முதல் பார்வை | அடடே சுந்தரா - அழுத்தமான கதையுடன் நீ.....ண்ட பொழுதுபோக்கு சினிமா

By கலிலுல்லா

'கர்ப்பம் தரிக்க முடியலன்னா எனக்கு மதிப்பில்ல' என்று படத்தில் பெண் ஒருவர் பேசும் ஒற்றை வசனம்தான் 'அடடே சுந்தரா' படத்தின் ஒட்டுமொத்த ஆன்மா.

இந்து குடும்பத்தில் பிறந்த சுந்தரும், கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த லீலாவும் காதலிக்கிறார்கள். இருவரும் தங்கள் குடும்பத்தில் நேரடியாக சென்று காதலிப்பதாக கூறினால் நிச்சயம் ஒப்புதல் கிடைக்காது. எனவே, இருவரும் இணைந்து தத்தம் குடும்பத்தில் தலா ஒரு பொய்யைச் சொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் இரண்டு பொய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதையொட்டி நிகழும் சம்பவங்கள் என நீண்ட்டடடட திரைப்படமாக உருவாகியிருக்கிறது 'அடடே சுந்தரா' .

பொய்யைச் சொல்லி மாட்டிக்கொள்ளும்போது முழிப்பது, குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவிப்பது, மேலதிகாரியை கலாய்ப்பது, காதலிக்காக உருகுவது என சென்டிமென்ட் காட்சிகளிலும், நகைச்சுவைக் காட்சிகளிலும் சமமாக ஸ்கோர் செய்திருக்கிறார் சுந்தர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நானி. நகைச்சுவைக் காட்சிகள் அவருக்கு நன்றாகவே கைகூடியுள்ளது. எனர்ஜியும், எக்ஸ்பிரஷன்ஸ்களும் அவரது நடிப்புக்கு பலம் சேர்க்கிறது.

அடுத்ததாக, படம் தொடங்கியதிலிருந்து நஸ்ரியாவைத் தேடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு லீலாவாக திரையில் தோன்றுகிறார். அவருக்கு பலமான க்யூட் எக்ஸ்பிரஷன்கள் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். மற்றபடி, முதல் பாதியில் ஜாலியாகவும், இரண்டாம் பாதி முழுவதும் பதட்டத்தை சுமந்துகொண்டும், பரபரப்பாகவும் எமோஷனாலாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நஸ்ரியா. அவருக்கு இந்தப் படம் நல்லதொரு கம்பேக்.

இடையிடையே அனுபமா பரமேஸ்வரன் வந்து செல்கிறார். தவிர நரேஷ், ரோகிணி, அழகம்பெருமாள், நதியா ஆகியோர் மூத்த நடிகர்கள் என்பதை நடிப்பில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். நானிக்கு முதலாளியாக வரும் தெலுங்கு நடிகர் ஹர்ஷ வர்தன் நகைச்சுவையால் கலகலப்பூட்டுகிறார்.

படம் மேற்கண்ட கமர்ஷியல் கதைக்களத்தைத் தாண்டி முக்கியமான பிரச்சினையை மையமாக கொண்டிருக்கிறது. 'ஒரு பெண் கர்ப்பமடைவது ஒரு சாய்ஸ் தான். கட்டாயமில்லை' என்பதும், இன்னொரு காட்சியில் பெண் ஒருவர், 'நான் கர்ப்பமாகலன்னா எனக்கு மதிப்பில்ல தானே?' என்ற இந்த இரண்டு வசனங்கள் முக்கியமானது. இதையொட்டி படத்தை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்றிருந்தால் படம் வேறொரு பரிமாணத்தில் பேசப்பட்டிருக்கும். காதல் காட்சிகள், நகைச்சுவை, கமர்ஷியலில் சிக்கியதால் பேச வேண்டிய பிரச்னையை மேலோட்டமாக பேசியிருப்பது ஏமாற்றமே.

தங்கள் பலவீனத்தை மறைக்க வேண்டிய சூழல் வந்தால், மக்கள் மதங்களை மறந்துவிடுவார்கள் என்பதையும், ஆண்களுக்கான குறைகள் மூடிய மறைக்கப்படுவதும், பெண்களுக்கான குறைகள் பூதாகரமாக்கப்படுவது குறித்தும் படம் பேசுகிறது.

அழுத்தமான கதையை கமர்ஷியல் காரணங்களுக்காக பேசத் தவறியிருக்கிறது படம். அதேபோல நான் லீனியர் பாணியை கையாண்ட விதம் படத்திற்கு பலத்தைச் சேர்ந்தாலும், காட்சிகளை முன்னும் பின்னுமாக அடுக்கியதால் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

படத்திற்கு நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுத்திருக்கின்றன. குறிப்பாக, நானி தன்னுடைய மேனேஜரிடம் கதை சொல்வது, விபத்துக்குப் பிறகு அப்பாவிடம் பேசும் காட்சிகள், பொய்யை சமாளிக்க நடக்கும் போராட்டங்கள் என சில சுவாரஸ்யமான நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், படத்தின் நீளம் பெரிய அளவில் சோர்வைத் தருவதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் இடைவேளை என நினைத்து வெளியில் செல்ல முயன்ற பார்வையாளர்களை 'அதுக்கு இன்னும் டைம் இருக்கு' என உட்கார வைத்து பொறுமை சோதிக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் டப்பிங் தனித்து தெரிகிறது. சொல்லப்போனால், நானியின் தந்தை கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைத்திருக்கலாம் என்ற தோன்ற வைக்கிறது.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கவனம் பெறுகிறது. விவேக் சாகரின் பிண்ணனி இசை ஒரு சில காட்சிகளில் ஓகே என்றாலும், ஒட்டுமொத்தமாக கவனம் பெறவில்லை. படத்தொகுப்பு செய்திருக்கும் ரவி தேஜா கிரிஜாலா இயக்குநரின் பேச்சை மீறி தயவு தாட்சணையின்றி கட் செய்திருந்தால் படத்தின் வெற்றிக்கு அவர் கூடுதல் காரணமாக இருந்திருப்பார்.

மொத்தத்தில் 'அடடே சுந்தரா' அழுத்தமான கதையம்சம் கொண்ட நீளமான பொழுதுபோக்கு சினிமா.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்