தந்தையின் விருப்பத்திற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு, தனக்கான இலக்கை தேடி அலையும் ஒருவன் இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் ஒன்லைன் கதை .
படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்பும் தந்தைக்கு, படிப்பைத் தவிர வேறு எதையாவது இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என தேடி அலையும் மகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். வேறு வழியில்லாமல் தந்தை சேர்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக இன்ஜினியரிங் படித்துக்கொண்டே வாழ்வின் இலக்கைத் தேடி அலைகிறார் சிவா.
அந்த கல்லூரியில் 'டிசிபிளின் கமிட்டி' தலைவராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் வலுக்கிறது. 'நீ எப்டி டிகிரி வாங்குறன்னு பாத்துட்றேன்' என சவால் விடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இறுதியில் எஸ்.ஜே. சூர்யாவின் சவாலைத் தாண்டி, தன் தந்தையின் விருப்பமான இன்ஜினியரிங்கை சிவகார்த்திகேயன் முடித்தாரா? தான் தேடிய இலக்கை எட்டிப்பிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
» கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படம் ராக்கெட்ரி
» 'பத்தல பத்தல'... - அரசியலில் அப்டேட் ஆகும் கமல், மக்களின் வாழ்வியலை கவனிப்பதில்லையா?
சக்ரவர்த்தியாக சிவகார்த்திகேயன். உடல் எடையைக் குறைத்து பள்ளி மாணவனாகவும், ட்ரீம் செய்த தாடியோடு கல்லூரி மாணவனாகவும், தாடி மீசையுடன் குடும்பஸ்தனாகவும், 3 வெவ்வேறு கெட்டப்புகளில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசமும், மெனக்கெடலும் திரையில் தெரிகிறது. துறுதுறுவென கல்லூரி மாணவனாக காதல், காமெடி, சென்டிமெண்ட், காட்சிகளில் ரசிகர்களை ஈர்க்கிறார். நடனத்திலும், தனக்கே உரிய ஸ்டைலிலும் ஸ்கோர் செய்கிறார். அங்கயற்கண்ணி கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன். `டாக்டர்` படத்தைத் தொடர்ந்து இருவரின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்திலும் ஒத்து போகிறது.
பிரியங்கா மோகனின் பலமே அவரது அப்பாவித்தனமான ரியாக்ஷன்கள் தான். அதையொட்டிய காட்சிகளை எழுதியிருந்தால் அவரது கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனால், வழக்கம்போல தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கே உரித்தான காதல் காட்சிகளிலும், ஹீரோ துவண்டு போகும்போது ஆறுதல் கூறும் காட்சிகளிலும் மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார். அவரது நடிப்புக்கு தீனிபோடும் காட்சிகள் குறைவு என்றாலும், ரசிக்க வைக்கிறார். கறார் தந்தையாக சமுத்திரகனி, அசல் நடுத்தர குடும்ப தலைவராக கவனம் ஈர்க்கிறார். தவிர சூரி, சிங்கம் புலி, பாலசரவணன், ஷிவாங்கி, ராதாரவி, மனோபாலா, முனிஷ்காந்த் என பலரும் தங்களுக்கான கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எடுத்துக்கொண்ட கதைக்களம் முக்கியமானது. '3 இடியட்ஸ்' படம் பேசிய அதே பிரச்சினை தான். பிள்ளைகளின் விருப்பத்தை மதிக்காமல், அவர்களின் கனவுகளுக்கு சிறகு கொடுக்காத பெற்றோர்கள், தலைவிரித்தாடும் இன்ஜினியரிங் மோகம், மதிப்பெண்ணை மட்டும் நோக்கிய கல்விமுறை போன்றவை கவனிக்க வேண்டியவை தான். ஆனால், தான் எடுத்துக்கொண்ட கதையில் சுவாரஸ்யமான காட்சிகளை வைக்க வாய்ப்பிருந்தும் தவறவிட்டிருக்கிறார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேர்வு வைப்பது.
சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப், கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, கல்லூரி சேர்மன் சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்பது என நம்ப முடியாத காட்சிகள் திரையிலிருந்து நம்மை அந்நியப்படுத்துகின்றன. படம் முழுக்க சிவகார்த்திகேயனை மையப்படுத்தியே ஹீரோயிசம் ஓவர் டோஸாக இருப்பது அலுப்பைத் தருகிறது. ஒரு கட்டத்தில் தந்தை குறித்து சிவகார்த்திகேயனும், சிபி சக்ரவர்த்தியும் பாடம் எடுப்பது போல தோன்றுகிறது.
அனிருத் இசையில் முதல் 'ஜலபுல ஜங்' பாடல் ஜாலி ரகம். 'பிரைவேட் பார்ட்டி' 'பே' பாடல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. 'பிரைவேட் பார்ட்டி' பாட்டின் கோரியோகிராஃபி கவனிக்க வைக்கிறது. ஹாஸ்டலுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் கே.எம்.பாஸ்கரின் கேமிரா விருந்து படைக்கிறது. ஒரு குண்டு பல்பு அளவிலான வெளிச்சத்தில் மொத்த சண்டையையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாகூரான் படத்தொகுப்பில் படத்தின் நீளம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் `டான்` பல மெசேஜை சொல்ல முயற்சித்து சிவகார்த்திகேயனை மட்டும் முன்னிருத்தி எடுக்கப்பட்ட கம்ரஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago