பி.எச்டி படிக்கும் இளைஞனைப் பழியிலிருது விடுவிக்கப் போராடும் ஹெட் கான்ஸ்டபிளின் குற்ற உணர்ச்சியே ‘ரைட்டர்’.
35 ஆண்டுகளாகக் காவலர் பணியில் இருக்கிறார் ஹெட் கான்ஸ்டபிள் தங்கராஜ் (சமுத்திரக்கனி). இதில் பெரும்பாலான ஆண்டுகளை ரைட்டர் பணியிலேயே கழித்திருக்கிறார். குற்றவாளிகளை அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கை நீட்டி அடிக்காத அப்பழுக்கற்றவர். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் அவரின் ஒரே கனவு காவலர்களுக்காக ஒரு சங்கம் அமைப்பது. அதற்காக வழக்குத் தொடுக்கிறார். அதனால் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார். இன்ஸ்பெக்டரின் கோபத்துக்கு ஆளாகி டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடப்படுகிறார். மாற்றலாகிப் போன அங்கும் வேறு விதத்தில் அதிகார மீறல்கள் நடக்கின்றன. தர்ம சங்கடத்துக்குள்ளாகும் தங்கராஜ், ஓய்வுபெறும் நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமான சூழல் அமையக் காத்திருக்கிறார். ஆனால், காலம் வேறு கணக்குப் போட்டு அவரது உயர் அதிகாரிகளால் காய் நகர்த்தப்படுகிறது.
செய்யாத ஒரு தவறுக்காக பி.எச்டி படிக்கும் இளைஞன் தேவகுமாரனை (ஹரிகிருஷ்ணன் அன்புதுரை) அதிகாரத்தின் கொடுங்கரங்களால் பலியிட நினைக்கிறது. இதைப் பார்த்துப் பதறிப்போகும் தங்கராஜ், அந்த இளைஞனுக்கு விடுதலை சுவாசத்தை வழங்க முடிவெடுக்கிறார். அதிகாரத்தின் கோர முகத்திலிருந்து அடிமட்ட இளைஞனைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கிறார்.
அப்படி என்ன பிரச்சினை, தேவகுமாரனின் பின்புலம் என்ன, போலீஸே பலிகடா ஆக்க ஏன் திட்டமிடுகிறது, தங்கராஜ் ஏன் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார், போலீஸ் சங்கம் அமைக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
காவல்துறை குறித்தும், அதன் சிஸ்டம் குறித்தும், காவல்துறை அதிகாரிகள் குறித்தும் இருவகையான படங்கள் வெளியாகின்றன. வெளியாகிக் கொண்டே வருகின்றன. ஒன்று சூப்பர் ஹீரோ அளவுக்கு சாகச நாயகனாகக் காட்டும் படங்கள். இன்னொன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும், எளிய மக்களை வதைக்கும் காவல் அதிகாரிகளின் கறுப்புப் பக்கங்கள். இப்படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அதிலும் பொத்தம் பொதுவாக எல்லா காவல் அதிகாரிகளும் கெட்டவர்கள், மோசமானவர்கள், அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்காமல், அத்துறையிலும் நல்லவர்கள், தன் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் உதவுபவர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார் இயக்குநர் ஃப்ராங்ளின் ஜேக்கப். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல காவல்துறையின் நல்லது, கெட்டதைப் பதிவு செய்த விதம் அவர் நேர்மைக்கான சான்று.
தங்கராஜ் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவர் நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார் என்றே சொல்லலாம். பிரச்சாரப் படங்களில் வாய் வலிக்க வசனம் பேசியவர், கோபம் வருகிற மாதிரி காமெடி செய்தவர், கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும் நடித்தவர் இந்தப் படத்தில் கதாபாத்திரத்துக்குத் தேவையான கச்சிதமான நடிப்பில் கவர்கிறார். ஐம்பது வயதைத் தாண்டிய போலீஸின் உடல் மொழியும், அந்தத் தொப்பையும், பள்ளிக்கூடத்தில் அசிங்கப்பட்டு விலகி நிற்கும் தலைமுறை இடைவெளியையும் அப்படியே கடத்துகிறார். காலம் போன காலத்துல ரெண்டாவது கல்யாணம் என்று தன்னை சுய விமர்சனமும் செய்துகொள்ளும் அவரது அணத்தலைப் புறம்தள்ளமுடியாது. இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய பிறகு அது எதுவும் நடக்காதது போல் சகஜமாக சிரிப்பதும், இளம் தலைமுறையினர் மீதான வாஞ்சையும், குற்ற உணர்ச்சியில் முதல் மனைவியிடம் குமுறுவதுமாக சமுத்திரக்கனி பன்முகப் பரிமாண நடிப்பில் மனதில் நிற்கிறார். முக பாவனைகளில் அனைத்திலும் நடிப்பின் அத்தனை உணர்வுகளையும் பக்குவமாக வெளிப்படுத்தியுள்ளார்.
‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்களில் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்த சுப்பிரமணிய சிவா இதில் உணர்வுபூர்வமான நடிப்பில் மிளிர்கிறார். ஒரு தலைமுறையின் கனவை வார்த்தைகளில் விதைத்துச் செல்கிறார். கவிதா பாரதி காவல்துறை அதிகாரிக்கே உரிய கம்பீரத்தையும், அதேசமயம் பம்மும் விதத்தையும் அழகாக நகல் எடுத்திருக்கிறார். அவரின் உடல் மொழி அட்டகாசம்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஜி.எம்.சுந்தர் ஒட்டுமொத்த அனுபவத்தையும் அசால்ட்டாக இறக்கியுள்ளார். மகேஸ்வரி, லிஸி ஆண்டனி ஆகிய இருவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ‘வத்திக்குச்சி’ திலீபன் நடிப்பு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. டி.சி.யாக கவின் ஜெ. பாபு எரிச்சல்மிக்க நெகட்டிவ் தன்மைக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி படத்தின் ஓட்டத்தில் போகிற போக்கில் காமெடி சிக்ஸர்களை அடித்து தூள் கிளப்புகிறார். போலீஸை நக்கலடிப்பதும், எகத்தாளமாகப் பேசுவதும், கொஞ்சமும் பயப்படாமல் கெத்து காட்டுவதும் சிரிப்புக்கு உத்தரவாதம். மகன் குறித்துப் பேசும் அந்த ஒற்றைக் காட்சியில் திடுக்கிட வைக்கிறார்.
இனியாவின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. கதையின் கனத்துக்காக அவர் குதிரையேற்றப் பயிற்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. போஸ் வெங்கட், முத்துராமன், மாணிக்கமாக நடித்த லாயர் லெமுவேல் போன்றோரும் போகிற போக்கில் கவனிக்க வைக்கிறார்கள்.
ஹரிகிருஷ்ணனின் கதறலை அவ்வளவு சீக்கிரமாய் கடந்துவிடமுடியாது. அப்பாவி இளைஞனுக்கே உரிய அத்தனை அறிகுறிகளையும் நடிப்பில் காட்டி பரிதாப்பட வைக்கிறார். விட்டு விடுதலையாகிவிடமாட்டாரா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். இனிவரும் படங்களில் ஹரியை நிச்சயம் பார்க்கலாம். வெளிச்ச வாய்ப்புகள் அவருக்காக வரிசை கட்டி நிற்கும்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு திருவெறும்பூர், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, சென்னை நிலப்பகுதிகளை அப்படியே கண்களுக்குள் பதியம் செய்கிறது. காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் காட்டும் இரு ஷாட்களில் உருக்குலைக்க வைக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையில் அடி அடி, கானல் நீராய், யாரின் கையில் பாடல்கள் கதையோட்டத்துக்குப் பொருந்திப் போகின்றன. திரைக்கதையின் அடர்த்திக்கும் ஒத்துழைக்கின்றன. பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம்.
மணிகண்டன் சிவகுமாரின் கத்தரி படத்தின் ஒழுக்குங்குத் துணை செய்துள்ளது. தேவையற்ற காட்சிகள், ஷாட்கள் என்று எதுவும் இல்லை.
‘‘அதிகாரம் இல்லாத ஒவ்வொரு போலீஸும் அடியாள்தான்... நான் பழைய அடியாள்... நீ இப்போ புதுசா வந்திருக்குற அடியாள்... அவ்ளோதான்’’, ‘‘படிச்சா மேலத்தெருவுக்கு வரமுடியுமோ இல்லையோ, மேல வந்துடலாம்’’, ‘‘உன் கையில் கொஞ்சம் அதிகாரம் இருந்தாலும் அதைத் தப்பா பயன்படுத்தாதே, மனிதாபிமானத்தோட நடந்துக்கோ’’ போன்ற அழுத்தமான வசனங்கள் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
‘விசாரணை’,‘ஜெய் பீம்’ போன்ற படங்கள் அதிகாரத்தின் அத்துமீறலை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் அடக்குமுறைக்கு எதிரான இன்னொரு படமாக ‘ரைட்டர்’ உள்ளது. அதே சமயத்தில் காவலர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல் அவர்கள் தரப்பில் உள்ள பிரச்சினைகளையும் ஆழமாக அலசுகிறது. அதனாலேயே இப்படம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. காவல் நிலையக் காட்சிகள், பாரா டூட்டி, குற்றச் சம்பவத்தை விவரிப்பது, ஜோடிக்கும் வழக்குகள், நகைத் திருட்டுச் சம்பவங்களில் புகாரை வாபஸ் வாங்க வைக்கும் லாவகம், குற்ற எண்ணிக்கையைக் குறைக்கும் விதம் என நுட்பமான திரைக்கதையில் ஃப்ராங்ளின் ஜேக்கப், சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.
அதேசமயம் தேவகுமாரன் பாத்திரப் படைப்பில் சிக்கல் இருப்பதையும் மறுக்க முடியாது. தேவகுமாரன் அண்ணனுக்கு எதுவும் தெரியாது. பி.எச்டி படிக்கும் இளைஞர் அதுவும் தொடர்புடைய பாடத்தைப் படிப்பவர் எப்படி போலீஸின் அணுகுமுறை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் அறியாமையில் இருப்பார், அவர் எங்கும் அலர்ட்டாக இல்லை என்பதாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் உறுத்தல். நிஜத்தில் ராம்குமார் சம்பவம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சமுத்திரக்கனியின் முடிவில் சினிமாத்தனம் நிரம்பி வழிகிறது.
அதிகாரப் போக்கில் சாதி எந்த அளவுக்கு அருவருப்புக்கான ஆதார அம்சமாக இருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டி முதல் படத்திலேயே சமரசமில்லாமல் பதிவு செய்த விதத்தில் இயக்குநர் ஃப்ராங்ளின் ஜேக்கப் உயர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமா அவரை மலர்ச்சியுடன் வரவேற்கிறது.
தேவகுமாரன்களைப் பழியிலிருந்து விடுவிப்பதற்காகவும், சேவியர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் சினிமாவில்‘ரைட்டர்கள்’துணையுடன் பல படங்கள் வரட்டும்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago