குட்டிப் பாடல்களால் ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட இளையராஜா - சிறப்புப் பகிர்வு

By குமார் துரைக்கண்ணு

சுற்றிலும் மலைகள், மரங்கள், குறுக்கே பாயும் ஆறு... இப்படி இயற்கையின் அழகை ரசித்தப்படி, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியில் எங்கோ இசைக்கப்படும் பாட்டொன்று, தூரத்து மலை முகட்டின் மீது காதில் விழுகிறது. அப்போது, அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளருக்கோ, பாடலைப் பாடிய பாடகருக்கோ தெரிந்திருக்கவில்லை, இந்தப் பாடல் பிற்காலத்தில் ஒரு ராகதேவனை உருவாக்கும் என்று. ஆம், பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த மாணவர் ‘இசைஞானி’ இளையராஜா. இசைஞானி இளையராஜாவை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கு வகித்த அந்தப் பாடல் "மாலை பொழுதின் மயக்கத்திலே". இதை இளையராஜாவே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

தனது தன்னிகரில்லா இசை மூலம் மனித மனங்களை ஆட்சி செய்வதில் இளையராஜாவுக்கு எப்போதும் பெரும்பங்கு உண்டு. இந்திய திரையிசை வரலாற்றை இளையராஜா வருகைக்கு முன், இளையராஜா வருகைக்குப் பின் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். காரணம் ஒரு காலக்கட்டம் வரை இசை மரபுகள், கட்டமைப்புகள் என்ற சட்டகத்திற்குள் அடைபட்டுக் கிடந்தது. இளையராஜாவின் வருகையே இசையை எளிமையாக்கியது. இசையை சாமானியர்களுக்கானதாக மாற்றியதில் இளையராஜாவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அவரது பிறந்தநாளான இன்று, பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

‘கட் சாங்ஸ்’ கலாசாரம் இன்றைய இளையதலைமுறையினரின் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தக் கலாசாரம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது வீட்டிற்குச் செல்ல கூட நேரமில்லாமல் இளையராஜா இசையமைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே இந்த ‘கட் சாங்ஸ்’ முறையெல்லாம் கொண்டு வந்துவிட்டார். ஒவ்வொரு முறையும் அவரது திரைப்படப் பாடல்களை சிலாகித்துப் பேசுபவர்கள் இந்த ஒன்று, இரண்டு நிமிடம் வரும் குட்டிக் குட்டிப் பாடல்களை பேச மறந்துவிடுகின்றனர். அப்படி பலரும் பேச மறந்த சில குட்டிப் பாடல்களின் பட்டியல்:

ஏ குருவி சிட்டுக் குருவி: ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். அந்தக் கிராமத்துக் காதல் கதையில் குருவிகளை ஒரு கதாப்பாத்திரமாக்கிய இயக்குநர் பாரதிராஜாவின் காட்சி அமைப்புகளுக்கு அத்தனைப் பொருத்தமாக அமைந்திருக்கும் இந்தப் பாடல்.

ஆத்துக்குள்ள அத்திமரம்: ‘ராஜாதி ராஜா’ திரைப்படத்தில் இப்பாடல் வரும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இளையராஜாதான். படத்தில் பாடல்களுக்கு பஞ்சமே இருக்காது. வெகுளியான ரஜினிகாந்த் தனது அத்தை மகளான நதியாவின் பிறந்தநாளுக்கு வாழைத்தாரோடு செல்லும்போது, இந்தப் பாடலை எடுத்துவிடுவார். எஸ்பிபியின் குரலில் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல் இது.

தென்பாண்டி சீமையிலே: இளையராஜாவின் 400-வது படமான நாயகனில் வரும் இந்தப் பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வரும். ஆனால், படத்தின் டைட்டில் கார்டு போடும்போது இளையராஜாவின் குரலில் எப்போதும் கேட்டாலும் மனம் லயிக்கும் பாடல்களில் இப்பாடல் எப்போதும் இடம்பெற்றிருக்கும்.

நந்தவனத்தில் வந்த ராசகுமாரி: கரகாட்டகாரனில் கதாயநாகியான கனகா திருவிழாவில் சாமி கும்பிட வரும்போது, ராமராஜன் பாடுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் பாடலை கங்கை அமரன் பாடியிருப்பார். கவுண்டமணி, செந்தில் நகைச்சுவையைத் தாண்டி தவில், உருமி, பம்பையை வைத்து வெளுத்து வாங்கியிருப்பார் இளையராஜா.

தூது செல்வதாரடி: ‘சிங்கார வேலன்’ திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை ஜானகி பாடியிருப்பார். படத்தின் நாயகன் கமல் கேட்ட கேள்விகளால், தனது நடை உடைப் பாவனைகளில் மாற்றம் செய்து கொள்ளும் நாயகி குஷ்பு தனது காதலை உணரும் தருணத்திற்காக, இசையமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குட்டிப் பாடல், கேட்கும்போதெல்லாம் டெக்ஸ்ட் மெசேஜ் அளவிலாவது நமக்கு காதலை உணர்த்திவிடும்.

மணமகளே மணமகளே: ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் முக்கியமான காட்சியில் இந்தப் பாடலை பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. தான் கொடுத்த வாக்கால் நின்றுபோன திருமணத்தை நடத்த, பாதிக்கப்பட்ட பெண்ணை தானே மணந்து கொள்ள தீர்மானிக்கும் கமலின் காலில் அந்த மணப்பெண்ணான ரேவதி விழும்போதிலிருந்து தொடங்கியிருப்பார் இந்தப் பாடலுக்கான மனநிலையை இளையராஜா.

மார்கழிதான் ஓடிபோச்சு போகியாச்சு: ‘தளபதி’ படத்தின் டைட்டிலில் தொடங்கும் இந்தப் பாடல். கதையின் மையக்கரு நாயகன் போகியன்று, கூட்ஸ் வண்டியில் வருவது போல காட்சியமைக்கப்பட்டிருக்கும். அன்று போகி பண்டிகை என்பதை உணர்த்த பின்னணியில் வரும் இந்தப் பாடல், இன்னும் எத்தனை போகி வந்தாலும், நினைவுகூரப்படும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

சின்னக்கிளி வண்ணக்கிளி: ‘சின்ன கவுணடர்’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்பிபி - ஜானகி குரலில் குறைந்த நேரமே வரும் இந்தப் பாடலோடு புல்லாங்குழலால் நம் மனங்களை வருடியிருப்பார் இளையராஜா. கிளிகள் கீச்சிடுவதில் தொடங்கி, புல்லாங்குழலையும், எஸ்பிபி ஜானகி குரலையும் குழைத்து ரசவாதம் செய்திருப்பார் இசைஞானி இளையராஜா.

ஆத்துல அன்னக்கிளி: ‘வீரா’ திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் இசைக் கலைஞர் அருண்மொழி பாடியிருப்பார். நாயகி மீனாவை காதல் செய்ய, ரஜினிகாந்த் மறைந்திருந்து பாடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில் அருண்மொழி குரலில் யாருக்குத்தான் காதல் வராது?!

வார்த்தை தவறி விட்டாய்: ‘சேது’ படத்தின் இறுதிக் காட்சியை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க முடியாது. நாயகி அபிதா இறந்தபின், அஙகு வரும் விக்ரம் அழுது தீர்த்துவிட்டு எழும்போது அஙகு நிலவும் நிசப்தத்தின் ஊடே இசைஞானி குரலில் வரும் இந்தப் பாடல். காட்சியமைப்பும், விக்ரமின் நடிப்பும் ஒருபுறம் என்றால், ராஜாவின் குரல் திரையரங்கை விட்டு வெளியே வந்த பின்னும் நமக்குள் சோகத்தை அப்பியிருந்ததை யாராவது மறுக்க முடியுமா?

இந்தப் பாடல்கள் எல்லாம் ஏதோ இளையராஜா தனது இசைத் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள போட்ட மெட்டுக்கள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட படங்களின் கதையோட்டத்தில், மேற்குறிப்பட்டுள்ள பாடல்கள் வரும் இடங்கள் முக்கியப் பங்காற்றியிருக்கும். பின்னணி இசையால் மட்டுமல்ல, இதுபோன்ற குட்டிப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கட்டிப் போடும் மாயஜாலங்களை கற்றறிந்து வைத்திருப்பதால்தான் அவர் இசைஞானி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்