங்களால் வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. தென்சென்னையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக விரிகின்றன. அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பழைய தொழிற்பேட்டைகளோடு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்ச் சாலைகளில் தொடங்கப்படும் கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பலனடையப்போகும் மனிதர்கள் சென்னையின் மனிதர்கள்தானா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்தோடு மாநகரத்தின் குப்பைகளைக் கொட்டுமிடமாக ஆக்கப்பட்ட வடசென்னை, விரிவாக்கத்தை/வளர்ச்சியை அடையாமல் தடுக்கப்பட்ட அரசியலையும் பேசுகிறது.
மொத்தத்தில் பிளவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்த்துள்ள இந்த ஆவணப்படம் சென்னை நகர மக்கள் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களையும் அவற்றிற்கான நாட்களையும் விடாப்பிடியாகத் தக்கவைக்கப் போராடுவதையும் காட்டுகின்றது. இது ஒருவிதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சென்னை. அரைநூற்றாண்டுக்காலச் சென்னை வாழ்க்கையால் அந்நகரின் சாலைகளிலும், பலவகையான நிகழ்வுகள் நடக்கும் வெளிகளிலும், ஓய்வெடுக்கும் பிரதேசங்களிலும் அலைந்து திரிந்த ஒருவரின் பார்வையாக அந்தப் படத்தின் காட்சித் தொகுப்புகள் இருந்தன.
நான் அவரைப்போலச் சென்னைவாசி அல்ல. சென்னைக்கு எப்போதும் விருந்தாளிதான். எனது முதல் சென்னைப்பயணம் 1982. அரசுப் பணி ஒன்றிற்கான நேர்காணலுக்காக வந்தது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறேன். அதிக அளவில் ஒருவாரம்வரை இரவிலும் பகலிலும் இங்கே தங்கிச் சுற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் சென்னை நகரம், தென் தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்கள் எங்களுக்கும் இந்த மாநகரில் பங்கிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் அடையாளங்களைப் பார்க்கிறேன். பண்பாட்டு அடையாளங்களை நிலையான காட்சிகளாகவும் அசையும் பிம்பங்களாகவும் விழாக்களாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையிலும் சென்னை: பிளவுபட்ட நகரமாகவே இருக்கிறது.
இதனைப் பிம்பங்களாக அடுக்கிப் பார்ப்பதைப் போல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயந்தன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், திலகவதி, சுஜாதா, திலீப்குமார், தொடங்கி அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அரவிந்தன், விநாயகமுருகன், கரன் கார்க்கி, லக்ஷ்மிசரவணக்குமார், சரவணன் சந்திரன் என நீளும் புனைகதைப்பரப்பிலும் தேடிப்பார்க்கலாம். அப்படியான ஆய்வு சென்னையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்.
*
சக்கரவர்த்தியின் மறைவில் வருந்தும் ப்ரீத்தம் சக்கரவர்த்திக்கு ஆறுதல் சொல்ல இயலாது. ஆழ்ந்த இரங்கல்கள்.”
இந்திரன் ராஜேந்திரன்: “சினிமாவின் உன்னதமான கலை படைப்புகள் ஒவ்வொன்றையும் எப்படி புரிந்து கொள்வது என்று விமர்சன பூர்வமாக கற்றுக் கொடுத்த வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவரைப் பற்றிய நினைவலைகளில் என்னை மூழ்க வைக்கிறது. "சத்யஜித் ரே -- சினிமாவும் கலையும்" எனும் எனது நூலை கலாச்சார மையத்தில் ஜெயகாந்தன் வெளியிட முதல் பிரதி பாலு மகேந்திரா பெற்றுக் கொண்டார். ஊர்வசி அர்ச்சனா, ஓவியர் வீர சந்தானம் பங்கு கொண்ட அந்த விழாவில் சத்யஜித்ரே பற்றிய அற்புதமான ஒரு விமர்சன உரையை நிகழ்த்திய வெங்கடேஷ் சக்ரவர்த்தி என்னைப் பலவாறாகக் கவர்ந்தவர். அஞ்சலி செலுத்துவதே முழு நேரத் தொழிலாக போய்விடுமோ என்று காலம் என்னை பயமுறுத்துகிறது.”
யமுனா ராஜேந்திரன்: “இவ்வளவுதான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ்க்கை. வெங்கடேஷ் சக்கரவர்த்திக்கு அவரது சினிமா விமர்சனங்களின் மீது பெருமதிப்புக் கொண்டு, அவரது மேதைமை கருதி நானே விரும்பி நட்பழைப்பு அனுப்பி நட்பாகினேன். என்னைப் பொருத்து இது எக்ஷப்சன். நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக, ஜெயமோகன் சார்பாக, எந்த முகாந்திரமுமற்று அநாவசியமான கடுமையான வசவால் அவர் என்னைப் புண்படுத்தினார். அவரிடமே காரணம் சொல்லுங்கள் எனக் கேட்டேன். மௌனம் காத்தார். நட்பழைப்பைத் துண்டித்துவிட்டு கடுமையாக எதிர்வினை செய்தேன். அது அவரைப் புண்படுத்தியிருக்குமோ? அதனைத் தெரிந்துகொள்ள நான் அக்கறை காட்டவில்லை. இப்போது அவர் இல்லை. மறுமுறை அவரை நேரில் கண்டிருந்தால் சிநேக பாவத்துடன் புன்னகை செய்திருப்பேன். வாழ்வை இப்படித்தான் வாழ்ந்து முடிக்கவேண்டும். அவரது கட்டுரைகளின் தொகுதியை இன்று கொஞ்சநேரம் படிப்பேன். அவரது மேதைமைக்கு எனது தலைதாழ்ந்த அஞ்சலி.”
தயாளன் ஷண்முகா: “வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சினிமாவில் பலருக்கு வழிகாட்டி. கடும் முரண்பாடுகளுடன் பலமுறை சண்டை போட்டிருக்கிறேன் இவருடன். ஆனாலும் எப்போதும் பகைமை பாராட்டியதில்லை. மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.”
சுரேஷ் கண்ணன்: “திரைப்பட ஆய்வாளர், ஆசிரியர், விமர்சகர் என்று பல்வேறு நிபுணத்துவங்களைக் கொண்டிருந்த வெங்கடேஷ் சக்ரவர்த்தி மறைந்தார் என்று கேள்விப்படுகிறேன். என்னுடைய இளம்வயதில் சினிமாவை தீவிரமாக அணுகுவதற்கு அவருடைய ஒரு கட்டுரை மிகவும் தூண்டுதலாக இருந்தது. ஒரு முன்னோடியை இழந்த துக்கம் ஏற்படுகிறது. அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலி.”
ராஜையா டேவிட்: “கடநத் 15-ம் தேதி பிரதாப் போத்தன் இறந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தை பாடல்கள் வழியாக நேர்காணல்கள் வழியாக திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று இன்னொரு துயரம். வெங்கடேஷ் சக்கரவர்த்தி இன்று மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவருடைய திரைப்பட விளக்க உரைகளை நேரில் கேட்டிருக்கிறேன்.
இங்கு திரைப்பட உருவாக்கம் என்ற கலையை அணுகும் முறையை சிறப்பாக புரிந்து வைத்தவர். பல திரைப்பட பள்ளிகளில் பேராசிரியராக இருந்தார். அவரிடம் திரைப்பட உருவாக்கம் பற்றிய தகவல்கள் புத்தகங்கள் கேட்டு பெற்றிருக்கிறேன். வெகுஜன ஊடகத்தில் இதை செய்தியாக மட்டும் கடந்து போவார்கள்.
அவருடைய மனைவி நேற்று எழுதிய பதிவு கூட தன் தந்தை இறப்பை பற்றியது. பிரதாப் போத்தனும் கூட இறப்பதற்கு முன் இறப்பைப் பற்றிய தத்துவ கோட்பாடுகளை பதிந்தார். இந்த இழப்புகளை நம்பமுடியவில்லை. திரு.வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலும் அன்பும்.”
அமுதன் ராமலிங்கம் புஷ்பம்: “திரு வெங்கடேஷ் சக்ரவர்த்தி திரைப்பட ஆய்வு, கல்வியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அதே போல தத்துவம், உளவியல் ஆகிய துறைகளிலும் பங்காற்றியவர். மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நாங்கள் நடத்திய திரைப்படவிழாக்களில், பயிற்சிப் பட்டறைகளில் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். எங்களது போதாமைகளை எப்போதும் மன்னித்து அன்போடு ஆதரித்திருக்கிறார்.
சென்னையில் எல்.வி.பிரசாத் திரைப்படக்கல்லூரியில் அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த போது எனை அழைத்து எனது படங்களைத் திரையிட்டார். கூடங்குளம் போராட்டம் பற்றி நான் எடுத்த ஆவணப்படத்தை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் திரையிட்ட போது - அப்போது அங்கு ராமா நாயுடு திரைப்படக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் - வெங்கடேஷ் சக்ரவர்த்தி வெகு தூரம் பயணம் செய்து படம் பார்க்க வந்தார். கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அன்று இரவு அவரது வீட்டில் சிறப்பான உணவும் அளித்தார்.
வெங்கடேஷ் சக்ரவர்த்தி அன்பானவர். 'என்னப்பா, எப்படி இருக்க?" என்று அவர் கேட்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அதே போல கோபக்காரர். கருத்து வேறுபாடு காரணமாக நண்பர்களுடன் கூட சண்டை போட்டுக்கொண்டு பேசாமலும் இருப்பவர்.
சுதந்தரமான சிந்தனையாளர். கறாரான விமர்சகர். தனது கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தவர். அதனாலேயே பல காலம் நிலையான வேலையிலோ திடமான பொருளாதார நிலையிலோ இல்லாது இருந்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தான் ராமா நாயுடு திரைப்படக்கல்லூரி, எல்வி பிரசாத் திரைப்படக்கல்லூரி, சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
எனக்கு எனது மதுரை நண்பர்களான சுந்தர் காளி, பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோர் மூலம் தான் சக்ரவர்த்தி அறிமுகம். நண்பர்கள் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடத்திய பெரியார் கருத்தரங்கில் தான் சக்ரவர்த்தி அவர்களைச் சந்தித்தேன் என்று நினைவு. கும்பகோணத்தில் பேரா அ மார்க்ஸ் வெகுசன சினிமா தொடர்பாக நடத்திய கருத்தரங்கிற்கு நாங்கள் மதுரையிலிருந்து கூட்டமாக பேருந்தில் போனதும், அங்கே வெங்கடேஷ் சக்ரவர்த்தி தமது கட்டுரையை வாசித்ததும் நினைவுக்கு வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து தனது கைனடிக் ஹோண்டாவில் எனை அழைத்துப்போய் வீட்டில் சாப்பாடு போட்டு, வெகு நேரம் பல அரசியல், பண்பாட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். வயது வித்தியாசம் பார்க்காது மரியாதையுடன் நடத்தக்கூடியவர்...”
முகமது ஷஃபி: வெகுஜன தமிழ்ச் சினிமா விமர்சனத்திற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு. பாரதிராஜா படங்கள் தொடங்கி..ராசுக்குட்டி தேவர்மகன்... சினிமாவில் சாதியைப் பற்றி பேசலாமா ?.. மண்வாசனைப் படங்கள் சாதியத்திற்கு எதிராக என்ன செய்தன... திராவிட இயக்கம் ஒரு சமூக இயக்கம்.. மணிரத்னத்தின் இருவர்... மாறிவரும் தமிழ் சினிமாவும் அதன் இந்துத்துவப் பிரதிபலிப்பும் ... கபாலி ஒரு சரித்திர ஆய்வு... என்று பல ஆழமான கட்டுரைகளை எழுதிய மனது இன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டது..
மதுரை ஆய்வு வட்டம் நண்பர்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
கருணா பிரசாத்: “ 'சக்ஸ்' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு. சக்கரவர்த்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மலினமான ரசனை மிகுந்த தமிழ் சினிமா சூழலில் தேர்ந்த ரசனையை உருவாக்கிய சினிமா கல்வியாளர்களில் முன்னோடி அவர். வெளிச்சம் படாத மக்களையும் அவர்களது வாழ்வையும் பற்றிப் பேசியவர். சமூகப் பொறுப்புள்ள சினிமாக் கலைஞனின் அவசியத்தை தனது பேச்சு மற்றும் எழுத்துகளில் வலியுறுத்தியவர். அவரை இழந்து வாடும் ப்ரீத்தம், மாளவிகா மற்றும் சம்யுக்தா ஆகியோரை தேற்ற வார்த்தைகளில்லை.”
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago