'எருமசாணி' யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த விஜய்குமார் ராஜேந்திரன் தான் சமீபத்தில் வெளியான அருள்நிதியின் 'டி ப்ளாக்' படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் மூலம் யூடியூபராக இருந்து இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் அவரிடம் பேசினோம்.
யூடியூப் உலகத்துக்குள் எப்படி நுழைந்தீர்கள்? உங்களைப்பற்றி சொல்லுங்க...
“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தேன். படித்து முடித்ததும், நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து துணிக்கடை ஒன்றை நடத்தினோம். அதில் வரும் வருமானத்தை வைத்து குறும்படங்களை இயக்கி வந்தோம். தொடக்கத்திலிருந்தே இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். அதற்கான முன்னோட்டமாக பல குறும்படங்களை இயக்கினேன்.
அப்போதே ழுழு நீள படங்களுக்கான கதைகளையும் எழுதி பட வாய்ப்புகளுக்காக தேடி அலைந்துகொண்டிருந்தேன். வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சரி அதுவரை சிறு சிறு வீடியோக்களை இயக்குலாம் என நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்தோம். யூடியூப் பிரபலமாகிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. சரியாக சொல்லவேண்டுமென்றால் 2017 சமயம். அப்படி உருவானது தான் 'எருமசாணி' யூடியூப் சேனல். அந்தச் சேனலும், எங்கள் வீடியோவும் பிரபலமானதையடுத்து, படம் பண்ண வேண்டும் என தீவிரமாக முடிவெடுத்து இயக்கிய படம்தான் 'டி ப்ளாக்'”.
» “இழப்பதற்கு ஒன்றுமில்லை” - ‘காளி’ பட போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை
» சுப்ரமணியபுரம்... இது நண்பர்களின் கதை மட்டுல்ல! - அந்த 5 ‘ப்ளாட் பாயிண்ட்’டுகள்
எருமசாணி... இந்த பெயரை வைக்க வேண்டும் என எப்படி தோன்றியது?
“சத்தியமாக அது இந்த அளவுக்கு பேசப்படும் என நாங்கள் அப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. நாங்கள் முதலில் 'ஜிகர்தண்டா' என வேறொரு பெயர் தான் வைத்திருந்தோம். அப்போது நண்பர்கள் மத்தியில், 'நல்லவேள நா அத மிதிக்கல' என்ற 'எருமசாணி' காமெடி வைரலாக பரவிக்கொண்டிருந்தது. நண்பர்களுக்குள் நாங்கள் கலாய்க்கும்போது அடிக்கடி 'எருமசாணி' என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அப்போது சரி... யூடியூப் சேனலுக்கு இந்தப் பெயரை வைத்துப்பார்க்கலாம் என யதார்த்தமாக வைக்கப்பட்டதுதான் அந்தப் பெயர். பார்த்தால், அது வைரலாகிவிட்டது.”
உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கான கான்செப்டுகளை எப்படி தேர்வு செய்தீர்கள்?
“எல்லோருக்கும் கனெக்ட் ஆகும் வகையில், நாளுக்கு நாள் நமக்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் கான்செப்டுகளை உருவாக்கினோம். ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கிறார்கள். பின்னர் ப்ரேக்அப் ஆகிறது என்றால், அதன் பிறகு அந்த பையன் என்ன செய்வான்? நண்பர்களைப் பிடித்து டார்ச்சர் செய்வான்... வேறு என்னென்ன மாதிரியான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும் என்பதை நமக்குள் நடக்கும் விஷயங்களை வைத்துதான் வீடியோக்களை உருவாக்கினோம்.
அதை கொஞ்சம் ஜாலியாக எடுத்தோம். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது நாங்கள் முழுமையாக யூடியூப் வீடியோக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். எங்கள் ஒட்டுமொத்த குழுவும் யூடியூப் வருமானத்தை நம்பித்தான் இருந்தோம்.”
யூடியூபர் விஜய்குமார் டூ இயக்குநர் விஜய்குமார்... உங்களின் இந்தப் பயணம் சாத்தியமானது எப்படி?
“அது ஒரு மிகப்பெரிய கனவுடன் கூடிய நீண்ட பயணம். எதுவும் உடனடியாக நடந்துவிடவில்லை. இந்தப் பயணத்திற்கு பின் பெரிய உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. வீட்டில் இருப்பவர்கள் கூட எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை. சாப்பாடு போட்டார்கள், அவ்வளவுதான். சினிமா பேக்ரவுண்டு, மணி பேக்ரவுண்டு என எதுவும் எங்களிடம் இல்லை. வெறும் சினிமாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற கனவு மட்டுமே எங்கள் அனைவரிடமும் இருந்தது. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தோம்.
யூடியூபுக்குள் நுழைந்தது சினிமாவுக்குள் நுழைவதற்கான மிகப் பெரிய பாதையை வகுத்து கொடுத்தது. யூடியூப்பில் இருக்கும்போதுதான் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 'நட்பே துணை' படத்தில் நடித்தேன். ஆனாலும் நண்பர்களுடன் இணைந்து குழுவாக இணைந்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசைதான் இறுதி வரை இருந்தது.
நான் இயக்குநராவதற்கு வாய்ப்பு கொடுத்தது அருள்நிதிதான். எங்களை படம் பண்ண ஊக்கப்படுத்தினார். கடுமையான உழைப்பை செலுத்தி எங்கள் முதல் படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மிகப் பெரிய பயணத்தை கடந்து வந்திருக்கிறோம். எங்களைச் சுற்றியிருக்கும் நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். எப்படி இருந்தோம்... எப்படியெல்லாம் சவால்களை சந்தித்தோம், இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பலரும் கண்கூட பார்த்திருக்கிறார்கள்.
பரோட்டா கடை அண்ணன் ஒருவர் இருக்கிறார். 'ஐயா மெஸ்' என பெயர் கொண்ட கடை அது. அங்கே கடன் சொல்லித்தான் சாப்பிடுவோம். 6 மாதத்திற்கு ஒரு முறை, 'டேய் பசங்களா, கடன் நெறைய ஆயிடுச்சு காசு பே பண்ணிட்டு போங்க' என கூறுவார். அவரெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டார். 'நட்பே துணை' படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, 'பசங்க வந்துட்டாங்க' என மகிழ்ச்சியடைந்தார். நெறைய கஷ்டங்களை கடந்தே இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆரம்பத்தில் சென்னை வந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தோம். என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை. மெரினா பீச்சில் படுத்திருக்கிறோம். இரவு 2 மணிக்கு காவல் துறையினர் வந்து எங்களை துரத்தியிருக்கிறார்கள்.
பின்னர் மலர் என்பவர் அப்போது எங்களுக்கு உதவி செய்தார். அவர் 10 நாளைக்கு வாடகை எதுவும் இல்லாமல் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தந்தார். பிறகு நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து 2,000, 3,000 என காசை வாங்கி சேர்த்து வீடு எடுத்து தங்கினோம். அந்த 1 பிஹெச்கே (BHK) வீட்டில் 15 பேர் குடியிருந்தோம். ஒரே பாத்ரூம்தான். 15 பேர் குளித்துவிட்டு வரும் வரை காத்திருப்போம். பின்னர் அப்படியே யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி, வருமானம் வர, வர முன்னேறி தற்போது இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.”
டி ப்ளாக் படத்தின் ஸ்கிரிப்டை எப்போது எழுதினீர்கள்?
“நிறைய படத்துக்கான ஸ்கிரிப்ட் எங்களிடம் இருந்தது. கமர்ஷியலாக இரண்டு, மூன்று ஸ்கிரிப்டும் இருந்தது. முன்னதாகவே படத்தின் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங்கிடம் இந்தப் படம் குறித்து பேசியிருந்தேன். ஒரே லோகேஷன்தான். ஒரு ஹாரர் - த்ரில்லர் கதை இருக்கிறது என கூறியிருந்தேன். அப்படி நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என சொல்லியிருந்தேன்.
பின்னர் அவர் தயாரிப்பாளராக மாற முடிவெடுத்தபோது, முதலில் அழைத்தது என்னைத்தான். இருவரும் பேசி, சரி... படம் பண்ணுவோம் என முடிவெடுத்தோம். 'கே-13' படத்திலிருந்தே அருள்நிதிக்கும் எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. பிறகு அருள்நிதியிடம் கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் இந்தப் படத்தை தொடங்கும்போது எனக்கு வயது 23. இப்போது 26 வயது. இரண்டு வருடங்கள் ஊரடங்கில் சென்றுவிட்டது. எல்லாமே ஒரே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
படத்திற்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?
“படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் என பலரும் படத்தைப்பார்த்து பாராட்டினார்கள். முதல் படம் மாதிரி இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக பெரும்பாலானோர் சொன்னார்கள். யூடியூபராக இருந்து பெரிய படத்தை இயக்கும்போது சிக்கல்கள் இருக்கும். இந்தப் படத்தில் அப்படியில்லை என்றும், தேர்ந்த இயக்கமாக இருந்ததாகவும் கூறினார்கள். பாராட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு பாண்டியராஜன் வாழ்த்தினார். நடிகர் சூரி பாராட்டினார். சக யூடியூபர்கள் எல்லாரும் படத்தைப் பார்ந்து நெகிழ்ந்தார்கள். இந்த ஓப்பனிங்காக தான் நாங்களும் காத்திருந்தோம். இனி எல்லோரிடமும் கதை சொல்ல ஒரு பாதை உருவாகியிருக்கிறது என்றார்கள். அதேசமயம் படத்திற்கு அவர்கள் தங்கள் யூடியூப் சேனல்களிலும் ஆதரவு தெரிவித்தார்கள்.”
யூடியூபராக ஷார்ட் வீடியோக்களை எடுத்து வந்த உங்களுக்கு சினிமா எனும் பெரிய திரையை கையாள்வது எப்படி இருந்தது?
“நான் படித்ததெல்லாம் விஸ்காம் தான். நிறைய குறும்படங்களை இயக்கியிருக்கிறோம். அதேபோல, வெப்சீரிஸ்களை இயக்கிய அனுபவமும் உண்டு. ஊரடங்கின்போது நாங்கள் இயக்கிய வெப்சீரிஸ் 1 மணி நேரத்துக்கும் மேலான நீளத்தைகொண்டது. அதற்கான ஸ்கிரீன்ப்ளேவும், சினிமாவுக்கான ஸ்கிரீன்ப்ளேவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால் சினிமாவை கையாள்வது எனக்கு கொஞ்சம் எளிதாகவே இருந்தது.
ஆனால், இந்த நாளுக்குள் படத்தை முடிக்க வேண்டும், பட்ஜெட், கால்ஷீட்டில் முடிக்க வேண்டும், என புரொடக்ஷனை கையாள்வது புதிதாக இருந்தது. முக்கியமாக யூடியூப், வெப்சீரிஸ் இயக்கும்போது, சாப்பாடு மற்ற செலவுகளை கவனிக்கவேண்டும். அந்தப் பிரச்சினையெல்லாம் இருந்தது. படம் என வரும்போது எல்லாவற்றையும் புரொடக்ஷன் பார்த்துகொள்வதால் அந்தப் பிரச்சினை இல்லாம், வேலையில் கவனம் செலுத்த முடிந்தது.”
'டி ப்ளாக்' படத்தின் கதைக்கருவை எப்படி தேர்வு செய்தீர்கள்? உண்மைகதை என்று சொல்லியிருந்தீர்கள்..
“என் அக்கா படித்த கல்லூரியில் நடந்த உண்மையான சம்பவம்தான் இது. அப்போ என் அக்கா 10 நாள் கல்லூரி போகமாட்டேன் என கூறி வீட்டிலேயே தான் இருந்தார். ஏன் என கேட்டபோது, அப்போதுதான் நடந்த சம்பவத்தைக் கூறினார். இது சில பத்திரிகைகளில் அப்போது வந்ததது. ஆனால், பெரிய அளவில் பேசப்படவில்லை. கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என நிர்வாகமும் அங்கு நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டது. பிறகு உண்மை தெரியவந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சில விஷயங்களை சேர்ந்து உருவாக்கியுள்ள படம் தான் 'டி ப்ளாக்'.”
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்திருக்கிறீர்கள்.. அது குறித்து?
“ஆதியின் 'நட்பே துணை' படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். ஆதியிடம் 'அண்ணா படத்துல வொர்க் பண்ணவா' என கேட்டேன். 'பண்ணுடா' என்றார். சினிமாவின் களம் எப்படியிருக்கிறது என்பதை அறிய அந்தப் படத்தில் பணியாற்றினேன். லைட் மேன் என்ன செய்வார்? புரொடக்ஷன் எப்படி? யார் யாருக்கு என்ன வேலை? எப்படி யார் யாரை அணுகுவது என பலவற்றையும் அறிந்து கொள்ள அந்தப் படம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.”
யூடியூப்பிலிருந்து ஒருவர் சினிமாவுக்கு நுழைய ஆசைப்படுகிறார் என்றால், அவருக்கு விஜய்குமாரின் அட்வைஸ் என்ன?
“சினிமா என்பது சாதாரண விஷயம் கிடையாது. அது பெரிய கடல். அதில் நீந்தி ஜெயிப்பது மிகவும் கஷ்டம். தொடர்ந்து உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். நான் இப்போது தான் கடலில் குதித்திருக்கிறேன். நம்பிக்கையை விட்டுவிடாமல், போராட வேண்டும். யூடியூப் உங்களுக்கு நல்ல வழி. முன்பெல்லாம் குறும்படங்களை இயக்கி அதன் மூலமாக சினிமாவுக்கு வந்தார்கள். தற்போது யூடியூப் இருக்கிறது. அதன் மூலம் சினிமாவுக்குள் நுழைவதற்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு பலரும் அதை நம்புகிறார்கள். டி பிளாக் கலெக்ஷன் வாரியாக பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது. யூடியூபர் கதை சொன்னாலும் கேட்கும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.”
நீங்கள் கதை சொல்லும்போது தயாரிப்பாளர்கள் கேட்டார்களா? அந்த அனுபவம் எப்படியிருந்தது?
“நான் நிறைய இடத்தில் கதை சொல்லியிருக்கிறேன். ஒரு யூடியூபராக சென்று உட்காரும்போது, அவர்கள் என்னிடம் கேட்பது ஒன்று தான். 'கதை சொல்லவா வந்தீங்க... நான் ஏதோ நீங்க புரமோஷன் வீடியோவுக்காக வந்தீங்கன்னு நெனைச்சேன்' என பலரும் கூறியிருக்கிறார்கள். கதையை கேட்டுவிட்டு இறுதியில், 'கதை நல்லாருக்கு. அடுத்தப் படம் ஒண்ணு ரிலீசாகிறது. அதற்கு புரமோஷன் செய்து கொடுங்கள்' என கூறுவார்கள். அப்போதுதான் அரவிந்த் சிங் அண்ணன் நம்பி கதை கேட்டார்கள். ஆரம்பத்தில் புரமோஷன் செய்ய சொல்லுவாரோ என்ற பயம் இருந்தது. ஆனால், அண்ணன் படத்திற்கு ஒப்புக்கொண்டார்.”
சினிமாவில் உங்களுடைய இன்ஸ்பிரேஷன்?
“அப்படிப் பார்த்தால் வெற்றிமாறன் தான். தெளிவாக பேசக்கூடியவர். தற்போது, லோகேஷ் கனகராஜ் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். இன்ஸ்பிரேஷனாக நிறைய பேர் இருக்கிறார்கள். அதைக் கடந்து அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் என அதை சுருக்கிவிட முடியாது.”
அடுத்த படைப்புகள் பற்றி..
“வெப் சீரிஸ்கள் இயக்கிக்கொண்டிருக்கிறோம். ஓடிடி தளம் ஒன்றுக்கு 8 எபிசோட் கொண்ட இணையத் தொடர் ஒன்றை இயக்கவுள்ளோம். படமாக பார்த்தால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நிறைய லைன் இருக்கிறது. அதற்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படும். நான் அடுத்தடுத்து இயக்கும் படங்களில் யூடியூபர்களுக்கு நிறைய வாய்ப்பு தருவேன்'' என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago