டிசம்பர் 12 - இன்று ரஜினி பிறந்த நாள்.
எம்ஜிஆருக்குப் பிறகு அவரது பாணியைப் பின்பற்றி வந்த ரஜினி எனும் மூன்றெழுத்தில்தான் தமிழ் சினிமாவின் மூச்சும் தமிழக மக்களின் பேச்சும் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் 90ஸ், 2கே கிட்ஸ் மட்டுமல்ல சின்ன குழந்தைகளும் நம்புவார்கள். ரஜினியின் மயக்க வைக்கும் தோற்றம்தான் இதற்குக் காரணமா? இல்லை. பெரும்பாலான தமிழர்களின் கறுப்பு நிறத்தைப் பிரதிபலிப்பவர்தான் அவர். பேச்சில் அசரடிக்கிற ஆளுமையா? இல்லை. ஆனால், சில குட்டிக்கதைகளைச் சொல்லி தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யத்தைக் கூட்டுவார்.
அப்படி இருக்கும்போது ரஜினியின் ஒவ்வொரு சொல்லும் இங்கே எப்படிச் செய்தியாகிறது. அவர் வாழ்த்து சொன்னால், படம் குறித்து ட்வீட் போட்டால், அரசியல் பேசினால் அவையெல்லாம் எப்படி கவனம் பெறுகின்றன?
எங்கேயும் எப்போதும் பேசுபொருளாக, ட்ரெண்டிங்கில் ரஜினி வைரலாவது எப்படி? அதற்காக அவர் எந்த ஒரு தனி பிம்பத்தையும் கட்டமைக்கிறாரா? இல்லவே இல்லை. இதிலும் அவர் வழி தனி வழிதான். ரஜினி பிம்பங்களைக் கட்டமைப்பதில்லை. மாறாக, பிம்பங்களை உதறிக்கொண்டே, உடைத்துக்கொண்டே வருகிறார்.
» இனிய நண்பர் இன்னும் பல ஆண்டுகள் மக்களை மகிழ்விக்கட்டும்: ரஜினிக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
சுமார் 45 ஆண்டுகாலம் திரைத்துறைக்குள் கலைஞராக இருப்பவர் எப்படித் தொடர்ந்து தன் பிம்பங்களை உதறிக்கொண்டே வரமுடியும்? கதாநாயகன் அந்தஸ்து பெற ஒவ்வொரு நடிகரும் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும். பின்பு அதைத் தக்கவைத்துக் கொள்ள அதே ஆற்றலுடன் இயங்க வேண்டும். அப்படி என்றால் கட்டமைக்கப்பட்ட, கட்டி எழுப்பப்பட்ட பிம்பத்தைச் சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தச் சூழலில் எப்படி பிம்பத்தைத் தகர்த்தெறிய முடியும்? ஆனால், ரஜினி அதைச் செய்திருக்கிறார்.
பிரிக்க முடியாத இரண்டு எது என்று கேட்டால் ரஜினியும் ஸ்டைலும் என்று சொல்லிவிடலாம். ரஜினி எனும் பிம்பத்தை நினைக்கும்போது பன்ச் வசனங்கள், சிகரெட், ஹேர்ஸ்டைல், விறுவிறு நடை ஆகியவை மறக்க முடியாத அம்சங்களாக இடம்பிடிக்கின்றன.
ஆனால், இந்த பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே அதாவது ஆரம்பக் காலகட்டத்திலேயே இதை உதறி எறிவதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட காட்சி ஒன்று ரஜினி படத்திலேயே உள்ளது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ஒரு காட்சி.
ரஜினி சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாயால் லபக்கென்று 10 முறை இடைவிடாது பிடித்தால் டொயோட்டோ கார் பரிசு. ஒரு முறை மிஸ் ஆனாலும் சுண்டுவிரலை வெட்டிக்கொள்வேன் என்று நிபந்தனை விதித்து, பந்தயத்துக்குத் தயாரா என்று கேட்கிறார் பூர்ணம் விஸ்வநாதன்.
ரஜினியின் இரு நண்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி பந்தயத்துக்குத் தயார்படுத்துகின்றனர். நான் என்றைக்கும் தோற்றவனில்லை என்ற பூர்ணம் விஸ்வநாதனின் பீடிகைப் பேச்சு ரஜினியை அசைத்துப் பார்க்கிறது.
ஒரு முறை ட்ரையல் பார்த்துவிட்டுப் பந்தயத்துக்குத் தயாராகிறார் ரஜினி. தன்னம்பிக்கையுடன் சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு ஸ்டைலாக வாயால் பிடிக்கிறார். 5 முறைக்குப் பிறகு அவரது தன்னம்பிக்கை காணாமல் போய் கண்ணாமூச்சி காட்டுகிறது. சிறிது தயங்குகிறார். ஒருவழியாக சுதாரித்துக் கொள்கிறார். 8-வது முறையும் சரியாகப் பிடிக்கிறார். இப்போது வேர்த்து விறுவிறுத்துப் போகிறது. 9-வது முறையும் பீதியும் பதற்றமுமாக சிகரெட்டை சரியாகப் பிடித்துவிடுகிறார். இன்னொரு முறை பிடித்தால் அவருக்குப் பந்தயப் பரிசாக கார் நிச்சயம்.
சுண்டுவிரல் வேணுமா, வேணாமா என்று பூர்ணம் விஸ்வநாதன் பீதியைக் கிளப்புகிறார். ரஜினிக்குத் தோற்றுவிடுமோ என்ற பயம் வருகிறது. எனக்கு சுண்டுவிரல் வேணும் சார். நீங்களும் ஜெயிக்கலை. நானும் ஜெயிக்கலை. கீச் (டிரா) என்று ரஜினி சொல்கிறார்.
பூர்ணம் விஸ்வநாதன் பலமாகச் சிரிக்கிறார்.
டிராவிலேயே பந்தயம் முடிகிறது.
இத்தனைக்கும் ரஜினி அதற்கு முன்பாக (நடிக்க வந்த 4 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்) நடித்த பெரும்பாலான படங்களில் சிகரெட் பிடிக்கும் லாவகத்தையும் ரசிகர்களுக்குக் கடத்திவிட்டார். ஸ்டைலாக, கெத்தாக சிகரெட் பிடிப்பது அவருக்குப் புதிதல்ல.
அதே காலகட்டத்தில் நடந்த நிஜ சம்பவம் இது. ஜெமினி ஸ்டுடியோ அருகில் ஒரு இடம் வாங்கினால் எப்படி இருக்கும் என்பதே ரஜினியின் முதல் கனவாக இருந்தது. அவர் நண்பரிடம் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபடி தனது ஆசையைச் சொல்கிறார். அந்த நண்பர் நக்கலடித்துள்ளார். நான் என்றைக்கு அந்த இடத்தை வாங்குகிறேனோ அப்போதுதான் இந்த வாட் 69 மதுபானத்தையும், 555 பிராண்ட் சிகரெட்டையும் தொடுவேன் என்று சபதம் போட்டார். கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 20 மணிநேரம் என நெருப்பாக நடித்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை வாங்கிய பிறகு அதன் காம்பவுண்டில் உட்கார்ந்து கெத்து காட்டி 555 சிகரெட்டைப் பற்றவைத்தார். அந்த இடம்தான் அன்றைய அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸ். இன்றைய ஸ்பிரிங் ஹோட்டல்.
இப்படி வளரும் காலத்திலேயே, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது என்கிற பிம்பம் நிலைபெறும் முன்னரே அதை உதறித் தள்ளுகிற, தூக்கி எறிகிற பக்குவம் ரஜினிக்குத் திரையிலும், நிஜத்திலும் வாய்த்திருக்கிறது. அந்தச் சக்திதான் பின்னாளில் இரும்பாக இருந்தவர்களையும், எளிய இதயங்களையும் காந்தமாக ஈர்த்தது.
இப்படி என்னென்ன பிம்பங்களை ரஜினி உதறியுள்ளார் என்பதை திரை பிம்பம், நிஜ பிம்பம் என இரு விதங்களில் பார்க்கலாம்.
நிஜ பிம்பத்தில் தூக்கி எறிந்தவை:
ரஜினியோடு திரைக்கு வந்த பல நாயகர்கள் இப்போதும் திரையில் மிளிரும் அதே ஒப்பனை, ஹேர் ஸ்டைல் (விக்), உடைகள் உள்ளிட்ட அம்சங்களோடு வெளி நிகழ்ச்சிகளில் உலா வருகின்றனர். ஆனால், ரஜினியின் நடிப்பு திரையுடன் முடிந்துபோகிறது. நிஜ வாழ்க்கையில் நான் ஒரு சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்ற எண்ணத்துடன் ரஜினி நடந்துகொண்டதே இல்லை. நம்மை கேமராக்கள் உற்றுநோக்கவில்லை, லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்கள்தான் கேமராக்களாகப் பார்க்கின்றன என்று நினைத்தார். அவர்களுக்கு உண்மையாக இருக்க விரும்பினார். சட்டையைக் கழட்டிப் போடுவதைப் போல தன் பிம்பங்களைக் கழற்றி எறிந்தார்.
தன் கரியரில் பெரும் பலமாக இருந்த, ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய 'ஹேர் ஸ்டைல்' என்ற அம்சம் குறையும்போது, ரஜினி அதை பெரிய இழப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. தனது ஒரிஜினல் தோற்றத்தோடு அப்படியே வெளி நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கினார்.
மீசையை ட்ரிம் செய்வதோ, தாடியை மழிப்பதோ, டை அடிப்பதோ ரஜினியின் அன்றாட நடவடிக்கையாக இல்லை. நாலு நாள் வளர்ந்த தாடியுடன், ட்ரிம் செய்யப்படாத மீசையுடன், அதிகமாகத் தென்படும் வெள்ளை முடியுடன் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
சராசரி மனிதராக ஒரு வழிப்போக்கனைப் போல, மக்களோடு மக்களாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். நிஜ தோற்றம் குறித்த கவனமும், அக்கறையும், கவலையும், பிரக்ஞையும் ரஜினிக்கு எப்போதும் இருந்ததே இல்லை. இன்றைக்கும் அதை அப்படியே தொடர்கிறார். வெளி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கருப்பு, வெள்ளை மற்றும் சாண்டல் நிற ஜிப்பா உடைக்கு மாறினார். திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருடனும் நட்பு பாராட்டுகிறார். வஞ்சனையில்லாமல், ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் தனக்குப் போட்டியாக இருப்பவர்களையும் புகழ்கிறார்.
இதற்கெல்லாம் ரஜினியின் பதில், ''சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன்; அது பணத்துக்காக. நிஜத்தில் நடிக்க யாரும் பணம் தருவதில்லை. நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை'' என்பதாக இருக்கிறது.
ரஜினி எளிமையாக இருப்பதும், இயல்பாக இருப்பதும்தான் அழகிலும் அழகு என்பதை உணர்ந்துள்ளார். அதையே செயல்படுத்துகிறார். அதனால்தான் அவரது எளிமை கொண்டாடப்படுகிறது. சிம்பிளிசிட்டியின் இலக்கணமாக ரஜினி பார்க்கப்படுகிறார். திரை பிம்பத்தை உதறித் தள்ளி நிஜ பிம்பத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவதில் ரஜினிக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. அதுவே அவரது அப்பழுக்கற்ற மனிதருக்கான அடையாளமாக உள்ளது.
திரை பிம்பத்தில் தூக்கி எறிந்தவை
குற்றச்சாட்டு 1: எல்லா நாயகர்களைப் போல ரஜினியும் தன் படங்களில் எல்லாக் காட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளார். இதனால், மற்றவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை.
உண்மை: இல்லை. ரஜினி அப்படி எல்லாக் காட்சிகளிலும் இருக்க ஆசைப்படவில்லை. அவர் நாயக பிம்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கவும் இல்லை. இதற்கு உதாரணங்களாக 'வள்ளி', 'குசேலன்', 'லிங்கா', 'கபாலி' போன்ற படங்களைச் சொல்லலாம். 'சந்திரமுகி' படமே கூட நீட்டிக்கப்பட்ட கவுரவத் தோற்றம் போலத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ரஜினி இல்லாமலேயே சந்திரமுகி கதை நிகழும். 'மன்னன்', 'படையப்பா', 'மாப்பிள்ளை' படங்களில் நாயகிகளுக்கும், எதிர் நாயகிக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
'நாட்டாமை' தமிழ்ப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பெத்தராயுடு'வில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் அதாவது கவுரவத் தோற்றத்தில் ரஜினி நடித்தார். சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடித்தார். இதிலென்ன பிரமாதம், நண்பர் மோகன் பாபுவுக்காக ரஜினி அப்படி நடித்திருக்கலாம் என்று நாம் சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. ஏனெனில், அதே ஆண்டில் ஜனவரி 12-ம் தேதியில் தமிழ், தெலுங்கில் 'பாட்ஷா' ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி ரஜினியை இந்திய அளவில் உயர்த்தியது. அதே ஆண்டின் ஜூன் மாதம் 15 ஆம் தேதியில்தான் ரஜினி மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த 'பெத்தராயுடு' ரிலீஸ் ஆனது. ரஜினி சாகச நாயக பிம்பத்தைத் தூக்கி எறிந்ததற்கு இதுவே ஒரு சோறு பதம்.
குற்றச்சாட்டு 2: விளிம்பு நிலைக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரஜினி தன்னை சூப்பர் மேன், சூப்பர் ஸ்டாராகவே காட்டிக்கொண்டார். அவர் வளர வளர நாயக பிம்பமே பிரதான இடம் பிடித்தது?
உண்மை: அப்படிச் சொல்ல முடியாது. படங்களின் பட்டியலே அதற்கான பதில். 100-வது படம் என்றாலே அதிநாயக பிம்பமாக, அசகாய சூரனாக, மாவீரனாக, கமர்ஷியல் படங்களைக் கொடுக்கவே நடிகர்கள் விரும்புவர். ஆனால், ரஜினி அந்த விதத்திலும் விதிவிலக்கு. முழு முதல் பக்திப்படமாக 'ஸ்ரீராகவேந்திரர்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் மூலம் ஆன்மிக நாட்டத்தை வெளிப்படுத்தினார். கமர்ஷியல் படம் கொடுத்து கல்லா கட்டுவதில் குறியாக இல்லாமல் 100-வது படத்தில் தன் பரிசோதனை முயற்சியைச் செய்து பார்த்தார்.
குற்றச்சாட்டு 3: அமிதாப் போல ரஜினி வயதுக்குத் தகுந்த கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. இன்னமும் ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
உண்மை: 'அண்ணாமலை', 'நல்லவனுக்கு நல்லவன்' உள்ளிட்ட சில படங்களில் ரஜினி வயதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், நிஜ வயதை ஒத்த கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடிக்கவில்லை என்பது பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்தது. 'கபாலி', 'காலா', 'பேட்ட', 'தர்பார்' படங்களின் மூலம் இந்தக் குற்றச்சாட்டு தவிடுபொடியானது. இனி, இதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது.
நிஜ வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டையும் வெவ்வேறாகப் பிரித்துக்கொண்டு வாழப் பழகிய அனுபவம் ரஜினிக்கு எப்படி வந்தது? அதற்கான மனநிலை எப்படி வாய்த்தது?
அவரின் ஆன்மிகத் தேடலேதான் அதற்கான காரணம். பாபா, ரமண மகரிஷியைப் பின்பற்றும் ரஜினி, தனக்குள் நான் யார்? என்று கேட்டுக்கொண்டார். அதற்கான பதிலையும் கண்டடைந்தார். அதனால்தான் ஈகோ, தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களை விட்டொழித்து ஆன்மிகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்.
ரஜினியே இதற்குப் பலமுறை பதில் சொல்லியுள்ளார்.
''இந்த வாழ்க்கை எனக்கு ஆண்டவன் கொடுத்த பிச்சை. என்னுடைய பிராப்தம். போன ஜென்மத்துப் புண்ணியம்.
சினிமா நடிகரைக் காட்டிலும் ஆன்மிகவாதி என்பதிலேயே எனக்குப் பெருமை. பணம், புகழ், பேர் வேண்டுமா ஆன்மிகம் வேண்டுமா என்று கேட்டால் என்னுடைய தேர்வு ஆன்மிகமாக இருக்கும்'' என்று ரஜினி பேசியுள்ளார். இந்தப் பக்குவம்தான் அவரை வழிநடத்துகிறது.
கடவுளின் கருணையும் ரசிகர்களின் அன்புமே தான் இந்த நிலைக்கு வரக் காரணம் என்று பரிபூரணமாக ரஜினி நம்புகிறார். அதனால்தான், 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே!', 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!' என்று அர்த்தபூர்வமாக உணர்ந்தே சொல்கிறார். வார்த்தை ஜாலங்களுக்காக, ஜோடனைகளுக்காக, வர்ணனைகளுக்காக எதையும் ரஜினி மிகைப்படுத்திச் சொல்வதில்லை. தான் உணர்ந்ததை, தனக்குள் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறார். ரசிகர்கள் மீதான அன்பை அப்படியே வெளிப்படுத்துகிறார். அவரின் ஒவ்வொரு சொல்லிலும் உண்மை நிறைந்து கிடப்பதை உணரும் ரசிகர்கள், அதை மந்திரச் சொல்லாக நினைத்து மயங்கிக் கிடக்கிறார்கள்.
அந்த ரசிகர்களின் பலத்தாலும் ஆரவாரத்தாலும் ரஜினி இன்னும் இன்னும் பிம்பங்களை உதறித் தள்ளிச் செல்வார். எந்த நடிகருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இருப்பதே ரஜினியின் வெற்றி!
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago