இதுதான் நான் 15: ‘நினைவுகளை பிடிக்கிறதில்லை’

By பிரபுதேவா

எப்பவும் போல ஸ்கூலுக்கு போனேன். ‘‘என்னடா உடம்பு சரியில் லையா?’ன்னு ஃபிரெண்ட் கேட் டான். ‘‘அதெல்லாம் இல்லையே’’ன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு ஃபிரெண்ட்டும் ‘‘என்னடா ஜூரமா?’’ன்னு கேட்டான். ‘‘நல்லா தாண்டா இருக்கேன்’’ன்னு சொன்னேன். இப்படி அடுத்தடுத்து எல்லாரும் ‘‘என் னாச்சு.. என்னாச்சு?’’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ஏன் இப்படி எல்லாரும் கேட்குறாங்கன்னு இருந்தப்போதான், ‘‘நாள் தவறாம விபூதி வெச்சிட்டு வரு வியேடா பிரபு. இன்னைக்கு வைக் கலையே?’’ன்னு விசாரிச்சாங்க. எப்படி? ஏன் மறந்தேன்னே தெரியலை. லைஃப்ல அன்னைக்கு ஒரே ஒருநாள் மட்டும்தான் விபூதி இல்லாம போயிருந்தேன். பள்ளிக் காலம் முடிஞ்சி டான்ஸர், ஹீரோ ஆன பிறகும்கூட விபூதியோடதான் வெளி யில போவேன். அது என்னமோ சாமி கும்பிட்டு விபூதியோட போனா மனசுக்கு அப்படி ஒரு வைப்ரேஷன் கிடைக்கும். எப்பவுமே என் ஃபிரெண்ட்ஸ் என்னை விபூதி இல்லாம பார்த்ததே இல்லை.

ஆறாம் வகுப்புலேர்ந்து பதினோறாம் வகுப்பு வரைக்கும் ஸ்கூல்ல ஒரே மரத் துக்குக் கீழே உட்கார்ந்துதான் சாப்பிட்ட தெல்லாம். ஃபிரெண்ட்ஸுங்க ஒரு வகுப்புலேர்ந்து இன்னொரு வகுப் புக்குப் போறப்ப ‘சி, ’பி’ன்னு செக்‌ஷன் மாறுவாங்க. ஆனா, நாங்க சாப்பிடுற மரத்தடி இடம் மாறினதே இல்லை. ஸ்கூல்ல 25 குழாய்ங்க இருக்கும். அத்தனையிலயும் உப்புத் தண்ணிதான் வரும். அதைத்தான் குடிச்சு வளர்ந்தோம். எங்க யாருக்கும் எதுவும் ஆகலை. கிரிக்கெட், ஃபுட்பாலுக்கு அடுத்ததா எங்களோட விளையாட்டு முதுகு பஞ்சர். அதுவும் எப்பவும் ஒருத்தனையேதான் குறிவெச்சி வெளுப்போம். நாலாம் வகுப் புல எனக்கு ஃபிரெண்ட் ஆன தர்மாவை தான் குறி வெச்சி அடிப்பாங்க. அவ னுக்கு என்னடான்னா... எல்லோருமே தன்மேலதான் பிரியம் செலுத்துறாங் கன்னு அதுலகூட ஒரு சந்தோஷம். வகுப் புல டீச்சர்ஸ்கிட்டேயும், ஃபிரெண்ட்ஸ் கிட்டேயும் அடி வாங்கியே வளர்ந்தவன் அவன்.

பள்ளி நாட்கள்ல கொடைக்கான லுக்கு ஒரு தடவையும், பெங்களூரு, மைசூருக்கு ஒரு தடவையும் டூர் போயி ருக்கேன். பெங்களூருல பிருந்தாவன் கார்டனுக்குப் போனோம். திடீர்னு அங்க அஞ்சாறு பசங்க தொலைஞ்சிபோய்ட் டாங்க. அதில் நானும் ஒருத்தன். கூட என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் வர்கீஸும் இருந்தான். நாங்க டூர் வந்த பஸ்ஸை யும் மிஸ் பண்ணியாச்சு. காணாமப் போன கொஞ்சம் நேரமும் இந்த உலகத் துலேர்ந்து வேறொரு கிரகத்துல கொண்டுபோய் விட்டமாதிரிதான் இருந்துச்சு. எனக்கு கன்னடம் தெரிஞ்ச தால மேனேஜ் பண்ணி வந்து சேர்ந்துட் டோம். அந்த நேரத்துல கூட வந்த ஃபிரெண்ட்ஸுங்க, ‘நம்ம கிரகத்துக்கே மீண்டும் கொண்டு வந்துட்டியேடா’ங்குற லெவல்ல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

வர்கீஸ் பத்தி ஏன் இங்க சொல்ல வர்றேன்னா.. என்னோட ஃபிரெண்ட்ஸ்ல முதல்ல அவனைத்தான் நான் இழந் துட்டேன். அவனோட நினைவுகளை எப்படி ஆரம்பிக்கலாம்கிறதே எனக்குத் தெரியலை. இருந்தாலும் சொல்றேன்.

மயிலாப்பூர் வீட்லேர்ந்து ஸ்கூலுக்குப் போய் ஆறாவது ஏழாவது படிக்கும் போதே நானும் அவனும் பஸ்ல ஒண்ணாதான் போவோம். அவன் எனக்கு நல்ல ஃபிரெண்ட். தமிழ் புரிஞ்சிப்பான். பேச வராது. எப்பவுமே அவன் இங்கிலீஷ்லதான் பேசுவான். அவன் என்னை மாதிரி கொஞ்சம் உயரம். வகுப்புல உயரமான பசங்க எல்லாம் பின்னாடி பெஞ்ச்ல உட்கார்ந்திருப்போம். டீச்சர் பாடம் எடுக்குறப்ப பசங்க ஏதாவது குறும்புத்தனம் பண்றாங்களான்னு வெளி யில இருந்து ஸ்கூல் நிர்வாகிங்க கவனிப் பாங்க. அவங்கக்கிட்ட மாட்டிக்காம அவன்தான் என்னை பல தடவை காப் பாத்தியிருக்கான். அவன் ‘எ....ஏ..ஏ..’ன்னு இழுத்துத் இழுத்துத்தான் பேச ஆரம்பிப் பான். உடனே நாங்க ‘அபூர்வ சகோதரர் கள்’ படத்துல ‘ராஜா கையை வெச்சா.. அது ராங்கா போனதில்லை’ன்னு அவனை கலாட்டா பண்ணிப் பாடுவோம். அவனும் அப்பத்தான் என்ன சொல்ல வந்தாங்கிறதை சொல்லி முடிப்பான். வர்கீஸ் என் ஃபிரெண்டா இருந்தாலும் அவன் என்ன மாதிரி இல்லை. நல்லா படிப்பான். நல்ல ரேங்க் வாங்குவான். அதனால அவன் படிப்பை தொடர்ந்தான். நான் படிப்பைத் தொடராம சினிமாவுக்கு வந்துட்டேன்.

டான்ஸ், ஷூட்டிங்னு இருந்தப்போ ஸ்கூல் பசங்க கூப்பிட்டாங்க. ‘‘டேய் பிரபு, உன்னோட ஃபிரெண்ட் வர்கீஸ் விபத்துல இறந்துட்டாண்டா’’ன்னு சொன் னாங்க. அதை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாயிடுச்சு. அவங்க வீட்டுக்குப் போனேன். அவனை படுக்க வெச்சிருந் தாங்க. எனக்குத் தெரிஞ்சு அப்போதான் முதல் தடவையா ஒரு இழப்புக்கு போறேன். பார்த்த உடனே அழுதுட்டேன். அதுக்கு முன்னாடி அவன் வீட்டுக்கு அப்பப்போ விளையாட போயிருக்கேன். நானும், அவனும் நெருக்கமா இருந்த நாட்களெல்லாம் அந்த இடத்துல ஒரு ஃபிளாஷ்பேக் மாதிரி வந்துட்டு போச்சு.

இதெல்லாம் நான் படங்கள்லதான் பார்த்திருக்கேன். வர்கீஸை மிஸ் பண் ணுன விஷயம் பிறகு எனக்கு ஞாபகமே இல்லை. இப்போ நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கும்போதுதான் மறுபடி ஞாப கம் வந்தது. இவ்வளவு நாள் கழிச்சு அவனை நினைச்சது சந்தோஷமா? இல்லை, அவனை இழந்துட்டோமேன்னு வருத்தப்படுகிறதா? என்ன சொல்ற துன்னே தெரியலை. அதனாலதான் நினைவுகள் எனக்குப் பிடிக்கிறதில்லை.

ஸ்கூல்ல படிக்கிற வரைக்கும் எனக் குன்னு எந்த பெருமையும் இருந்த தில்லை. இப்போ எல்லாம் எனக்கு வகுப்பெடுத்த டீச்சர்ஸ்ஸைப் பார்க் குறப்ப, ‘‘எப்படி இருக்கீங்க தம்பி? உங் களை நினைச்சா எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு’’ன்னு சொல் றாங்க. ‘‘என்னடா ஒழுங்கா படிக்கிறி யாடா? நீ உருப்படவே மாட்டே’’ன்னு சொன்னவங்க… இப்போ, ‘பெருமையா இருக்கு தம்பி’ன்னு சொல்றப்ப அதி சயமா தோணுது. ஏன் இப்படி மரியாதை கொடுக்குறாங்க? படிக்குறப்ப என்னை அதட்டலா கூப்பிட்ட மாதிரி தான் இப்ப வும் கூப்பிடணும்னு மனசு சொல்லுது.

வெளிநாடுகள்ல ஒரு பையன் ஸ்விம்மிங்ல சிறப்பா வந்தா, அவனை ஸ்விம்மிங் பயிற்சிக்கு அனுப்புவாங்க, ஜிம்னாஸ்டிக்னா அதே ஜிம்னாஸ்டிக் துறைக்கு அனுப்புவாங்க. ஆனா, நம்ம ஊர்ல எதில் ஆர்வம் இருக்கோ அதில் ஒரு ஸ்டேஜ் வரைக்கும் போய்ட்டு, அப்படியே மேற்படிப்புக்குப் போய்டுறாங்க. நினைச்சுப் பாருங்க.. நீங்க சின்ன வயசுல பெஸ்ட் காட்டின விஷயத்தை இப்போ மறந்தே போயி ருப்பீங்க.. இதெல்லாம் இங்க ஒரு பெரிய விஷயமா பார்க்கப்படுறதில்லை. அதுதான் இங்க நம்மோட லைஃப் ஸ்டைல். நல்லவேளை எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச டான்ஸ்லயே டிராவல் பண்ண எங்க அப்பா என்னை அனுமதிச்சார். இப்போ என்னோட பசங்க எதில் ஆர்வம் செலுத்துறாங்களோ, அதில் விட்டுட ணும்கிறதுதான் என் விருப்பம். என்னோட பசங்களுக்கு டான்ஸ்ல ‘அ.. ஆ’ கூட ஆர்வம் இல்லை. அதுக்காக அவங்க கிட்ட அதை திணிக்க மாட்டேன். இப்போ தைக்கு அவங்களுக்கு விளையாட்டுல தான் விருப்பம். நானும் ஜாலியா விளை யாடுங்கன்னு சொல்லியிருக்கேன்.

நான் இருக்குற சினிமாவை எடுத்துக் கோங்க. ஒரு சக்சஸ் கொடுத்தாத்தான் இங்கே மதிப்பு. ஆனா, ஸ்கூல்ல நல்லா படிச்சாலும், நல்லா படிக்கலன்னாலும் பசங்கக்குள்ள ஒரே மாதிரிதான் பழகிப் போம். ஆனா, வளர்ந்து வேற வேற தொழில்னு போறப்ப அந்த ஆளுக்கு இல்லை, சக்சஸுக்கு மட்டுமே மதிப்பு தர்றோம். நாம எல்லாருமே ஸ்கூல் லேர்ந்து வந்தவங்கதான் என்பதையே மறந்துடறோம்.

பொதுவா பணம் சம்பாதிக்குறப்ப மத்தவங்களவிட அதிகமா சம்பாதிக்க தோணும். விளையாட்டுல கூட முன்னாடி ஒருத்தர் ஓடுனா அவரை முந்தணும்னு ஓடுவோம். இதெல்லாம் நினைக்கிற நாம, சாமி கும்பிடுறப்ப மட்டும் ‘அவங்கள விட, இவங்கள விட’ன்னு நினைக்காம, நம்மள மட்டுமே நினைப்போம். நம்மள சுத்தி இருக்குறவங்களப் பத்தி தப்பாவும் நினைக்க மாட்டோம். அப்படி ஒரு வைப் ரேஷனைப் பக்தியிலதான் அடைய முடியும். அதே போல, கஷ்டம் வர்றப்ப தான் பலரும் சாமியை நினைச்சுக்கு றாங்க. அது தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா, நான் எந்த மாதிரி சூழ்நிலையில சாமியைத் தேடுவேன்னா..

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்