2000-க்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஆஸ்தான கவிஞராகிப் போன மறைந்த நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று . சமூக வலைதளங்கள், தொலைகாட்சிகள் என அவரது பாடல் வரிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நா.முத்துக்குமார் எழுதிய வரிகளின் தாக்கம்தான் இன்றும் அவரை கொண்டாடப்படக் கூடியவராக மாற்றி இருக்கிறது. நா.முத்துக்குமார் மட்டும்மல்ல, பட்டுக்கோட்டை கல்யாண சுந்திரம் தொடங்கி இன்றளவு பல கவிஞர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதில் மாற்று கருத்தில்லை.
ஆனால், தமிழ் சினிமா பாடல்கள் வரிகளிலிருந்து விலகி சென்றுக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் கடந்த சில வருடங்களாக எழுந்து வருகிறது. அண்மை உதாரணத்துக்கு தனுஷின் ‘தாய்க் கிழவி’ பாடலை கூறலாம். இப்பாடல் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்பாடலுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. எனினும் இப்பாடலின் வரிகள் சார்ந்த நெருடலும், விமர்சனமும் சராசரி ரசிகனுக்கு வருவதில் தவறில்லையே. நா.முத்துக்குமாரின் பிறந்த நாளில், இப்பதிவின் மூலம் தமிழ் சினிமாவில் வரிகளுக்கான முக்கியத்துவம் குறைந்திருக்கிறதா என்றுதான் பார்க்க இருக்கிறோம்.
சமீபத்தில் இணையத்தில் ஒரு விவாதம் எழுந்தது. 2010-க்கு பிறகுப் தமிழ் சினிமா, “பாடல் வரிகளை கைவிட்டு விட்டதாகவும், பாடல்கள் பெரும்பாலும் இரைச்சல்களாகவும், அவற்றின் உயிர்ப்பு தன்மையிலிருந்து விலகி ஒரு குறுகிய டிரெண்டுக்காக பதிவு செய்யப்படுகிறது” என்பதே அது. இந்த விமர்சனங்களில் எந்தத் தவறு இல்லை. பலரும் தமிழ் சினிமாவில் பாடல் வரிகளுக்கும், இசைக்கும் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக உணர்கிறார்கள். இளையராஜா கூட தற்போதைய இசை டிரெண்ட் குறித்து இதே கருத்தைத்தான் பதிவு செய்திருந்தார்.
ஹிரோக்களின் பாடல்கள்: தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்கள் தங்களின் படங்களுக்கு ஒன்றிரண்டு பாடல்களையாவது எழுதி விடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களின் பாடல் வரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வரிகளாகவே இருக்கிறது. அதாவது, அந்தப் பாடலின் உயிர்க் காலம் குறைவு. சில நாட்கள் கொண்டாடிவிட்டு தூக்கிப் போடும் ரகத்தைச் சேர்ந்தவை. இதிலும் சில பாடல் வரிகள் அத்தி பூத்தார்போல பல காலங்கள் நிலைத்து இருக்கலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகச் சொற்பம் என்பது கவலைக்குரியது.
தலைமுறை இடைவெளி - இந்தக் குற்றச்சாட்டுகள் எழும் அதே வேளையில் இதனை தலைமுறைகளுக்கான இடைவெளி என்றும் கருதலாம். இன்றைய இளைஞர்களின் ரசனைகளுக்கான பாட்டைதான் எழுதுகிறார்கள் என்று கூறலாம். அந்தந்த வயதுகேற்ற ரசனைகளும் இதில் அடங்கி விடுகின்றன. எப்படி நமது பெற்றோர்களுக்கு 2,000-க்குப் பின் வந்த பாடல்களின் மீது ஈர்ப்பு இல்லாமல் போனதோ அவ்வாறே. ஒருவகையில் இந்தப் பதிவின் தொனி ”நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில்...” என்று பொல்லாங்கு பேசுவது போலவும் இருக்கலாம். ஆனால், தமிழ் சினிமாவில் பாடல் வரிகளுக்கான வறட்சி அதிகமாகி வருவதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
பாடலாசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. தரமான பாடல் வரிகளுக்கான சினிமா கதவுகள் திறப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது என்று சிலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர். எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஷான் கருப்பசாமி, “பாவக் கதைகளுக்காக தங்கமே தங்கமே பாடலை எழுதி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பாடலும் பரவலான ஹிட். இதுவரை இன்னொரு பாடல் எழுத வேண்டி யாரும் என்னை அணுகவில்லை” என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.
பாடலாசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்: வளர்ந்து வரும் கவிஞரும், எழுத்தாளருமான முத்துராசா குமார் பேசும்போது “சினிமாவை தவிர்த்து பார்த்தால் பாடல் வரிகளுக்கான சுதந்திரம் சுயாதீன பாடல்களில்தான் அதிகம். பாடலாசிரியர்களுக்கான வாய்ப்புகள் இல்லை என்று நான் கூற மாட்டேன். உண்மையில் தற்போது வாய்ப்பு விரிவடைந்திருக்கிறது . இதில் முக்கியமான ஒன்று உள்ளது. சமீப ஆண்டுகளில் பெப்பியான பாடல்களுக்குத்தான் வரவேற்பு இருக்கிறது. அதன் காரணமாக பாடலாசியர்களும் ஒரு வட்டத்திற்குள் அடைப்பட்டு விடுகிறார்கள். இதுதான் ஹிட் அடிக்கும் என்று முன் தீர்மானத்திற்கு பலர் வந்து விடுகிறார்கள் அதனால்தான் வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குனர் - இசையமைப்பாளர் - தாயாரிப்பாளரின் முடிவுகளும் இதற்கு முக்கிய காரணம்.
இயக்குனரும், இசையமைப்பாளரும் பாடலாசிரியர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது பாடல்கள் ரீச் ஆகாது என்று நினைக்கின்றனர். மக்கள் நிச்சயம் இம்மாதிரியான பாடல்களுக்கு வரவேற்பு அளிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். அடிப்படையில் மக்கள் ரசிகர்கள். அவர்கள் டான் பட பாடல்களையும் கொண்டாடுவார்கள்... பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பாடல்களையும் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இதுதான் பிடிக்குமென்று மக்களை நாம் தீர்மானிக்கக் கூடாது. நிச்சயம் பாடலாசிரியர்களுக்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். சுதந்திரம் அளிக்கும் பட்சத்தில் வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.
ரசிகர்களின் ரசனைகளைத் தீர்மானிக்காமல், வரிகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான இடத்தை அளிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமா பாடல்கள் எல்லா காலத்திற்கு உயிர்பெற்று நிற்கும்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago