‘அழகி’ இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறாள்: தங்கர்பச்சான் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

‘அழகி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘அழகி’ குறித்த நினைவுகளை தங்கர்பச்சான் பகிர்ந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டுச் சொல்லி’ என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘அழகி’ குறித்த நினைவுகளை தங்கர்பச்சான் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

''1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு’ எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ‘அழகி’ எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள்.

சண்முகமும் தனலட்சுமியும் என்னைச் செய்தது போலவே ‘அழகி’யைக் கண்டவர்களையும் உறங்க விடாமல் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து வாழ கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் 'அழகி' இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறாள்.

ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப்பாளருமான உதயகுமாரும் விவரிக்க முடியாத மனவேதனைகளைச் சந்தித்தோம். நான் கடந்து வந்த வழிகளையும் அவமானங்களையும் மறக்க நினைத்தாலும் இயலவில்லை. திரைப்பட வணிகர்கள் இப்படத்தைப் புறக்கணித்து ஒதுக்கியதுபோல் மக்களும் செய்திருந்தால் நான் காணாமலேயே போயிருப்பேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ படங்கள் வெற்றிகளைக் குவிக்கின்றன. அவையெல்லாம் வணிக வெற்றியாகி மறக்கப்படுகின்றன. ஆனால், ஒருசில படங்கள் மட்டுமே காலங்கள் கடந்து மக்களின் மனங்களில் நிறைந்து என்றென்றும் வாழ்கின்றன.

என்னைச் சோர்ந்து விழாமல் தாங்கிப் பிடித்து வெற்றிப் படமாக்கி எந்நாளும் நினைவில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே. இம்மண்ணிலிருந்து இம்மொழியிலிருந்து இம்மக்களிடமிருந்துதான் 'அழகி' உருவானாள். இம்மூன்றிலிருந்தும்தான் நானும் உருவானேன்.

'அழகி'யைப் பாராட்டுபவர்கள் இம்மண்ணைப் பாராட்டுங்கள். இம்மொழியைப் பாராட்டுங்கள். இம்மக்களைப் பாராட்டுங்கள். இம்மூன்றிலிருந்தும் எப்பொழுது ஒருவன் விலகிச் செல்கிறானோ அதன்பின் அவனிடமிருந்து பிறக்கும் அத்தனையும் உயிரற்ற படைப்புகளாகவே இருக்கும்.

முற்றிலும் வணிகமயமாகிப்போன பெரு முதலாளித்துவ வலைக்குள் சிக்கிக்கொண்டு என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். வெறும் வணிக வெற்றியை மட்டுமே குறிவைத்து ஓடிக்கொண்டிருக்கும் இத்திரையுலகத்தில் என்னைப் போன்ற சிலர் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாமல் பயணிக்கின்றோம்.

'அழகி'யின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. என்னைப் பாராட்டு மழையில் மகிழ்வித்து வரும் முகமறிந்த முகமறியா உள்ளங்களுக்கு என்னாலும் நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளேன். தங்கள் அனைவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு தரமான சிறந்த படைப்புடன் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வெற்றி பெறும் எனும் உறுதியான நம்பிக்கையுடன்''.

இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்