முதல் பார்வை | டி ப்ளாக் - முழுமையாக கிட்டியதா விறுவிறுப்பு, த்ரில் அனுபவம்?

By கலிலுல்லா

கல்லூரி விடுதி ஒன்றில் மர்மமாக நடக்கும் சம்பவங்களுக்கான காரணத்தை த்ரில்லர் திரைமொழியுடன் சொல்லும் முயற்சி தான் 'டி ப்ளாக்'.

கோவையின் புறநகர் பகுதியில் காட்டிற்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பை படித்து வருகிறார் அருள் நிதி. காட்டிற்கு நடுவே அமைந்துள்ளதால் அந்தக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த சூழலில் மாணவர் ஒருவர் அந்த கட்டுபாட்டை மீறி செயல்படுகிறார். அதனால் எதிர்பாராத விதமாக பல பிரச்சினைகள் வந்து சேர்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு யார் காரணம்? ஏன் இப்படி நடக்கிறது? இதற்கான பின்புலம் என்ன? என்பதை க்ரைம் த்ரில்லர் பாணியில் 'டி ப்ளாக்' திரைக்கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன்.

அருள்நிதியின் படத்தேர்வுகள் எப்போதும் சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும். அந்த வகையில் 'எருமசாணி' யூடியூப் சேனல் புகழ் விஜய்குமாரின் இந்த கதையை தேர்வு செய்து வாய்ப்பளித்திருக்கிறார். படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் அருள் நிதி, வழக்கம்போல கதாபாத்திரத்துக்கு உண்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ராவுக்கு தமிழில் இது இரண்டாவது படம். இன்னும் நடிப்பில் அவர் மெனக்கெடவேண்டிய தேவையை காட்சிகள் உணர்த்துகின்றன. தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆதித்யா கதிரின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. இயக்குநர் விஜய்குமாரை ஜாலியான நடிப்பில் பார்த்து பழகியவர்களுக்கு, அவரது சீரியஸ் ஆக்டிங் உணர்ச்சிகளின் வறட்சியை காட்டுகிறது. நடிகர் சரண்தீப் ஆக்ரோஷமாக மிரட்டியிருக்கிறார்.

படத்தின் ஒன்லைனை கேட்கும்போது, நல்ல த்ரில்லர் கதையாக தோன்றலாம். ஆனால், அதை படமாக்கும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியான சவால்களில் தான் தடுமாறியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல் பாதியை பொறுத்தவரை சஸ்பென்ஸ், த்ரில்லருடனே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். இடைவேளை வரை அந்த சஸ்பென்ஸை கொண்டு சென்ற விதம், இரண்டாம் பாதி மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

முதல் பாதியில் ஓரளவு திரைக்கதை கைகூடி வந்திருக்கிறது. ஆனால், முதல் பாதியில் இழுத்துபிடித்த சஸ்பென்ஸ் கயிற்றை இரண்டாம் பாதியில் அப்படியே விட்டுவிட்டதால் கட்டுப்பாடில்லாமல் அது கையை விட்டு நழுவியிருக்கிறது. முதல் பாதியில் திரைக்கதை எழுத எடுத்துக்கொண்ட பொறுமையை இரண்டாம் பாதிக்கும் கொடுத்திருக்கலாம். சஸ்பென்ஸூக்கு பிறகு வேக வேகமாக திரைக்கதை எழுதி முடித்தைப்போல தோன்கிறது.

படத்தில் மற்றொரு பிரச்சினை, எதிர்மறை கதாபாத்திரத்தின் உருவத்தை பலமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால், அதே பலத்தை அதை எழுதிய விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கான வெயிட்டை ஏற்றுவது பின் கதைகளால் அதை கட்டமைக்கும் விதம் தான். அது இந்தப்படத்தில் மிஸ்ஸிங்! சொல்லப்போனால் எல்லா கதாபாத்திரங்களும் மேலோட்டமாக எழுதப்பட்டது போன்ற உணர்வை தருகிறது.

பொதுவாக, த்ரில்லர், ஹாரர் பாணியிலான கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் அது முற்றிலும் இல்லாதது பெரிய மைனஸ். அதேசமயம் ஒரு சில காட்சிகள் சீட்டின் நுனில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு, விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் படத்திற்கு பலம்.

பின்னணி இசை படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. கணேஷ் சிவா எடிட்டிங் த்ரில்லர் காட்சிகளுக்கான உணர்வை பார்வையாளர்களுகு கடத்துவதில் பெரும் பலம் சேர்க்கிறது.

யூடியூப் சேனலிலில் தொடங்கி இயக்குநராக பரிணமித்திருக்கும் விஜய்குமாருக்கு இந்தப்படம் ஒரு நல்ல தொடக்கம் தான். ஆனால், அவர் திரைக்கதையை எழுது வேண்டிய விதத்திலும், க்ரைம் த்ரில்லருக்கான கதைக்களத்தில் இறங்கி அடிக்க இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் 'டி ப்ளாக்' சுவாரஸ்யத்துக்கான படைப்பாகவே உருவாகியிருக்கிறதே தவிர அந்த சுவாரஸ்யத்துக்கு உயிரூட்டவும், நியாயம் சேர்க்கவும் தடுமாறியிருக்கிறது.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்