'வலிமை இருக்கிறவன் தனக்கு என்ன தேவையோ, அதை எடுத்துக்குவான்' என்ற எண்ணம் கொண்ட கெட்டவனும், 'வலிமை என்பது மற்றவர்களை காப்பாற்றுவதற்குதான்' என்ற எண்ணம் கொண்ட நல்லவனுக்கும் இடையே யுத்தம் நடந்தால்... அதுவே 'வலிமை'.
கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. அந்தக் கடத்தல் கும்பலிடமிருந்து இன்னொரு நெட்வொர்க் போதைப்பொருளை கடத்துவதுடன், அதே நெட்வொர்க் சில போலீஸ் அதிகாரிகள் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களை அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க, மக்களைக் காப்பாற்ற ஒரு நேர்மையான காவலரை சென்னை காவல் ஆணையர் செல்வா தேடிக்கொண்டிருக்கும் தருணத்தில், சூப்பர் போலீஸாக வரும் அஜித், இந்தக் கொள்ளை, கொலை கும்பலை என்ன செய்கிறார் என்பதே எல்லாம்.
உதவி கமிஷனர் அர்ஜூன் கதாபாத்திரத்தில் அஜித். இளமையான தோற்றத்தில் வழக்கமான ஸ்டைலில் ஓப்பனிங்கில் மாஸ் என்ட்ரி கொடுப்பதில் இருந்து இறுதிக்காட்சி வரை ஒட்டுமொத்தப் படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குற்றவாளிகளின் கைகளுக்கு மாவுக்கட்டு போடவைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்தின் நிலை அறிந்து பண உதவிசெய்யும் போலீஸ் அதிகாரியாகவும், குடும்பத்தின் பாரங்களை தோளில் சுமக்கும் ஒரு மகனாக, சகோதரனாக அவருக்கே உரிய டிரேட் மார்க் அட்வைஸ் வசனங்கள், ஸ்டைல் என மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை தக்கவைத்துள்ளார். ஸ்டன்ட் காட்சிகளில், குறிப்பாக பைக் ரேஸ் போன்றவற்றில் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்த கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார். ஆனால், அஜித் வரும் சில சென்டிமென்ட் காட்சிகள், அவருக்கு கச்சிதமாக அமையவில்லை. அல்லது, அந்தக் காட்சிகளுக்கு கச்சிதமான பங்களிப்பை அஜித் தரவில்லை எனலாம்.
அஜித் கதாப்பாத்திற்கு இணையான ரோல், வில்லன் கார்த்திகேயாவுக்கு. சூப்பர் போலீஸை எதிர்க்கும் ஸ்மார்ட் வில்லன். கிட்டத்தட்ட 'என்னை அறிந்தால்' அருண் விஜய் ரோலுக்கு இணையான ஒன்று இதிலும். கட்டுமஸ்தான சிக்ஸ்பேக் உடம்பு, மிரட்டல் லுக், ஆக்ஷன் என அஜித்துக்கு டஃப் கொடுத்துள்ளார் கார்த்திகேயா.
ஹியூமா குரேஷி ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவ்வப்போது வந்து செல்லும் பாத்திரம் என்றாலும், அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக நடித்துள்ளார். அதேபோல் சுமித்ரா, அச்யுத் குமார், GM குமார், ராஜ் அய்யப்பன் என ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரம் அறிந்து உழைப்பைக் கொடுத்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலம், திலிப் சுப்புராயனின் ஸ்ட்ன்ட் காட்சிகளும், அதைக் காட்சிப்படுத்திய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும்தான். இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படம் என விளம்பரப்படுத்தியதை சந்தேகத்திற்கு இடமின்றி இவர்கள் இருவரும் நியப்படுத்தியுள்ளனர். பைக் சேஸிங், பஸ் ஸ்ட்ன்ட் என ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் நம்மை இருக்கையின் நுனிக்கு கொண்டுசெல்கின்றன. பின்னணி இசையில் ஜிப்ரானும், பாடல்களில் யுவன்சங்கர் ராஜாவும் கவனம் ஈர்த்துள்ளனர்.
பைக்கர்களை கொண்டு சென்னையில் நடக்கும் குற்றங்கள் நடப்பதாக விறுவிறுப்பான காட்சி நகர்வுகளுடன் படத்தின் ஓப்பனிங் காட்சி விரிகிறது. பரபரப்பான பைக் சேஸிங், விசாரணை என முதல் பாதி இதே விறுவிறுப்பு குறையாமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. இது, முதல் பாதியின் குறைகளை மறைக்க உதவுகிறது. ஆனால், இரண்டாம் பாதி அதே ஆர்வத்தை ஏற்படுத்துவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். சமூகத்தை நம்பாத ஒருவராக வில்லனை காட்சிப்படுத்தினாலும், அதற்காக அவர் சொல்லும் பின்புலமும், அதே பின்புலத்தால் பைக்கர்கள் ஈர்க்கப்படுவதாக சொல்லப்படுவதும் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டுள்ளது.
அதேபோல், சென்டிமென்ட் காட்சிகளும், தேவையில்லா காட்சிகளும் சில இடங்களில் சோர்வைத் தருகின்றன. படத்தின் நீளம், அதைவிட அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களில் குற்றத்தின் தன்மையை மிக விரிவாகவும், நுட்பமாகவும் பதிவு செய்த இயக்குநர் ஹெச்.வினோத், ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில், அஜித் என்ற மெகா ஸ்டாரின் ரசிகர்களை திருப்திப்படுத்த முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இதில் பல குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் காட்சியமைப்புகள் மூலம் அதை ஈடுசெய்துள்ளார் வினோத்.
வலிமை என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர். இந்தப் போரை மக்கள் மனதில் அல்லாமல், அஜித் என்ற ஒன்மேன் ஷோவால் அவரின் ரசிகர்கள் மனதில் மட்டும் நிலைத்து நிற்கும்படியாக எடுத்திருக்கிறார் ஹெச்.வினோத்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago