நாசகார வேலைகளை ஒரு மளிகைக் கடைக்காரரின் மகன் தடுத்தால், அதற்கு மூளையாகச் செயல்பட்டவர் பழைய நண்பன் எனத் தெரிந்து மோதினால் அதுவே 'எனிமி'.
சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார் ராமலிங்கம் (தம்பி ராமையா). இவரது மகன் சோழன் (விஷால்) அப்பாவுடன் இருந்து வணிக நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். பல தமிழ்க் குடும்பங்கள் அங்கு ஒருங்கிணைப்புடன் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சோழனுக்குத் தெரிந்த 11 பேர் சிலிண்டர் கேஸ் கசிவால் ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்து விடுகின்றனர். ஆனால், அது விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலை, தீவிரவாத சதிச்செயல் என்று சோழனுக்குத் தெரியவருகிறது. 11 பேரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் ஆபத்து ஏற்படுவதை அறிந்த சோழன் அவரைக் காப்பாற்ற முயல்கிறார். ஆனால், அவரே பிரச்சினையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
அந்தப் பிரச்சினையிலிருந்து விஷால் தப்பித்தாரா, வெளியுறவுத் துறை அமைச்சரைக் கொல்லத் திட்டம் தீட்டியது யார், அதன் பின்னணி என்ன, விஷாலின் பழைய நண்பன் ஏன் இந்த விவகாரத்துக்குள் வருகிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
'அரிமா நம்பி', 'இருமுகன்', 'நோட்டா' படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கரின் நான்காவது படம் 'எனிமி'. ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ஆனந்த் ஷங்கரும், விஷாலும் இணைந்து சொல்லி அடித்திருக்கிறார்கள்.
'இரும்புத்திரை'க்குப் பிறகு கச்சிதமான திரைக்கதை கொண்ட தரமான திரைப்படத்தில் விஷால் நடித்துள்ளார். அப்பாவின் கட்டளைக்குப் பணிவது, பிரச்சினையில் இருப்பது யாராக இருந்தாலும் தன்னால் முடிந்த உதவியைப் பிரதிபலன் பாராமல் செய்வது, பிரச்சினையின் வீரியம் கண்டு பொங்கி எழுவது என நாயக அம்சத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களில் சம்பந்தமே இல்லாமல் நடிப்பதற்கு பதில் இதுபோன்ற கான்செப்ட் சினிமாக்களில் நடிப்பது விஷாலுக்கு நலம் பயக்கும். பலனும் கிடைக்கும். தொடர்ந்து இதே பாதையில் அவர் நம்பிக்கையுடன் பயணிக்கலாம்.
விஷாலுக்கு இணையான, இம்மி அளவும் குறையாத பலத்துடன் ஆர்யா பின்னி எடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் சரிக்கு சமமாகப் போட்டி போட்டு இருவரும் நடித்துள்ளனர். எதிர் நாயகன் என்றாலும் குன்றாமல் குறையாமல் மிகை இல்லாமல் இயல்பாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் ஆர்யா.
மிர்ணாளினி ரவிக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. திரைக்கதைக்கு அவர் தேவையும் படவில்லை. விஷாலுக்குப் பொருத்தமான ஜோடியாகவும் இல்லை. சம்பிரதாய நாயகியாக சில காட்சிகள், ஒரு பாடல் என்று வந்துபோகிறார். கருணாகரன் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நன்றாகப் பங்களித்துள்ளார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. இந்தப் படத்திலும் தம்பி ராமையா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மாளவிகா அவினாஷ், ஜார்ஜ் மரியான், மாரிமுத்து, மம்தா மோகன்தாஸ், ஜான் விஜய் ஆகியோர் கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு தொழில்நுட்ப ரீதியில் படத்தை வேற லெவலுக்குக் கொண்டுபோகிறது. தமன் இசையில் அறிமுகப் பாடலைத் தவிர மற்ற இரு பாடல்களைக் கத்தரித்திருக்கலாம். அவை தேவையில்லாத ஆணிகள். சாம் சி.எஸ். பின்னணி இசை கதையோட்டத்துடன் சரியாகப் பொருந்திப் போகிறது. ரேமண்டின் எடிட்டிங்கில் நேர்த்தி பளிச்சிடுகிறது.
''வலியைப் பழகிக்கிட்டாதான் ஜெயிக்க முடியும்... அவனோட எதிரிகளுக்கு வலியைத் திருப்பிக் கொடுக்க முடியும்'', ''தோத்தா பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சா ஜெயிக்குற எண்ணம் குறைஞ்சிடும்'' போன்ற ஷான் கருப்புசாமியின் வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.
படத்தின் மிக பலமான அம்சம் திரைக்கதைதான். ஆனந்த் ஷங்கர், ஷான் கருப்புசாமி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய மூவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. இரு குழந்தைகள் வளரும் விதம், சூதாட்டத்துக்கு அடிமையான மாமா, போலீஸ் பயிற்சியை இறுதிவரை கைவிடாத இளைஞன், பாஸ்போர்ட்டுகளை மீட்டுக் கொடுக்கும் விதம், அந்நிய நாட்டு சதி, ஆர்யாவின் மனைவி குறித்த பின்னணி என ஸ்கெட்ச் போட்டு திரைக்கதை எழுதி ரசிக்க வைத்துள்ளனர். படத்துக்குத் தேவையில்லாத அம்சம் எதுவும் இல்லாததே ஆறுதல்.
திடீரென்று ராஜீவ் அந்தத் தவறைச் செய்ய என்ன காரணம் என்பது சொல்லப்பட்டாலும் அது மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் 'எனிமி' தரமான சினிமாவாக ஈர்க்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago