'இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.'
சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது.
இதுவரை பார்த்த எந்தப் படங்களின் நினைவுகளையும் மீட்டுக் கொணர்ந்திடாத 'பூவரசம் பீப்பீ' நிச்சயமாக ஒரு மாற்று சினிமா. முழுமையாக என்னை ஈர்த்த ஒரு படம் என்று இதைக்கூற முடியவில்லை. குழந்தைகள் பருவநிலையை எட்டும்பொழுது அவர்கள் காண்கின்ற ஓர் அவல நிகழ்வு அவர்களுள் எத்தகு வேள்வியை பற்றச் செய்கிறது? அதன் விளைவாக இவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? இதுதான் படத்தின் மையக் கதை.
கதாநாயகன் வில்லன்களை அடித்துத் துவைக்கும் கதைக்களங்கள், நாம் சினிமா பார்க்கிறோம் என்ற நிலைபாட்டை மனதில் ஆழமாக விதைக்கிறது. அதனால் லாஜிக் சிதைவுகள் நிகழ்ந்தாலும் இது சினிமா தானே என்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு போவதுண்டு. குழந்தை நிலையிலிருந்து பதின்ம பருவ நிலைக்கு வரும் இம்மூன்று நாயகர்களின் விடுமுறை நாட்களில் பயணிக்கும் இக்கதைக்களம் நம்மை நாம் கடந்து வந்த பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
படத்தில் வரும் நாயகர்களாகிய கவுரவ் காளை, பிரவீன், வசந்த் ஆகியோர் யதார்த்தமாக உணர்சிகளை பதிவு செய்துள்ளதால் இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களோடு நாமும் நமது பால்ய பருவத்திற்கு பயணிக்கிறோம். அவ்வயதில் இவர்களைப் போலவா நாம் நடந்து கொண்டோம்? இத்தனை பக்குவம் அவ்வயதில் நமக்கு இருந்ததா? இச்சை, இறப்பு இதைப் பற்றிய தெளிவு அவ்வயதில் இந்தளவிற்கு இருந்ததா? என்றெல்லாம் நினைத்துப் பார்க்கையில் படத்தோடு முரண் கொள்கிறோம். இம்முரண் ஒவ்வொரு தனி மனிதன் பார்வைக்கு ஏற்றவாறு வேறுபடுவதுண்டு.
ஒவ்வொரு இயக்குனரும் தனது முதல் படத்தில் ஒரு சறுக்கி விழாத கதைக் களத்தையே கையாள நினைக்கின்றனர். இயக்குனர் ஷங்கர் ஒரு நேர்காணலின்போது "நான் ஓர் ஆழமான கதையை வடிவமைத்தேன். ஆனால், நான் சந்தித்த ஒரு தயாரிப்பாளரும் அதை ஏற்க தயாராக இல்லை. மக்கள் விரும்பும் ஒரு ஆன்டி ஹீரோ கதாப்பாத்திரம் அமையுங்கள் படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளர் கூறினார். அந்த கோபத்தில் அமைத்த கதை தான் 'ஜென்டில்மேன்'.
ஜென்டில்மேன் கொடுத்த கமர்ஷியல் வெற்றி 'ஷங்கர் என்றால் பிரம்மாண்டம்' என்ற பிம்பத்தை அளித்தது. நான் முதலில் நினைத்த யதார்த்தம் தழுவாத அழுத்தமான சினிமாவை என்னால் அளிக்கவே முடியாமல் போனது" என்று கூறினார்.
இயக்குனர் ஷங்கரைப் போல் முதல் படத்தில் ஆழம் மிகுந்த கதைக்களத்தோடு வரும் ஒவ்வொரு இயக்குனரும் சந்திக்கும் சவால் தான் இது. வரும்போது ஒவ்வொருவரும் திரைத் துறையில் மாற்றம் நிகழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் சந்திக்கின்ற ஏமாற்றம், காட்டம் பலரின் பாதையை மாற்றி அமைக்கிறது. இத்தகு சூழல் தமிழ் சினிமாவில் எதார்த்தமாக நிகழும் போது, இந்த சூழலைக் கண்டு அஞ்சாமல் ஒரு பெண் இயக்குனர் பேராண்மை நிலையை உணர்த்தும் கதையை முதற் படத்தில் கையாண்டதற்கு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டும்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை மாற்று சினிமா வேண்டும் மாற்று சினிமா வேண்டும் என்று எத்தனையோ முறை கூக்குரலிடுகிறோம். ஆனால் அப்படி பாதையை மாற்றும் மாற்று சினிமா வருகையில் எப்படிப்பட்ட வரவேற்பினை தருகிறோம்?
இதே போலத் தான் சில வருடங்களுக்கு முன் 'என் படம் கமர்சியல் ரீதியாகவும் வெற்றிபெறும் என எதிர்ப்பார்த்தேன்' என்று ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறியிருந்தார்.
'ஆரண்ய காண்டம்' பார்த்தவர்கள் எல்லாம் மெச்சிக் கொண்டனர். 'சமகால சினிமா நேசிகள் பலரின் விருட்சமாக குமாரராஜா' திகழ்கிறார் என்று. பார்த்தவர்கள், விமர்சகர்கள் என்று அனைவராலும் பாராட்டப் படம் இது. ஆனால் இப்படம் திரையரங்கில் ஓடியதென்னவோ ஒரு வாரம் தான்.
பல வருடங்கள் கழித்து இப்போது 'குணா' பற்றியும், 'அன்பே சிவம்' பற்றியும், 'மகாநதி' பற்றியும் பேசுகிறோம். ஆனால் இப்படங்கள் அதிகமாக ஓடியது தொலைகாட்சியில்தான்.
'சேது'விற்கு கிடைத்த வெற்றி 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' வருவதற்கு விதை என்று இயக்குனர் அமீர் கூறுகிறார். உண்மையில் 'சேது'விற்கு முதலில் கிடைத்த வரவேற்பென்ன? முதல் ஒருவாரத்திற்கு ஓடாமல் இருந்த 'சேது' பத்திரிகை, தொலைகாட்சி விமர்சனங்களில் கிடைத்த பாராட்டினால் இரண்டாம் வாரத்தில் அதிக திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு சில்வர் ஜூப்ளி வெற்றி கண்டது.
இது அப்போதைய நிலை. இப்போது நிலவும் சூழல் என்ன? ஒரு படம் நன்றாக இருக்கிறது என்ற செய்தி வெளிவந்து அப்படத்திற்கு போகலாம் என்று நினைத்தால் அடுத்த வாரத்திற்குள் திரையரங்கிலிருந்து வெளியேற்றி விடுகின்றனர். தன் படம் வெளியாவதற்கு முந்தைய நாள், வெளியாகவிருக்கும் ஒரு திரையரங்கிற்குச் சென்று அன்று இரவுக் காட்சியில் ஒரு பெங்காலிப் படத்தை பார்த்து அப்படத்தால் தாக்கம் அடைந்து 'இந்த படத்தை தூக்கி என் படம் வெளியாக வேண்டுமா? வேண்டாம். என் படம் இங்கே வெளிவர வேண்டாம். இப்படம் இங்கேயே வெகு நாட்கள் ஓடி வெள்ளிவிழா காணட்டும் என்று கூறி, திரையிடப்பட்ட அந்த பெங்காலி படத்தின் இயக்குனரை சந்தித்து உங்கள் படம் பார்த்தேன். என்னை ரொம்ப ஈர்த்தது. என் படத்தை நான் விலக்கிக் கொள்கிறேன், உங்களை போன்ற கலைஞர்கள் நமது நாட்டிற்கு தேவை' என்று பதேர் பாஞ்சாலி பார்த்து இயக்குனர் சத்யஜித்ரே'விடம் இதைக் கூறியவர் தான் எஸ்.எஸ்.வாசன்.
இன்றைய சூழலில் என் படத்தை விலக்கிக் கொண்டு உங்கள் படம் ஓடட்டும் என்று சொல்லக் கூடிய ஒரு படைப்பாளியாவது காணமுடிகிறதா? எங்கே ஒரு படம் ஓடவில்லை என்றால், கடைசி நிமிடத்தில் ஒரு படம் வெளியாகவில்லை என்றால் உடனே தன் படத்தை வெளியிடலாம் என்றே இன்று பல தயாரிப்பாளர் கருதுகின்றனர்.
திரையரங்க உரிமையாளர்களும் டீ.டி.எச்'சில் படம் வெளியானால் திரையரங்கங்கள் சரிந்து விடும். வர்த்தகம் சிதைந்து விடும் என்பதை மட்டும் நினைவில் கொள்கின்றனரே அன்றி திரைக்கலையை வாழவைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. திரையரங்கில் வசதி அமைக்கின்றனரோ இல்லையோ விலையை மட்டும் நூறு-நூற்றிருபது ரூபாய்க்கு ஏற்றி வைப்பதனால் திரையரங்கிற்கு எதற்கு செல்ல வேண்டும், தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம் பலருக்கு வருகின்றது.
ஆன்லைனில் டாரன்ட்டில் பிரிண்ட் வெளியாகிய அன்றே டவுன்லோட் செய்து பார்த்து விட்டு ஆசம்! ஆசம்! ச்சை இந்த மாதிரி படங்கள் ஓடாமல் போய்டுச்சே என்று நீலிக்கண்ணீரை சமூக வலைத்தளங்களில் வடிக்கும் சினிமா நேசிகள் சிந்தும் கண்ணீர் படத்திற்கு எந்த அளவிற்கு படைப்பாளியின் வளர்ச்சிக்கு உதவப்போகிறது.
கடைசியில் வித்தியாச சிந்தனையில், சாதிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தவர்களுக்கு அவார்ட் மட்டும் தான் ஆறுதலா? தேசிய விருது வென்ற எத்தனையோ தமிழ் படங்கள் இன்னும் தமிழர்களாலேயே அடையாளம் கொள்ளப்படாமல் தொலைந்துள்ளது.
இப்படியே போனால் நமக்கு வெறும் 'மான் கராத்தே' போன்ற பொருளற்ற மொக்கை மசாலாக்கள் தான் மிஞ்சும்.
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago