''இந்தியாவின் ஆஸ்கர் விருது இது'' - தேசிய விருது வென்ற மகிழ்ச்சியில் இயக்குநர் சுதா கொங்காரா

By செய்திப்பிரிவு

கடந்த 2020 நவம்பரில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் 'சூரரைப் போற்று' வெளியாகி இருந்தது. 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் ‘சூர்யா - ஜோதிகா’ தம்பதியர் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ், பூ ராமு, காளி வெங்கட் என பலரும் இதில் நடித்திருந்தனர்.

'சூரரைப் போற்று' திரைப்படம் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தப் படம் 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் ஐந்து பிரிவுகளில் விருது வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை), சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

இதையடுத்து நேற்று இயக்குநர் சுதா கொங்காரா செய்தியாளர்களை சந்தித்து தேசிய விருதுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அப்போது பேசியவர், "தேசிய விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. எப்படியாவது இந்த கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. அது நடந்தது. மாறனின் பயணத்தை மக்கள் தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றவைத்து பார்த்தனர். அது போதும். அதுவே சிறந்த விருதாக நான் பார்க்கிறேன். இந்தியாவின் ஆஸ்கர் விருது இது. எந்த ஆஸ்கரை விடவும் இது பெரியது. அடுத்த படமும் சூர்யாவுடன் தான்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE