கணவனையும், கம்பெனியையும் மீட்கப் போராடும் தங்கையை அவருக்கே தெரியாமல் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றினால் அதுவே 'அண்ணாத்த'.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை உள்ளிட்ட சுத்துப்பட்டு கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் காளையன் (ரஜினிகாந்த்). அவரின் ஒரே தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). அவர் பிறக்கும்போதே அம்மா இறந்துவிடுவதால் அண்ணனாக, தாயாக, எல்லாமுமாக இருந்து உயிருக்கு உயிராக வளர்க்கிறார் காளையன். அடிக்கடி சண்டை போட்டு வம்பு வளர்க்கும் தன் எதிரி பிரகாஷ்ராஜ் மனம் திருந்தி வந்து தம்பிக்கு சம்பந்தம் பேச, தங்கையை மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதிக்கிறார் காளையன். ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைக்க, தங்க மீனாட்சி திடீரென்று காணாமல் போகிறார். அண்ணன் காளையன் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்.
தங்க மீனாட்சி என்ன ஆனார், அவருக்கு வந்த பிரச்சினை என்ன, ஆபத்துகளிலிருந்து எப்படி காளையன் தங்கையைக் காப்பாற்ற முடிந்தது, உயிருக்கும் மேலான தங்கையின் துன்பத்துக்கு என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
அண்ணன் - தங்கை பாசத்தை வைத்து முழு நீள சென்டிமென்ட் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சிவா. 'வேதாளம்' படத்திலேயே இந்தப் பாசத்தை அவர் பந்தி வைத்துப் பரிமாறிவிட்டார் என்பதால் புதிதாக எதையும் கொடுக்கவில்லை. (அவர் மட்டும் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்?!.)
ரஜினியும் அண்ணனுக்கே உரிய அளவு கடந்த பாசத்தைப் பல படங்களில் வெளிப்படுத்தி கண்ணீரில் கசிந்துருக வைத்துள்ளார். 'முள்ளும் மலரும்', 'பாயும் புலி', 'தர்மயுத்தம்', 'நான் மகான் அல்ல', 'பாண்டியன்' (அக்கா பாசம்) எனப் பல படங்களைச் சொல்லிவிடலாம். ஆனால், இந்தப் படம் எந்த அளவில் வேறுபட்டு நிற்கிறது என்று பார்த்தால் தங்கைக்கு அருகிலிருந்தாலும் அவருக்கே தெரியாமல் துயர் துடைப்பது. ஆனால், அந்த வைப்ரேஷனை தங்கை உணர்ந்து, உங்களை அடிச்சது யாருடா, தயவு செய்து சொல்லுங்கடா, என் அண்ணன்தான் அடிச்சாரா என்று அடிபட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் அடியாட்களிடம் கேட்பது என்ற அளவில் வேற லெவல் எமோஷனைக் கூட்டியிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் ஒரு எல்லையா இல்லையா நியாயமாரே?
ரஜினியின் உற்சாகமும், பேச்சும் இப்போதும் அசரடிக்கிறது. நடனம், ஆக்ஷன் காட்சிகளில் பரபரக்கும்போது மட்டும் கொஞ்சம் சிரமப்படுகிறார். முதிர்ச்சியும், களைப்பும் அப்பட்டமாகத் தெரிகிறது. தங்கை மீதான பாசத்தையும், சொந்தங்கள் மீதான பற்றையும், ஊர் மக்கள் மீதான மரியாதையையும், நயன்தாரா மீதான காதலையும் வெளிப்படுத்தும்போது எனர்ஜியில் சளைக்காத மனிதராகத் தெரிகிறார். ஒவ்வொரு காரணத்தையும், ஒப்பீட்டையும் சொல்லி வசனம் பேசுவது அரதப் பழசான ஸ்டைல்தான் என்றாலும் ரஜினி பேசும் விதம் அழகு. தங்கை என்பவர் உறவுக்கும் மேலான உயிர் என்று பேசும் ரஜினி, தங்கையை உறவினர்கள் தூற்றும்போதும், மோசமான முடிவை நோக்கித் தள்ளும்போதும் என் தங்கச்சி என்று ரஜினி அளவாக நிறுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் கண்ணைப் பாசம் மறைத்துவிட்டதா? அந்த இடத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சரிவைச் சந்திக்கிறது.
ரஜினியைத் தாண்டி படத்தில் ஸ்கோர் செய்வது கீர்த்தி சுரேஷ்தான். கம்பெனி சிஇஓ ஆனாலும் அப்பாவித் தங்கையாக, கண்ணீரும் கம்பலையுமாக பாத்திர வடிவமைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். பாவப்பட்ட பெண் என்கிற பிம்பத்தை வரவழைத்து பரிதாபத்தை அள்ளிச் செல்கிறார். இவ்ளோ பிரச்சினை, கஷ்டங்களா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு எழும் லாஜிக் பிரச்சினைகளை நடிப்பால் மறக்கடிகிறார்.
நயன்தாராவுக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம்தான். அது உறுதுணைக் கதாபாத்திரமாகவே அமைந்து விடுவதுதான் சோகம். பிரகாஷ்ராஜ் கௌரவத்துக்காக நாலே காட்சிகளில் வந்து செல்கிறார். சூரி, மீனா, குஷ்பு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சதீஷ், சத்யன், குலப்புள்ளி லீலா, வேல ராமமூர்த்தி, பிறைசூடன், ரெடின் கிங்ஸ்லி, அர்ஜய், பாலா, கபாலி விஸ்வநாத், ஜார்ஜ் மரியான் ஆகிய பலர் படத்தில் கூட்டத்தில் ஒருவராகவே வந்துபோகிறார்கள். ஒன்லைனர் காமெடியைக் கடந்து ஒரு வார்த்தையில் காமெடி செய்வது எப்படி என்கிற வித்தையை சூரியை வைத்துப் பரிசோதித்திருக்கிறார்கள். அது ஓரளவு எடுபடுகிறது. அபிமன்யு சிங், ஜெகபதி பாபு என வில்லன்களும் சிவாவின் பழைய படங்களான 'சிறுத்தை', 'வேதாளம்' படங்களை நினைவூட்டுகிறார்கள்.
''என்னை வியர்வை சிந்த வெச்சிருக்காங்க, ரத்தம் சிந்த வெச்சிருக்காங்க, கண்ணீர் சிந்த வெச்சது நீதான். உன்னைக் கொல்றது என் கடமை இல்லை, உரிமை'' என்று கர்ஜிக்கிறார் ஜெகபதி பாபு. நமக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிவா மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நடுநடுங்க, கிடுகிடுங்க, வளைஞ்சு, நெளிஞ்சு, ஒளிஞ்சு என்று இஷ்டத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். கஷ்டப்படுவதென்னவோ நாம்தான்.
''நம்மகிட்ட அண்ணாத்த மாட்டலை, நாமதான் அவர்கிட்ட மாட்டிக்கிட்டோம்'', ''நான் ஒரு எதிர்பார்ப்பு வெச்சிருக்கேன்னு என் மேல இருக்கிற மரியாதையில நீ மறைச்சிட்ட'', ''ஒரு முறை பாசம் வெச்சா வெச்சதுதான், வெறுக்க முடியாது'', ''நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்'' என்று படத்தில் பயன்படுத்தியுள்ள வசனங்கள் அந்தச் சூழலைத் தாண்டி மீம் மெட்டீரியலாகவும் பயன்படும் அளவுக்கு இருவிதப் பரிமாணங்களில் உள்ளன. இதை சிவா தெரிந்துதான் செய்தாரா? யாமொன்றும் அறியோம்.
வெற்றி பழனிச்சாமி திருவிழாக் கூட்டத்தை தன் கேமராவில் அடக்கியுள்ளார். இமானின் இசையில் அண்ணாத்த, சார சாரக் காற்றே, வா சாமி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில்தான் இரைச்சலைக் கூட்டி இம்சிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தொழில்நுட்ப அம்சங்கள் போதுமான அளவுக்கு பலம் அளிக்கவில்லை.
கொல்கத்தாவுக்கு ரஜினி சென்று ஒரே பிரச்சினையில் தலைநகரே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்வதாகக் காட்டுவதெல்லாம் காதில் பூந்தோட்டத்தைச் சுற்றும் வேலை. எந்த லாஜிக்கும் இல்லாமல் ரஜினி மேஜிக் போதும், ரசிகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று சிவா நம்ப வைக்கப் போராடியிருக்கிறார். அந்தப் போராட்டத்தில் காயங்கள் ரசிகர்களுக்கே கிடைத்துள்ளன.
படத்தின் முக்கியமான காட்சியில் உண்மையைக் காட்டிலும் நியாயம் பெருசு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நியாயத்தை இயக்குநர் செய்யவில்லை என்பதுதான் நகை முரண். 'சிறுத்தை', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்' என்று பல படங்களின் கலவையாக அதிலுள்ள முக்கியமான அம்சங்களின் மறு உருவாக்கமாக 'அண்ணாத்த' இருப்பதால் இது இன்னொரு ரீகிரியேஷன் சினிமாவாக மட்டுமே மிஞ்சுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago