இதுதான் நான் 20: என்ன வருதோ... அதை செய்!

By பிரபுதேவா

பன்னெண்டு இல்ல ஒரு மணி இருக்கும். ‘‘சார் போஸ்ட்’’னு ஒரு குரல். அந்தக் குரலை கேட்டதும் எனக்கு டென்ஷன் பில்டப் அதிகமாச்சு. குரல் வந்த திசைக்கு எதிர் திசையில ஓடி டம்ளரை எடுத்து தண்ணி குடிக்க ஆரம்பிச்சேன். தாகமெல்லாம் எதுவும் இல்ல. ‘‘டேய்... பிரபு. போஸ்ட் வந்திருக்கு. போய் வாங் கிட்டு வாடா!’’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அதை கேட்காத மாதிரி தண்ணி குடிச் சிட்டிருந்தேன். அந்த அளவுக்கு பயம். போஸ்ட் கவரை அம்மாதான் போய் வாங்கினாங்க. அது வரைக்கும் நான் கதவுட்ட நின்னேன். உள்ளே வந்ததும், ‘‘சாந்தோம் ஸ்கூல் லேர்ந்து லெட்டர் வந்திருக்கு’’ன்னு சொல்லிட்டே அம்மா அந்தக் கவரை பிரிச் சாங்க. ‘இன்னைக்கு அவ்வளவுதான்’னு நெனைச்சேன். ‘‘பிரபு ஃபெயிலாயிட் டாங்க’’ன்னு அம்மா, அப்பாகிட்ட சொன் னாங்க.

எனக்கு ரிசல்ட் இப்படித்தான் வரும்னு முன் னாடியே தெரியும். அத னால நான் சோகமா இருக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன். இல் லன்னா, ‘‘ரிசல்ட் இப்படி வந்துருக்கு… நீ ஜாலியா இருக்கியா?’’ன்னு அதுக் கும் சேர்த்து இன்னும் அடி விழும். அத னால அப்போ இருந்த என்னோட ஒரே கவலை, அப்பா எப்படியும் நம்மை அடி வெளுத்து எடுக்கப் போறாருங்கறதுதான். அந்த நெனைப்போடவே பெட்ரூம்ல ஒரு பக்கமாப் போய் திரும்பி உட்கார்ந்திருந்தேன்.

முதல்ல அடி விழுமா, திட்டு விழுமான்னு தெரியல. அவருக்கு வாட்டமா வேற என் சோல்டர் இருந்துச்சு. அப்பா கிட்டே வர்றதை புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு கிளைமாக்ஸ் ஆரம்பிச்சுடுச்சுன்னு தெரிஞ்சுது. திரும்பி அவரைப் பார்க்கவே இல்ல. ‘‘டேய்.. பிரபு!’’ன்னார். என்னோட கதை முடிஞ்சுடுச்சுன்னு நெனைச்சி, ‘‘சொல் லுங்க அப்பாஜி’’ன்னு பயங்கர பயத் தோட கேட்டேன். தோள்பட்டையில கை வெச்சாரு. எனக்கு உடம்பெல்லாம் மரத்தே போச்சு. ‘‘பிரபு கவலைப்படா தடா… உனக்கு என்ன வருதோ, அதை செய்டா!’’ன்னு என் தோள்ல தட்டிக் கொடுத்தார் அப்பா. எனக்கு ஒண்ணுமே புரியல. ‘‘போய் சாப்பிடுடா!’’ன்னு சொல்லிட்டு அப்பா போய்ட்டார்.

அதுவரைக்கும் சோகமா நடிச் சிட்டிருந்த எனக்கு என்னை அறியாமலே பொலபொலன்னு கண்ணுலேர்ந்து தண்ணி வந்துட்டு. அப்படி ஒரு அழுகை. அந்த நேரத்துல இருந்த பசியெல்லாம்கூட போயிடுச்சு. அப்பா அடிப்பாரு, திட்டு வாருன்னு இருந்த எனக்கு, அவர், ‘உனக்கு என்ன வருதோ… அதை செய்!’ன்னு சொன்ன அந்த வார்த்தைங்க தான் நான் சினிமாவுக்கு வர காரணமே. இன்னைக்கு உங்கள்ட்ட பேசிட்டிருக் கறதுக்கும், அந்த நேரத்துல என் தோள்ல ரெண்டு தட்டுத் தட்டி சமாதானப்படுத்தி னார் பாருங்க… அதுதான் காரணம். எப்பல்லாம் இதை பத்தி நினைக் கிறேனோ, என்னை அறியாமலேயே கண் கலங்கிடுவேன். கட்டாயமா நீங்களும் உங்கக் குழந்தைங்களை அவங்களோட தோல்வியான நேரத்துல தட்டிக்கொடுங்க. அவங்களுக்கு என்னத் தெரியுதோ.. அதில் பெருசா வருவாங்க.

நான் பார்த்திருக்கேன்.. நிறையப் பேர் ஒரு விஷயத்துல சூப்பர் டேலண்ட்டா இருப்பாங்க. கொஞ்ச வருஷம் கழிச்சுப் பார்த்தா அதுக்கு சம்பந்தமே இல்லாத வேற ஏதோ ஒரு வேலையைப் பார்த்துட்டு சாதாரணமாயிடுவாங்க. நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்னு அப்பாவுக்குத் தெரியும். ஆனா, இன்னைக்கு வரைக்கும் அதை அப்பா சொல்லி நான் ஒரு தடவைகூட கேட்டதே இல்ல. ஏன், நாங்க ரெண்டு பேரும் சினிமா பத்தி பேசிக்கிட்டதே இல்ல. இப்போதான் ஒரு வருஷமா, ‘‘என்ன படம்? என்ன பண்ணிக்கிட்டிருக்கே!’’ன்னு கேட்க ஆரம்பிச்சிருக்கார்.

ரிசல்ட் வந்த அதே நாள், எங்க வீட்டு வேலைக்காக லாரியில மரக் கட்டைங்க வந்துச்சு. வேலை செய்றவங்க எல்லாரும் பொறுமையா எறக்குனாங்க. நான் மட்டும் அப்படி ஒரு ஸ்பீடா எறக்கி வெச்சிட்டிருந்தேன். அப்போ தூரத்துல என்னோட ஃபிரெண்ட் ‘எஸ்’ வந்தான். கிட்டக்க வந்தவன் நான் வேலை செய்ற ஸ்பீடைப் பார்த்துட்டே, ‘‘என்னடா... பிரபு... ஃபெயிலாடா?’’ன்னு கேட்டான். ‘‘ஆமாம்டா’’ன்னு ஜாலியா சொன்னேன். என்னோட இன்னொரு பிரெண்ட் ‘பி’ இருக்கானே அவனும் ஃபெயில். நாங்க மூணு பேருமே பெயிலாயிட்டதுல இன்னும் ஜாலியா இருந்துச்சு. அப்படி ஒரு ‘தெய்வீக நட்பு’!

ரிசல்ட் வந்தப்போ அப்பா மட்டும் வீட்டுல இல்லாம, ஷூட்டிங்ல இருந்திருந்தா, ‘‘உனக்கு என்ன வருதோ, அதை செய்டா’’ன்னு சொல்லியிருக்க மாட்டார். நானும் அதை கேட்டிருக்கப் போறதில்ல. இது நடக்காமப் போயிருந்தா இன்னைக்கு உங்க முன்னால பிரபுதேவா என்பவன் இல்லை. என்னோட அந்தப் படிப்புக்கு ஒரு பியூனாகவோ, டிராஃபிக் போலீஸாவோ ஆயிருப்பேன். ஏன்னா, இது ரெண்டு வேலையும் எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலைங்க. நான் பார்த்த பெரும்பாலான படங்கள்ல பியூன் ஜாலியா இருப்பாங்க. ஃபைலை எடுத்துட்டு போறது, வர்றது அதுமட்டும்தான் அவங்க வேலையா இருக்கும்.

ஆபீஸ்ல மத்தவங்களுக்கு இருக்குற எந்த ஒரு டென்ஷனும் அவங்களுக்கு இருக்காது. எனக்குப் பிடிச்ச காமெடி நடிகர்கள் பக்கோடா காதர், நாகேஷ் சாரை எல்லாம் அப்படி நிறைய படங்கள்ல பார்த்திருக்கேன். அதேபோல, டிராஃபிக் போலீஸ். அவர் யாரை வேண்டுமானாலும் ரோட்டுல நிறுத்துவார். அவருக்கு மட்டும் அப்படி ஒரு பவர். இது ரெண்டும் சூப்பரான வேலையா இருக்கேன்னு தோணும்.

சம்மர் லீவு முடிஞ்சுது. ஃபெயிலான மாணவனாச்சே. திரும்பவும் அதே வகுப்புக்குப் போக மனசே இல்ல. அதுவும் அதே சாந்தோம் ஸ்கூலுக்குள்ள போக சுத்தமா மனசு வரல. நாலாம் கிளாஸ்ல இருந்து லெவன்த் வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல திடீர்னு திரும்பவும் அதே கிளாஸ், அதுவும் ஜூனியர் பசங்களோட எப்படிங்க படிக்க முடியும்? ரொம்ப கஷ்டமா இருந்துச்சுச்சு. ‘சே… ஒழுங்கா படிச்சிருந்தா இந்த ஸ்கூல்லயே படிச்சிருக்கலாமே’ன்னு தோணுச்சு. ‘முத்து’ படத்தில் ரஜினி சார் வீட்டை விட்டுப் போவார் பாருங்க. அது மாதிரி தாங்க நானும் என் ஸ்கூலைவிட்டுப் பிரிஞ்சேன். அந்த நேரத்துலதான் என்னோட ஃபிரெண்ட் ‘பி’, ‘‘டேய் பிரபு, பெசண்ட் நகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. அந்த ஸ்கூல்ல டுவெல்த் சேர்ந்துடலாம்டா’’ன்னு சொன்னான். நானும் சரின்னேன். அதே மாதிரி அந்த ஸ்கூல்ல போய் பிளஸ் 2 சேர்ந்தேன். ஆனா, அந்த ஸ்கூலுக்குப் போகும்பொதெல்லாம் நான் சாந்தோம் ஸ்கூலை ரொம்ப மிஸ் பண்ணேன். படிப்புல மனசே இல்ல. அந்தப் புது ஸ்கூல்லயும் மனசு இல்ல. கஷ்டப்பட்டு மூணு மாசம் ஓடுச்சு.

அந்த நேரத்துல அப்பாவோட சேர்ந்து ஒரு சாங் ஷூட்டிங் போனேன். அன்னைக்கு என்னோட லைஃப்ல ஒரு மேஜர் ஸ்டெப் எடுத்தேன். அது என்ன?

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்