முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு

By கலிலுல்லா

தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் ஒன்லைன்.

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் ராதாகிரஷ்ணன், மாதவன் (ஷாஜி சென்) என்பவரால் ஏமாற்றப்படுகிறார்.

ஊர்க்காரர்களின் பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு மாதவன் தலைமறைவாக, ஊராரின் கோபம் ராதாகிருஷ்ணனை நோக்கி திரும்புகிறது. இந்த பிரச்சினைகளை அவர் எப்படி சமாளித்தார்? அந்த ஊர் மக்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? குழந்தைகளை படிக்கவைத்தாரா இல்லையா? இறுதியில் என்ன ஆனது? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'மாமனிதன்' படத்தின் திரைக்கதை.

ராதாகிருஷ்ணனாக விஜய் சேதுபதி. ஒரு சராசரி குடும்பத்தலைவனுக்கான கதாபாத்திரத்தில் பொருந்திப்போகிறார். அவருடைய கதாபாத்திரம் எழுதியிருக்கும் விதமும், அதற்காக நடிப்பின் மூலம் அவர் சேர்த்திருக்கும் நியாயமும் படத்திற்கு பலம்.

அம்பிகாவாக நடித்திருக்கும் காயத்ரி, நடுத்தர குடும்பங்களிலிருக்கும் வழக்கமான மனைவியாகவும், குழந்தைகளை எண்ணி வருந்தும் டெம்ளேட் தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். நடிப்பில் அவர் குறைவைக்கவில்லை என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் குறை தெரிகிறது.

இஸ்லாமியராக வரும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு படத்திற்கு பக்கபலம். அண்மைக்கால சினிமாவில் இஸ்லாமியர் ஒருவரை அடர்த்தியான கதாபாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஆறுதல். படம் முடிந்த பிறகு யோசித்தாலும், கஞ்சா கருப்பு கதாபாத்திரத்தின் தேவையை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஷாஜி சென் குறைந்த காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் நிறைவைத் தருகிறார்.

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சீனுராமசாமியும் விஜய் சேதுபதியும் இணைந்துள்ள படம். ஒருவனின் வாழ்க்கையைப் பற்றி பேசும் இப்படம் சிறுகதை போல திரையில் விரிகிறது. படத்தின் முதல் பாதி, விஜய் சேதுபதி எனும் மனிதனையும், அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்தும் கட்டமைக்கும் காட்சிகளிலேயே நகர்கிறது. அதில் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் அந்தக் காட்சிகள் பெரிய அளவில் அயற்சியைத் தரவில்லை. கஞ்சா கருப்பு கதாபாத்திரத்தின் வழியாக வலிந்து திணிக்க முயற்சித்திருக்கும் காட்சிகள்தான் சோதிக்கிறது.

ராதாகிருஷ்ணன் என்பவனையும், அவரது குடும்பத்தையும் முதல் பாதியில் அறிமுகப்படுத்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் என்ன செய்யப்போகிறார் என்ற ஆவலுடன் இடைவேளைக்குப் பிறகு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கு தொடக்க காட்சிகள் ஈர்க்கிறது. காட்சிகள் நகர, நகர விஜய் சேதுபதியை நல்லவராக ஐ மீன் 'மாமனிதன்' ஆக காட்ட முற்படும் காட்சிகளுக்கான எழுத்து கதையோடு ஒட்டாமல் ஓடிவிடுகிறது. அது ஒரு நாயக பிம்பத்தை கட்டி எழுப்ப திணிக்க வேண்டிய எழுத்தாக மாறியிருப்பது ஒரு காரணம். அதில் தப்பித்து சில எமோஷனல் காட்சிகள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்வது ஆறுதல்.

தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு கேமராவை கொண்டு சென்று, ஆன்மிகத்தில் கதையை கலக்கச் செய்திருப்பது ஏதோ ஒரு வகையில் நாயகனை மாமனிதனாக்கிட வேண்டும் என்ற இயக்குநரின் கஷ்டம் புரிகிறது. ஆனால், அதற்காக ஓவர் ஹைப் வேண்டாமே!

குரு சோமசுந்தரத்தின் முஸ்லிம் கதாபாத்திரமும், கேரளாவில் கிறிஸ்துவ பின்னணி கொண்ட கதாபாத்திரங்களையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் தற்கால அரசியல் சூழலில் கவனம் பெறுகிறது. அதேபோல வாரணாசியில் இந்து கோயிலில் முஸ்லிம் ஒருவர் தொழுகை நடத்தும் காட்சிகள் மிகையாக இருந்தாலும், ரசிக்கவே வைக்கிறது. மதசகிப்பத்தன்மை குறித்த காட்சிகளுக்காக இயக்குநரை நிச்சயம் பாராட்டலாம்.

தவிர, காலங்கள் வேகமாக ஓடுவதை காட்டிய விதம் உள்ளிட்ட பல லாஜிக் சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, படம் முழுக்க ஆணை சார்ந்து தான் பெண் காதபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியைச் சார்ந்தோ அவர் போன பிறகு, அவரது நண்பரைச் சார்ந்தோ, வளர்ந்த பிறகு மகனைச் சார்ந்தோ தான் காயத்ரி இருக்கிறாரே தவிர, அவருக்கான எந்த முக்கியத்துவமோ, அவர் சம்பாதித்து குடும்பத்தை முன்னேற்றும் வகையிலான காட்சிகள் இல்லை. மாறாக, அழுது கொண்டு, பயந்து கொண்டிருக்கும் பெண், இறுதியில் தன் கணவனிடமே சென்று காலில் விழுவது அபத்தம்.

அதேபோல அவர்களின் மகன் இன்ஜினியரிங் படித்து முன்னேறுகிறான். ஆனால், பெண்? என்ன படிக்கிறாள் என்பது குறித்தோ எந்த விவரமும் இல்லை. 'மகள் பெரிய மனுஷி ஆயிட்டா' என சொல்வதற்கு மட்டும் தான் அந்த மகள் கதாபாத்திரம் இருக்கிறதோ என தோன்றுகிறது. காரணம், 'தர்மதுரை' படத்தில் கணவரில்லாமல் வாழும் தமன்னா சுயமாக சம்பாதித்து யாரை சார்ந்திருக்க மாட்டார். ஆனால், மாமனிதனில் பெண் கதாபாத்திரங்கள் எழுதியிருக்கும் விதம் பலவீனம்.

தவிர, 'போய்வாடா என் பொலிகாட்டு ராசா' என்ற பாடலின் உணர்வைத் தருகிறது 'நெனைச்சதொன்னு நடந்ததொன்னு என் ராசா' பாடல். கிராமத்து வாசனையை தூவியிருக்கும் இளையராஜா - யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஈர்க்கிறது. தேனி, கேரளா, உ.பி என அந்த ஊருக்கு அழைத்துச் சென்று ஒளிப்பதிவில் திரைவிருந்து படைத்திருக்கிறார் சுகுமார். ஸ்ரீகர் பிரசாத்தின் கட்டிங் கச்சிதம்.

மொத்தத்தில் 'மாமனிதன்' டைட்டிலுக்காக ஒரு மாமனிதனை கட்டமைக்கும் கட்டாயத்தில் எழுதப்பட்டிருக்கும் படைப்பாக மாறியிருக்கிறது. கதை எழுதிய பிறகு அதையொட்டி டைட்டிலை வைத்திருக்கலாமோ?

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்