முதல் பார்வை: உறியடி - ஓர் அதிரடி முயற்சி!

By சரா

உறுதுணை நடிகர் மைம் கோபி ஒருவரைத் தவிர அனைவருமே நமக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள். எழுத்து, இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை மட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய் குமார். சினிமா மீது ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞரின் முதல் முயற்சி என்பதாக இருக்கலாம் என்று 'உறியடி'யின் ட்ரெய்லரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

அந்த இரண்டேகால் நிமிட ட்ரெய்லர்தான் 'உறியடி' படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஆர்வக் கோளாறில் அல்ல... சினிமா மீதான நேர்மையான ஆர்வத்தால்தான் இந்த முயற்சி என்பதை உறுதி செய்ய முடிகிறது.

திருச்சிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி, அதன் மாணவர் விடுதி, மது அருந்தகத்துடன் கூடிய தாபா ஆகியவைதான் கதைக் களம். சுற்றுவட்டார கிராமங்களின் அரசியல் பின்னணியில் 1999-ல் நிகழ்வதாக கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு ஜாலியாக கல்லூரிக்குள் வலம்வரும் நான்கு இறுதியாண்டு இளைஞர்கள். மதுவும் சிகரெட்டும் மட்டுமே அத்தியாவசிய தேவையாகக் கொண்ட அவர்களது அன்றாட வாழ்க்கை. கூடவே, நாயகனின் முன்னாள் காதல். இன்னொரு பக்கம், போதையும் மாதுவுமாக பொழுதைக் கழிக்கும் உள்ளூர் பெரும்புள்ளியின் மகன். இவ்விரு தரப்புக்கும் அவ்வப்போது உரசல். இவர்கள் புழங்கும் தாபாவுக்குச் சொந்தக்காரரான சாதி சங்கத் துணைத் தலைவர் சாதிக் கட்சித் தொடங்கும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறார். இந்த மூன்று தரப்பும் சம்பந்தப்பட்ட அடிதடி, தகராறு, பழிவாங்கல், சூழ்ச்சிகளை உள்ளடக்கியதுதான் 'உறியடி'.

உள்ளூர் சாதி அரசியல் உருவெடுப்பதன் பின்னணி, மாணவர்களை சாதிய ரீதியில் தூண்டி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்ச்சி, கலவரத்தைத் தூண்டுவதன் மூலம் சாதிச் சண்டைகளை மூட்டி, அதை அரசியல் ரீதியில் சாதகமாகப் பயன்படுத்தும் உள்ளூர் அரசியல், பெரிய அளவிலான பிரச்சினைகளுக்கு சின்னச் சின்ன தகராறுகள் எப்படி மூலக் காரணமாக இருக்கின்றன என்ற உண்மை நிலை, எல்லாவற்றுக்கும் மேலாக சர்வ சாதாரணமாகவிட்ட வன்முறைகள் முதலானவற்றை திரைக்கதையின் வழியாக அழுத்தமாக பதிவு செய்ய முயன்றிருப்பது தெரிகிறது.

நம் சமூகத்தில் மிக எளிதாக கிடைக்கின்றன என்பதாலேயே அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் எந்தப் பிரச்சார நெடியும் இல்லாமல் சொல்லாமல் சொன்னது சிறப்பு. வன்முறைகளை முதலீடாகக் கொண்ட சாதி அரசியலுக்கு எதிராக வேறு வழியின்றி வன்முறைகளையே கையிலெடுக்க வேண்டியது கட்டாயம் என்பதைக் காட்டியதும், அதை மாணவர்கள் புத்திசாலித்தனமாக கையாளும் விதமும் விவாதிக்கத்தக்கது.

படத்துக்கு மைம் கோபியின் உறுதுணை நடிப்பு மிக முக்கியமானது. விஜய் குமாரும், அவரது நண்பர்களாக வரும் மூவரும் இயன்றவரை இயல்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மொக்கை காமெடிகள், குத்துப் பாட்டுகள், நடனங்கள், வழக்கமான காதல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, பார்வையாளர்களின் மனதை திரைக்கதையின் மீது ஒருமுகப்படுத்த முயற்சி செய்திருப்பதில் இளம் படைப்பாளி விஜய் குமாரை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால், ஆரம்ப காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தில் அமெச்சூர்த்தனம் மேலோங்கியிருந்ததும், படத்தின் முக்கியப் பகுதிக்குச் செல்லும் வரை குறும்படம் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தியதும் மிகப் பெரிய பின்னடைவு. அதேவேளையில், கதை தீவிரத்தன்மையுடன் வேகமெடுக்கத் தொடங்கியதும் அப்படியே வேறொரு மிரட்டலான அனுபவம் கிடைக்கிறது. மேல்மட்ட அளவில் அல்லாமல், உள்ளூர் அளவில் நிகழும் ஓர் அரசியல் - க்ரைம் த்ரில்லர் சினிமாவாக ஈடுபாடு கூடுகிறது.

இந்தப் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதற்கான நியாயத்தைத் தெளிவாகவே காட்டுகிறது வன்முறைக் காட்சிகள். வழக்கமான மசாலா படங்களில் காட்டப்படும் ரசிக்கத்தக்க வன்முறைக் காட்சிகள் போல் அல்லாமல், நிஜத்தில் நிகழும் வன்முறைகளை அப்பட்டமாக கேமராவில் பதிவு செய்திருக்கிறார்கள். நாம் நேரில் வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது போலவே பீதியான அனுபவத்தை திரையில் ஓடவிட்டிருப்பது, படக்குழுவின் திறமைக்கு சான்று.

வன்முறைகளை 'ரா'வாக காட்டாமல், அதன் தாக்கத்தைக் காட்டும் திரைப்பட உத்திகளைக் கையாண்டிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், நட்டநடு ரோட்டில் கணவனும் மனைவியில் மூவரால் வெட்டப்படும் சிசிடிவி காட்சிகளை செய்தி சேனல்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகி, அதை மக்கள் மிகச் சாதாரணமாக பார்த்து கடந்து செல்லும் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைகளை உள்ளது உள்ளபடி சினிமாவில் காட்டினால் என்ன தப்பு என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆக்‌ஷன் காட்சிகளைப் போலவே மற்ற காட்சிகளிலும் அமெச்சூர்த்தனம் வெளிப்படாதபடி படமாக்கியிருந்தால், நிச்சயம் 'உறியடி' வேற லெவலுக்குச் சென்றிருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை உள்ளிட்டவை வன்முறைக் காட்சிகளுக்கு மட்டுமே கச்சிதமாகப் பங்காற்றியிருக்கிறது. ஆனாலும், மசாலா ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ள தமிழ் சினிமாவில் 'உறியடி' போன்ற முயற்சிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தே ஆகவேண்டும்.

*

'உறியடி' படத்தை சென்னை உட்லன்ஸ் சிம்பொனி திரையரங்கில் பார்த்தேன். உட்லன்ஸ்சில் 'இது நம்ம ஆளு' படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், வெயிலுக்கு ஏசி வாங்க வந்தவர்கள், ஓய்வு பெற்ற சினிமா ஆர்வலர்கள்தான் அதிகம் வந்திருந்தனர். என் சீட்டுக்குப் பின்னால் 5 கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே காட்சிக்குக் காட்சி படத்தைக் கலாய்க்கத் தொடங்கினார்கள். இடைவேளைக்கு முன் 15 நிமிட நேரம் அவர்கள் அமைதியாக படம் பார்த்தார்கள். 'என்னடா அதுக்குள்ள இன்டர்வெல்' என அதிர்ச்சியானார்கள். ஓரளவு நிரம்பியிருந்த கூட்டத்தைப் பார்த்து, 'நம்மள மாதிரி நிறைய பேரு வெட்டியா இருக்காங்க போல' என்று கமெண்ட் செய்தார் ஒரு மாணவர்.

மீண்டும் படம் தொடங்கியது. என் பின் சீட்டில் அமைதி நிலவத் தொடங்கியது. படம் முடியும் வரை அந்த அமைதி நீடித்தது. படமும் முடிந்து எழுந்தார்கள். அவர்களின் ரியாக்‌ஷனை கவனிக்கும்போது, அவர்களையும் 'உறியடி' வசப்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. ஆரம்பத்தில் செல்போனை நோண்டிக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும் இருந்த அவர்களை ஒன்றரை மணி நேரம் திரையின் மீது மட்டுமே கவனத்தைக் குவிய வைத்திருக்கிறது உறியடி. 'எக்ஸ்பிரிமென்ட்டல் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நமக்கே தெரியாமல் நாம் ரசித்துவிட்டுச் செல்வோம்' என்பதைதான் அந்தக் கல்லூரி மாணவர்கள் உணர்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்